கண்ணீர் சொன்ன கதை!

The story of tears!
The story of tears!

மீபத்தில் பஸ்ஸில் பயணம் செய்தபொழுது, என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த திருநங்கை அன்புடன் என்னோடு பேசிக்கொண்டு வந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு போன் வந்தது. 

அதை எடுத்துப் பேசியவர், அவரின் தோழி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு வந்தார். அப்பொழுது ‘உனது அப்பா வீட்டில் மழை ஜோராகப் பெய்துகொண்டிருக்கிறது’ என்று கூறியவர், கடகடவென்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  அந்த இடத்தில் அந்தச் சூழ்நிலையை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது.

பிறகு என்னிடம் பேசியவர், “உங்களுக்கெல்லாம் அம்மா வீடு, அப்பா வீடு என்று சொல்வதற்கு உறவுகள் இருக்கிறார்கள். எங்களுக்கு யார் இருக்கிறார் கூறுங்கள்? நாங்கள் பெற்றோர்களையே அம்மா, அப்பா என்று கூறமுடியாத பெரும்பாவிகள். அந்த நேரத்தில் உங்க அப்பா வீடு என்று கூறியது எனக்கு அழுகை வந்துவிட்டது,” என்று கூறிக்கொண்டிருக்கும்பொழுதே பஸ்ஸில் "இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ, நாடோடி பாட்டுக்குத் தாய் தந்தை யாரோ"

என்று பாட்டு போட, மேலும் அவர் அழுகைக் கூடியது. “இது எங்களுக்காக எழுதப்பட்ட பாட்டு.  இந்தப் பாட்டை கேட்கும்போதெல்லாம் நான் அப்படித்தான் நினைத்துக்கொள்வேன்” என்று கூறி அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது சினிமாவையே மிஞ்சிவிடும் கணக்கில் இருந்ததால் என்னை அறியாமலே என் கண்களிலும் நீர் தேங்கியது. 

சிறிது நேரம் என்னாலும் சகஜ நிலைக்குத்  திரும்ப முடியவில்லை. கனத்த மனத்துடன் அமைதியாகி விட்டேன். பிறகு அவரே கண்களைத் துடைத்துக்கொண்டு, “அடடே! என் கஷ்டத்தை சொல்லி உங்களையும் துன்பப்படுத்தி விட்டேனா? மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா. என்னவோ என்னுடைய ஆற்றாமை அதுதான் அப்படிச் செய்து விட்டேன்,” என்று கூறி அமைதியானவர், பிறகு  அழுகையை நிறுத்தி ,கண்களைத் துடைத்துக்கொண்டு சாதாரண நிலைக்குத் திரும்பினார். 

“இன்றைக்கும் பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணம் செய்யும்பொழுது சகஜமாக திருநங்கைகள் ஆகிய எங்களுடன் வந்து அமர யாரும் தயாராக இருப்பதில்லை அம்மா. அதை நினைக்குந்தோறும் மனது அவ்வளவு பாடுபடுகிறது. நீங்கள் என் அருகில் வந்து அமர்ந்ததற்கு மிக்க நன்றி அம்மா,” என்று கூறி இயல்பு நிலைக்குத் திரும்பினார். 

பிறகு வேலை செய்யும் இடங்களில் மற்றவர்கள் கண்ணியமாக நடந்து கொள்ளும் முறையைப் பற்றியும் சந்தோசமாக கூறி சிரித்தார். அதன்பிறகு எனக்கும் மனசு லேசானது. பிறகு இறங்கும் இடம் வந்ததும் குட் பை சொல்லி விடை பெற்றோம்.

இதையும் படியுங்கள்:
ஊர் பேசும் பட்சணங்கள்! கொஞ்சம் ஹெல்த்தி! செம்ம்ம டேஸ்ட்டி!
The story of tears!

ஆதலால், சகோதர, சகோதரிகளே பயணங்களில் இவர்களுடன் பயணிக்க நேர்ந்தால் தயவுசெய்து எந்த வேறுபாட்டையும் காட்டாதீர்கள். எல்லோரிடமும் இயல்பாக பழகுவதுபோல் 

அவர்களிடமும் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதே இந்த அன்பையும், மதிப்பையும்தான். மனிதருக்குள் மனிதர் மரியாதையாக நடந்துகொள்வது ஒன்றே நம் பண்பை உயர்த்தி காட்டும் அறம் ஆகும். 

நாம் அறம் செய்ய விரும்புவோம்;  அவர்களின் சினத்தை காணாமல் போகவைப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com