
-சியாமளா ராஜசேகர்
"ஆட்டோ! வேளச்சேரி வரியாப்பா?" கைக்கொள்ளா பொருள்களுடன் வசந்தாவும், ராகவனும் கேட்க, மறுப்பேதும் சொல்லாமல் மூர்த்தி, கிளம்பத் தயாரானான்.
"எப்படியோ கடனை, உடனை வாங்கி நம்ம பேத்திக்குச் செய்ய வேண்டிய எல்லாத்தையும் வாங்கியாச்சு!" நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் ராகவன்.
"ஆமாங்க! நம்ம பொண்ணு மாலா, ரொம்பச் சந்தோஷப்படுவா. ஏம்ப்பா தகுதிக்கு மீறிச் செலவு பண்றீங்கன்னு செல்லமா கோவிச்சுப்பா!"
"போடி! நமக்கிருக்கறது ஒரே பொண்ணு.
நம்ம மாப்பிள்ளை வீட்டிலயும் நாம நல்லா செய்வோம்னு எதிர்பார்ப்பாங்க. நாளைக்கு நம்ம பேத்திக்கு பேர் வைக்கிற ஃபங்ஷன் சிறப்பா நடக்கணும்...”
ஆட்டோ வேளச்சேரியை நெருங்கியது.
"பஸ் ஸ்டாண்டை ஒட்டி ரைட்ல திரும்பி நேரா போப்பா. இதோ பச்சை கலர் கேட். இங்கதான்ப்பா நிறுத்திக்க!''
ஆட்டோ நிற்க, வசந்தாவும், ராகவனும் இறங்கினர். மீட்டரைப் பார்த்து பணத்தைப் பெற்றுக்கொண்ட மூர்த்தி வண்டியைத் திருப்பினான்.
அவன் மனம் முழுக்க வாயும் வயிறுமாக இருக்கும் அவன் மனைவி ராதாவே இருந்தாள்.
திருமணமாகி பதினைந்து வருஷம் கழித்து ராதா, கர்ப்பமானதும் மூர்த்திக்குத் தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியில் ஆனந்தக்கூத்தாடினான். அதிலும் கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பார்த்த டாக்டர், இரட்டைக் குழந்தை என்றதும் பூரித்துவிட்டான்.
''இத்தனை நாள் நாம் ஒன்றுமே சேர்த்து வைக்கலை. இனிமேல் கஷ்டப்பட்டு உழைச்சு நம்ம பிள்ளைங்களுக்குச் சேர்க்கணும் ராதா..." என்று கனவு கண்டான்.
ஒன்பதாம் மாதம் செக்கப்புக்கு போனபோது டாக்டர், மூர்த்தியை அழைத்து, "டெலிவரி கொஞ்சம் சிக்கலா இருக்கலாம். அதனால் ஏதாவது பிரைவேட் ஹாஸ்பிடல் போறது பெட்டர்!" என்றார்.
தனியார் ஆஸ்பத்திரின்னா செலவு அதிகமாகுமே! அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது?' மூர்த்தியின் வாடிய முகத்தைக் கண்ட ராதா, "கவலைப்படாதீங்க! நாம் கும்பிடற சாமி நம்மளைக் கைவிட மாட்டார்!" என்று ஆறுதல் கூறினாள்.
ஒரு வாரம் உருண்டோடிவிட்டது. ராதா மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். "என்னங்க...! எனக்கு வயிறெல்லாம் ரொம்பப் பாரமா இருக்கு. அசைவு கூட அவ்வளவா தெரியலை!"
''உடனே கிளம்பும்மா. டாக்டரம்மாகிட்ட போய் காட்டிட்டு வந்துடலாம்"
பரபரத்தான் மூர்த்தி.
சுலைமான் நர்ஸிங்ஹோம்.
''சார்! குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் சற்றுக் குறைவாகப் போகிறது. சிசேரியன் பண்ணிட வேண்டியதுதான்! இதில் ஒரு கையெழுத்துப் போடுங்க" என்று ஒரு ஃபார்மை நீட்டினார்.
கைநடுங்கியபடியே கையெழுத்து போட்டான் மூர்த்தி. டாக்டர் சென்ற சிறிது நேரத்தில் நர்ஸ் வந்து.."நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள ரிசப்ஷன்ல பதினைந்தாயிரம் ரூபாய் கட்டிடுங்க..." என்றாள்.
ராதா, கவலையோடு மூர்த்தியை ஏறிட்டாள்.
"கவலைப்படாதேம்மா! நான் எப்படியும் பணத்தைத் தயார் பண்ணிடுவேன். நான் சவாரிக்குப் போய்ட்டு வரேன். நீ தூங்கு!'' என்று கிளம்பியவன்தான்...
இதோ... வேளச்சேரி சவாரி முடித்துத் திரும்பினான். யதேச்சையாகப் பின்னால் திரும்பியபோது சீட்டில் ஒரு கவர் இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டுப் பார்த்தான். மூன்று பவுன் தங்கச் சங்கிலி!
"அடடா! கீழே இறங்குகிற அவசரத்தில் விட்டுட்டுப் போயிட்டாங்களே!" வண்டியைத் திருப்பினான்.
ராகவனும், வசந்தாவும் அங்கே 'வர்ற வழியில விட்டுட்டோமோ, இல்லை கடையிலேயே மிஸ் பண்ணிட்டோமோ' என்று தவித்துக்கொண்டிருக்க...
"சார்! சார்!”
நிமிர்ந்து பார்த்த ராகவன், வாசலில் மூர்த்தியைக் கண்டதும், “என்னப்பா விஷயம்?" என்றார்.
"சார்! இதை என் வண்டியிலேயே விட்டுட்டு வந்துட்டீங்களே!"
வசந்தாவுக்கு விழி ஓரத்தில் ஈரம் கசிந்தது. தம்பி, ''நீங்க நல்லா இருக்கணும், உங்க பிள்ளை குட்டிங்க நல்லா இருக்கணும்; நாங்க கடன் வாங்கி கஷ்டப்பட்டு வாங்கினதைத் தொலைச்சிட்டோமோன்னு தவிச்சிட்டிருந்தோம். எங்க வயத்தில் பாலை வார்த்தீங்க!" என்று மனம் நிறைய வாழ்த்தினாள்.
''வாப்பா... ஒரு வாய் காப்பி சாப்பிட்டுப் போ!" என்று கனிவுடன் உபசரித்தார் ராகவன்.
"வேண்டாம் சார்! என் மனைவியை பிரசவத்துக்குச் சேர்த்திருக்கேன். நாளைக்கு சிசேரியன். இரட்டைக் குழந்தைங்க சார்! நான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணணும். கிளம்பறேன்!"
''உன்னோட பணக்கஷ்டத்திலேயும் எங்கப் பொருளைப் பத்திரமா எங்ககிட்ட சேர்த்த உன் தங்க மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும். இந்த ஆயிரம் ரூபாயை வச்சிக்கோப்பா. உனக்கு உதவியாயிருக்கும்!"
"சார்! நான் இதை வாங்கினா, உங்கப் பொருளைத் திருப்பிக் கொடுத்ததுக்கே அர்த்தமில்லாம போயிடும். வரேன் சார்...!"
சோர்வாக ஆட்டோவை ஒட்டிக்கொண்டு மருத்துவமனை வந்தான். வாசலில் விழாக்கோலம். டாக்டர்கள், நர்ஸ்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய வரை மாலை போட்டு வணங்கி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
அவர் அப்துல்லா. இந்த மருத்துவமனை சீஃப் டாக்டரின் தந்தை. ஹஜ் யாத்திரை நிறைவு செய்த கையோடு நேராக தமது மகளது மருத்துவமனைக்கு வந்துள்ளார். உள்ளே வந்தவர், "இன்று அட்மிட் ஆனவர்களுக்கும், இன்று குழந்தை பெற்றவர்களுக்கும், நாளை குழந்தை பெற இருப்பவர்களுக்கும் ஆகும் மருத்துவச் செலவு மொத்தமும் இலவசம். அதை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று அறிவித்தார். எல்லோரும் தங்களது மகிழ்ச்சியைக் கரகோஷத்தால் காட்டினர்.
அதைக் கேட்ட மூர்த்தி மெய்சிலிர்த்துப் போனான். அவனது மனத்திரையில் ராகவன், வசந்தாவின் மனப்பூர்வமான வாழ்த்து தோன்றி மின்னியது.
பின்குறிப்பு:-
ஜனவரி 2010 மங்கையர் மலர் இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்