

என்னுடைய இந்த வாழ்க்கையில் நான் மூன்று அவதாரங்கள் எடுத்து விட்டேன்.
ஆரம்பக்காலங்களில் அம்மா வீட்டில் வாழ்ந்த அந்த ஒப்பற்ற நாட்களில் எந்தக் கவலையும் பொறுப்பும் சுமக்கப் தெரியாத பருவத்தில் நான் கொஞ்சம் துடுக்குப் பெண்தான்.
யார் என்ன தப்பு செய்தாலும், அனாவசியமாக என்னைக் குறை கூறினாலும் மனதில் பட்டதை தேங்காய் உடைத்ததுபோல் பட்டென்று போட்டு உடைத்துவிடுவேன்.
ஆனால் அவர்கள் திருப்பி ஏதாவது கோபமாக பேசினாலோ, கோபப்பார்வை பார்த்தால் கூட பயந்து நடுங்கி உச்சபட்சமாக அழவே தொடங்கி விடுவேன்.
ஜானு நல்லா நறுக்குத் தெரித்தாற்போல் பேசிடுவா என்று பாராட்டிய வாயாலேயே, எத்தனையோ முறை அம்மா திட்டி இருக்கிறார்.
"வாயை கொஞ்சம் அடக்கினாத்தான் என்ன? ஏன் இப்படி பேசுவானேன் அப்பறம் வாங்கிக் கட்டிகிட்டு வந்து இப்படி ஒப்பாரி வைப்பானேன்" என்று. அதெல்லாம் எனக்குத் துளியும் வலித்ததேயில்லை.
அதேபோல்தான் கொஞ்சம் பெரிய பெண் ஆனதும் அலங்காரப் பிரியையாக வலம்வந்து நிறையபேரின் வாய்க்குள் விழுந்து எழுந்திருக்கிறேன்.