

வருடத்தில் இருமுறை ஒரு சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவை பல மணி நேரங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த விமான சேவை நிறுத்தத்துக்கான காரணம் விஐபிகளுக்காவோ, அவசரநிலைகளுக்காகவோ அல்ல...பின் எதற்காக? அதன் காரணம் ஒரு திருவிழாவுக்காக என்றால் நம்ப முடிகிறதா?
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அல்பாசி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விமான நிலைய ஓடுதளம் பல மணிநேரம் மூடப்படுகிறது. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் 10 நாட்களுக்கு அல்பாசி திருவிழா, ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் ஊர்வலமாக அங்கிருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சங்குமுகம் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு புனித நீராட்டப்படும்.
ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் ஆராட்டு ஊர்வலத்தின் ஒரு பகுதியாக கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் விமான நிலைய ஓடுபாதையில் ஒரு புனிதமான சடங்கான நீராடுவதற்காக கடலுக்கு செல்லும் வழியில் நடந்து செல்கிறார்கள். அலங்கரிக்கப்பட்ட யானைகளும் இந்த ஊர்வலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றன. இது பல நூற்றாண்டுகளாக உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும், சென்ற அக்டோபர் 30 அன்று, விமானங்கள் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இடைநிறுத்தப்பட்டு அல்பாசி ஆராட்டு அதன் தெய்வீக பயணத்தைத் தொடர்ந்தது. பாரம்பரியமும் நவீனத்துவமும் சந்திக்கும் தருணம் இது. இந்த அல்பாசி திருவிழாவை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இது எல்லா இடங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்க்கிறது.
அல்பாசி திருவிழா பல்வேறு வாகனங்களில் பிரதான தெய்வமான அனந்தபத்மநாபசுவாமி வலம் வருவதை குறிக்கும் ஒரு விழாவாகும். பகவான் ஒவ்வொரு நாளும் சிம்ஹாசனவாகனம், அனந்தவாகனம், கமலாவாகனம், பல்லக்குவாகனம், கருடவாகனம், இந்திரவாகனம் போன்ற வெவ்வேறு வாகனங்களில் வலம் வருகிறார்.
ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஸ்ரீநாராயணர் உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்களும் ஊர்வலங்களாக எடுத்துச் செல்லப்படுகின்றன. ஸ்ரீபத்மநாபசுவாமி வாகனம் தங்கத்தால் செய்யப்பட்டது. மற்றவை வெள்ளியால் செய்யப்பட்டவை. பல்லக்கு மற்றும் கருட வாகனங்கள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை.
அல்பாசி திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று பள்ளிவெட்டா ஆகும். இது இறுதி நாளில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இறுதி நாளில் பிரமாண்டமான ஆராட்டு நடைபெறுகிறது. தெய்வங்களுக்கான புனித நீராடலான ஆராட்டு சடங்கு திருவிழாவின் முதன்மை ஈர்ப்பாகும்.
கோயிலில் தொடங்கிய ஒரு பெரிய ஊர்வலம் சங்குமுகம் கடற்கரையை நோக்கி செல்கிறது. திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவர் கையில் வாளுடன், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரை மற்றும் ஆயுதமேந்திய போலீஸ் அணிவகுப்புகளுடன் ஊர்வலத்தை வழி நடத்துகிறார்.
இந்த தனித்துவமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் கூடுகின்றனர். இந்த ஊர்வலம் சங்குமுகம் கடற்கரையில் உள்ள ஆராட்டு மண்டபத்தில் முடிவடைகிறது. அங்கு தெய்வ விக்ரஹங்களுக்கு கடலில் புனிதநீராடல் செய்யப்படுகிறது. அல்பாசி திருவிழாவுடன் கூடுதலாக பங்குனி திருவிழாவின் போதும் (மார்ச்/ஏப்ரல்) இதே போல சடங்குகள் செய்யப்படுகிறது. அந்த சமயத்திலும் விமான நிலையம் பல மணி நேரங்கள் மூடப்படுகிறது.
கொடியேற்ற விழாவுடன் தொடங்கும் இந்த திருவிழா பல்வேறு சடங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு மாலையிலும் உத்சவஷீவேலி என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. மேலும் கோயிலின் அரங்கங்களில் கதகளி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.