
“75,000!” அவள் எண்ணி முடித்தாள். எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள்.
“திருப்தியா” ஏட்டு தங்கராசு கொஞ்சம் கேலி கொஞ்சம் வருத்தம் நிறைந்த குரலில் கேட்டார்.
“மோகன் ஓங்களுக்கும் புள்ளதான்” கலையரசி நச்சென்று பதிலுக்குக் கொடுத்தாள். ”காலேஜ் போற பையன் ஆறு மாசமா ஐஃபோன் கேட்கறான், புது வருஷம் வேற நாளைக்கு பொறக்குது. வாங்கித் தர இத விட நல்ல சமயம் இருக்க முடியுமா, சொல்லுங்க?”
“சரி சரி, சாயந்தரம் அவனோட கடைக்குப் போய் வாங்கிட்டு வரலாம்.”
கலை சட்டென்று கனிவுடன் “கல்யாணம் ஆகி 23 வருஷத்துல மொத தடவயா குடும்பத்துக்காக ஒங்க வெத்து கவுரவத்தத் தள்ளி வெச்சுருக்கீங்க.”
“வெத்து கவுரவமா!” கசப்புடன் முணுமுணுத்தபடி நகர்ந்தார்.
தங்கராசு மாதம் 30,000 சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண கான்ஸ்டபிள். தொழில் மீதும் தன் மீதும் அபார பெருமை கொண்டவர். நேர்மைக்கு மதிப்பு இல்லை என்பதை உணராத (ஒப்புக் கொள்ளாத?) ஒரு ஜென்மம். லஞ்சம் வாங்கியதே இல்லை. கலை, மோகன் இருவரிடமும் அவர் பல முறை அதைப் பற்றிப் பீற்றிக் கொண்டிருக்கிறார்.
“யோவ் தங்கராசு, ஏன்யா இப்படி இருக்க? ஒரு ஹெட் கான்ஸ்டபிளாக் கூட ஆக்க விட மாட்டேங்கறியே” என்று குறைந்தது 5 இன்ஸ்பெக்டர்கள் நொந்து போயிருக்கிறார்கள்.
சில மாதங்களாக இந்த நிலைமை மாறியிருந்தது.
“அப்பா, எனக்கு ஐஃபோன் வேணும். என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வெச்சுருக்காங்க...” என்று இந்த வருடம் காலேஜ் சேர்ந்திருந்த மோகன் ஆரம்பித்தபோது அவனுக்கு முழு ஆதரவு தந்தவள் அம்மா கலையரசி.
“ஏங்க, ஒவ்வொருத்தரும் காலேஜ் போகுற மகனுக்கு என்னென்னவோ வாங்கித் தராங்க. மோகன் நமக்கு ஒரே பையன். படிப்புலையும் கெட்டி. கண்டிப்பா ஐஃபோன் வாங்கிக் குடுக்கணும்.”
“கலை, ஓனக்குத் தெரியும் நா எவ்வளவு சம்பளம் வாங்கறேன்னு..’
“ஒங்களப் பணம் பண்ண வேண்டாம்னு யாரு தடுக்கறாங்க? யாரும் பண்ணாததையா நீங்க பண்ணப் போறீங்க?” என்று அவள் சொன்ன போது வழக்கம் போல அவர் அதை சட்டை செய்யவில்லை.
ஆனால் மோகன் திரும்பத் திரும்ப ஐஃபோன் வேண்டுமென்று வற்புறுத்தியபோது அவரால் தப்பிக்க முடியவில்லை.
'வாங்க' ஆரம்பித்துவிட்டார். அப்படி ஆறு மாதத்தில் சேர்ந்ததுதான் இந்த 75,000.
“வினோத், எந்த லேட். வா வா, படம் ஆரம்பிக்கப் போகுது.” நண்பர்கள் – கல்லூரி மாணவர்கள் – வரவேற்றார்கள்.
பைக்கிலிருந்து இறங்கிய வினோத் முகத்தில் கடுப்பு. “ஆர். ஸி. புக் செக்கிங்ல மாட்டிக்கிட்டேன். 500 ரூபா அழுதேன். நல்ல வேளை கான்ஸ்டபிள்தான். இன்ஸ்பெக்டரா இருந்திருந்தா டபிள் இல்ல ட்ரிபிள் போயிருக்கும். அவன் சட்டைல 'தங்கராசுன்னு' பேரு. கழிசடை. எப்பதான் நாடு உருப்படுமோ!”
அந்த இளைஞர் கூட்டத்தில் ஒரு முகம் மட்டும் மாறியதை யாரும் கவனிக்கவில்லை.
“மோகன், வாப்பா. பூர்விகா மொபைல் போகலாம். அப்பா ஒரு வழியா பணம் சேர்த்துட்டாறு.” கலை சொன்னாள்.
மோகன் இருவரையும் பார்த்தான். “நா ஒரு ரெஸல்யூஷன் எடுத்துட்டேன். படிச்சு மூடுச்சு வேலை கெடைச்சதும் என் சொந்த சம்பளத்துலதான் ஐஃபோன் வாங்குவேன். ஐஃபோன் மட்டுமில்ல, வேற எந்த காஸ்ட்லி சாமானும் அப்ப தான் வாங்குவேன்.”
“பாத்தீங்களா, மோகன் மனசுல எவ்ளோ கோபம் இருந்த இப்படிப் பேசுவான். எல்லாம் உங்களாலதான்.”
“டேய்,” அவர் பேசினார் “ஏண்டா இந்த திடீர் முடிவு? நேத்து மட்டும் வேணும்னு சொல்லிக்கிட்டே இருந்தியே. பரவாயில்ல, என்ன மன்னிச்சிடு. கடைக்குப் போலாம்.”
“ஐஃபோன் இருந்தாத்தான் எனக்கு மரியாதைன்னா அந்த மரியாதை எனக்கு வேண்டாம்பா...” மோகன் குரலில் தெளிவு இருந்தது. “ஒன்னோட நேர்மை குடுக்கற பெருமைக்கு முன்னால ஐஃபோன் எனக்குத் தரப்போற ஜம்பம் கால் தூசிதான்.”