

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற ஏராளமான வீரர்களில் மிகவும் முக்கியமானவர் ஜான்சி ராணி லட்சுமி பாய். அவரைப் போலவே இந்திய சுதந்திரப் போரில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் ஜல்காரி பாய் (Jhalkaribai). அவரது வாழ்க்கை வீரம், விசுவாசம் மற்றும் தியாகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவரது சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
புலியைக் கொன்ற சிங்கப்பெண்
ஜான்சிக்கு அருகில் உள்ள போஜ்லா கிராமத்தில் ஒரு தலித் பெண்ணாக பிறந்த ஜல்காரி பாய் சிறு வயதிலேயே மன உறுதியும், துணிச்சலும் பெற்று இருந்தார். தனது பதின்பருவத்தில் அவருடைய கால்நடைகளைத் தாக்க வந்த ஒரு புலியை கோடாரியால் தனி ஒருவராகக் கொன்றார். கிராமமே ஆச்சரியப்பட்டு அவரை பாராட்டியது. மேலும் ஒரு கொள்ளையர் கூட்டத்தை விரட்டியடித்து அவரது துணிச்சலை நிரூபித்தார்.
பெண்கள் பிரிவின் படைத்தளபதி
ராணி லட்சுமிபாயின் படையில் பீரங்கி வீரராக இருந்த பூரன் சிங்கை ஜல் காரி மணந்த பிறகு ராணிக்கு அறிமுகமானார். ஜல்காரியும் ஜான்சி ராணியும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி உருவ அமைப்பை கொண்டிருந்ததை கண்டு லட்சுமி பாய் ராணி வியப்படைந்தார். அவரை ராணுவத்தின் பெண்கள் பிரிவான துர்கா தளத்தில் சேர்த்தார். மிக விரைவில் தனது போர்த் திறமையை ஜல்காரி பாய் நிருபிக்க, துர்கா தளத்தின் தளபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். பெண் வீரர்களை ஒழுக்கத்துடனும் முன்மாதிரியான துணிச்சலுடனும் வழி நடத்தினார்.
ஜல்காரியின் வியத்தகு வீரம்
1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படை ஜான்சி கோட்டையை முற்றுகையிட்டது. ஜெனரல் ஹக் ரோஸ் தலைமையிலான படை ஜான்சி கோட்டையின் மீது இடைவிடாமல் குண்டு வீசி தாக்கியது. ராணி லட்சுமி பாயுடன் இணைந்து ஜல்காரி பாய் அற்புதமான வீரத்துடன் போராடி ஏராளமான தாக்குதல்களை முறியடித்தார். துர்கா தளத்தின் பாதுகாப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். மிக வலுவான ஆங்கிலப் படைக்கு எதிராக போராட தனது துருப்புக்களையும் படைகளையும் ஊக்குவித்தார்.
துரோகத்தை முறியடித்த சாதுர்யம்
இலட்சுமிபாயின் தளபதிகளில் ஒருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு கோட்டையின் பாதுகாப்பு அம்சத்தில் உள்ள ஒரு பலவீனமான இடத்தை காட்டிக் கொடுத்தார். அவரது துரோகத்தால் எளிதில் ஊடுருவ முடியாமல் இருந்த ஜான்சி கோட்டையில் பிரிட்டிஷ்காரர்களால் நுழைய முடிந்தது. இந்த நெருக்கடியான தருணத்தில் ஜல்காரிபாய் ஒரு முக்கிய முடிவு எடுத்தார்.
துணிச்சலான தந்திரத்தை நிகழ்த்த முடிவு செய்தார். ராணி லட்சுமி பாய் போல வேடம் இட்டு ஒரு குதிரையில் ஏறி கோட்டையில் இருந்து வெளியேறி ஒரு சிறிய படையினரை பிரிட்டிஷ் முகாமை நோக்கி வழி நடத்தினார். வேண்டுமென்றே செய்த அவரது திசை திருப்பும் செயலால் எதிரிகளின் கவனம் அவர் மேல் திரும்பியது.
மாசற்ற தியாகம்
கடுமையான சண்டைக்குப் பிறகு இறுதியாக ஜல்காரி பாய் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டார். ஜெனரல் ரோஸுக்கு முன்பு கொண்டு வரப்படும் வரை அந்த தந்திரத்தை அவர் தொடர்ந்தார். அப்போதுதான் மிகப்பெரிய ஏமாற்று வேலை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராணி லட்சுமிபாய் கோட்டையில் இருந்து வெற்றிகரமாக தப்பித்து வேறொரு இடத்துக்கு சென்றார். தனது இன்னுயிரை தியாகம் செய்து ராணி இலட்சுமிபாயை காப்பாற்றினார் ஜல்காரி பாய். ஆனால், அவர் பிடிபட்ட பிறகு ஜல்காரி பாயின் கதி என்ன என்பது வரலாற்று விவாதத்துக்குரிய விஷயமாகவே உள்ளது.
ஜல்காரி பாயின் விசுவாசம், துணிச்சல் மற்றும் தியாகம் போன்றவை இந்திய வரலாற்றின் ஒரு மறக்க முடியாத காவியம் ஆகும். இன்றும் கூட அவரது பெயர் பயபக்தியுடன் ஜான்சியில் அழைக்கப்படுகிறது. அவரது வாழ்க்கை மற்றும் வீர தியாகத்தின் கதை பண்டல்கண்டின் நாட்டுப்புறக் கதைகளில் பேசப்படுகிறது.