
அதிகாலை ஒரு ஐந்து மணி இருக்கும். அதென்ன ஐந்து மணியை அதிகாலை என்பது?! எங்கிறீர்களா? சரிதான்…! இப்ப சிலருக்கு ‘எர்லிமார்னிங் என்பதே எட்டு மணி!’ என்னும்போது அதிகாலை மூணோ.. நாலோ அல்ல…, ஐந்துதான்.! சரிதானே?!
ஃபெட்டை விட்டு எழுந்த எழிலரசிக்குத் தலை சுற்றல் போலிருக்க.. இடுப்பு தொடங்கி உடல் எங்கும் ‘வலி’ தொடர் வண்டி ஓட்டமாய் பரவி வியாபிக்க... கணவன் கணேஷிடம் சொன்னாள்.
‘தலை சுத்துது..! கொஞ்சம் குடிக்கக் காபியோ, டீயோ போட்டுக் கொடுக்கறீங்களா?’ என்றாள் கெஞ்சலாக.
அவள் அசந்து படுத்தே பார்த்திராத கணேஷ் கொஞ்சம் பதறித்தான் போனான். காப்பி ரெடி பண்ணிக் கொடுத்துவிட்டு,
‘வா…டாக்டர்ட்டபோயிட்டுவரலாம்!.’, என்று சொல்லி, லுங்கியிலிருந்து அவசர அவசரமாக பேண்ட் சர்ட் அணிந்து புறப்படத்தயாரானான்.
அவளோ.. "வேண்டாங்க.. கொஞ்சம் இஞ்சி சாறு குடிச்சா எல்லாம் சரியாயிடும் இது, பித்தம்னு நினைக்கிறேன்!" என்றாள் டாக்டரிடம் போவதைத் தவிர்க்க!