

“கௌரி, இன்னிக்குக் கொஞ்சம் லேட் ஆகும். நீ சாயங்காலம் வரும்போது ஆகாஷைக் கூட்டிட்டு வந்துடு. நான் டின்னருக்கு ஜாயின் பண்ணுவேனான்னு கூடத் தெரியல. ஒருவேளை மிட்நைட் கூட ஆகலாம். கதவைச் சாத்திட்டு, ரெண்டுபேரும் கவனமா வீட்டுக்குள்ள இருங்க. வீட்டிலேயே டின்னர் செஞ்சுடு. எதுவும் வாங்காதே. நீங்க மட்டும் இருக்கீங்கன்னு தெரிய வேண்டாம்...” என்று ஏகப்பட்ட அறிவுரைகளைச் சொல்லிவிட்டு புறப்பட்டுக் கொண்டிருந்தான் ப்ரசன்னா.
மகா கோபக்காரன். எதற்கெடுத்தாலும் கோபம். கோபம் வந்தால் கண்முண் தெரியாமல் வரும் கெட்ட வார்த்தைகள். அதனால் எப்போதும் கௌரிக்கு மனம் வருத்தம் ஆகி, அடிக்கடி மனமாற்றத்திற்காக சில நாட்கள் அம்மாவீட்டுக்குச் சென்று வருவாள்.
எந்தக் கெட்ட பழக்கமும் அவனுக்குக் கிடையாது. கோபம் மட்டும் உச்சந்தலைக்கு ஏறிவிடும் அவ்வப்போது. விளைவுகளை நோக்காமல் எல்லோரிடமும் வார்த்தையை விட்டுவிடுவதும் அதற்காக அவர்கள் என்ன செய்வார்களோ என்று பயந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து கௌரிக்கு அலுத்துவிட்டது.