
என் தோழிக்கு ஒரு பழக்கம் உண்டு. எதை செய்தாலும் வித்தியாசமாக செய்வார். சமீபத்தில் நடந்த அவர்களின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்று வந்தோம். வந்தவர்களுக்கு அன்பளிப்பாக அழகிய பை கொடுத்தார்கள். அதற்குள் வழக்கமாக போட்டுத் தரும் எவர்சில்வர் தட்டு, வெற்றிலை பாக்கு, பழம் எல்லாம் இருந்தது.
என்றாலும் அந்தப் பைக்குள் உங்கள் வருகைக்கு நன்றி, என்று கூறி கிரகப்பிரவேசம் நடந்த தினம், பிள்ளையார் படம் அனைத்தும் உள்ளுக்குள்ளாகவே அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு ஏன் இப்படி உள்ளுக்குள்ளாக அச்சிட்டீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில், 'வெளியே எடுத்து செல்லும் பொழுது எழுத்துக்கள் அதிகமாக இருந்தால் சங்கடமாக இருக்கும். சில பேர் அதை அழிப்பதற்கு படாத பாடுபடுகிறார்கள். அதை கவனித்ததால் இதுபோல் உள்ளுக்குள் எழுதி இருக்கிறோம்.' என்று கூறினார். அவரின் மாற்று சிந்தனைக்கு அனைவரும் ஒரு சபாஷ் போட்டோம்.
இன்னும் ஒரு தோழி அவர்கள் வீட்டு திருமண பத்திரிகையை ஒரு எவர்சில்வர் தட்டில் அச்சிட்டு அந்த தட்டை அன்பளிப்பாக கொடுத்தார்கள். விவரம் கேட்ட பொழுது பத்திரிக்கையை அடிப்பதற்கும் குறிப்பிட்ட அளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி செலவு செய்யும்பொழுது பத்திரிக்கையை எல்லோரும் படித்தவுடன் கிழித்து போட்டு விடுவார்கள். சில நேரங்களில் திருமண நாளை கூட மனதில் வைத்துக் கொள்ளாமல் தடுமாறுவார்கள். அதற்குப் பதிலாக ஒரு தட்டில் அச்சிட்டு கொடுத்து விட்டால் தட்டை மறக்க மாட்டார்கள். அதை பார்க்கும் பொழுது எல்லாம் திருமண தேதி நினைவிற்கு வரும். ஆதலால் தப்பாமல் தவறாமல் வந்து விடுவார்கள் என்று கூறினார்.
மேலும் திருமணத்திற்கு வந்து போவோர்களுக்கு ரிட்டன் கிப்ட் ஏதாவது கொடுக்க வேண்டி இருக்கிறது. அது பெரும்பாலும் எவர்சில்வர் சார்ந்ததாகவே இருக்கும். அதை முன்பாகவே இப்படி பத்திரிக்கையை அச்சிட்டு கொடுத்து விட்டால் பரிசு கொடுத்தது போலவும் ஆகிவிடும் என்று கூறினார். அவரின் ஐடியாவை எல்லோரும் கேட்டு பாராட்டினோம். அடுத்த ஆண்டு அந்தத் தட்டைப் பார்த்து திருமணநாள் வாழ்த்துக்கள் கூறி அவர்களை சந்தோஷப்படுத்தினோம்.
என் தோழி ஒருவர் கோவில்களுக்கு செல்லும் பொழுதும், பஸ்ஸில் பயணிக்கும் பொழுதும் நிறைய சில்லறைகள் சேர்த்து வைத்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு வருவார். அங்கு கோவிலில் தட்டில் போடுவதிலிருந்து, உண்டியல் மற்றும் பஸ் டிக்கெட் எடுப்பது என்று எல்லாவற்றிற்கும் அதை பயன்படுத்துவார். இதனால் சில்லறைக்காக தடுமாறி நிற்கும் நிலை வராது. கால விரயமும் ஏற்படாமல் கடகடவென்று வேலைகளை முடித்துக் கொண்டு வரலாம் என்பதை அவள் செய்ததில் இருந்து புரிந்து கொண்டோம். ஆதலால் தோழிகளே சில்லறைகளை சேர்த்து வையுங்கள். வெளியில் செல்லும் பொழுது அதை மறக்காமல் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள்.
இப்படி தீர்க்கமாகவும், தெளிவாகவும், மாற்றியும் யோசித்து அன்றாடம் செய்யும் செயல்களை சிறப்பாக செய்யும் பொழுது மற்றவர்கள் மனதில் நாம் வாழலாம். இதனால் இது போன்ற பயன்களை அவர்களும் அடைவார்கள். இதுவும் மற்றவர்களை கவர்வதற்கான ஒரு சிறந்த அணுகுமுறை என்று கூறினால் மிகையாகாது. யார் எதை செய்தாலும் அதில் உள்ள நன்மைகளை பார்ப்போம். நாமும் நம் செயல்களில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்!