
தகவல்: வத்சலா, சென்னை
திருமணத்தில் மணமகன் மனமகளுக்கு குங்குமம் இடுவது முக்கியச் சடங்கு. வட இந்தியாவில் தாலி அணியும் சடங்கு இல்லை. ஆனால் மாப்பிள்ளை, பெண்ணுக்குக் குங்குமம் வைத்தாலே திருமணம் முடிந்ததாகக் கருதப்படுகிறது. வட இந்தியப் பழங்குடி மக்களிடம் குங்குமம் இடுவது பற்றி ஒரு கதை உண்டு.
நான்கு இளைஞர்கள் சிறந்து நண்பர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவன், மரச்சிற்பம் செதுக்குவதில் கை தேர்ந்தவனாக விளங்கினான். மற்றொருவன் நகைத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். மூன்றாவது இளைஞன், துணி நெய்யும் தொழிலிலும், நான்காமவன் குங்கும வியாபாரியாகவும் இருந்தான்.
நண்பர்களுக்கு ஒரே இடத்தில் இருந்து தொழில் செய்வது அலுப்புத்தட்டியதால், தொழிலுக்குரிய கருவிகளை எடுத்துக்கொண்டு புதிய இடத்தை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் இரவு நேரம் குறுக்கிட்டது, ஒரு தென்னத் தோப்பில் தங்கி உறங்க முடிவெடுத்தனர். அனைவரும் உறங்கினால் பொருள்கள் களவு போகும் என்பதால், ஒருவர் விழித்திருக்க மற்ற மூவரும் உறங்க வேண்டும்; சம கால அளவெடுத்து அடுத்தவர் காவல் இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று.
முதலில் மரவேலை சிற்பியின் முறை வந்தது. பொழுது போக்க நினைத்த சிற்பி அருகில் கிடந்த மரக்கட்டையை, அழகான பெண் சிற்பமாகச் செதுக்கினான். அவன் நேரம் முடிந்ததும் அதை அருகில் நிறுத்திவிட்டு, நெசவாளியை எழுப்பி, உறங்கச் சென்றான். தன் அருகில் அழகான சிற்பத்தைக் கண்ட நெசவாளி மகிழ்ச்சியுற்றான், தன்னிடம் உள்ள நூலால், பொருத்தமான ஆடை நெய்து, அணிவித்து, அடுத்தவனை எழுப்பிவிட்டு உறங்கச் சென்றான். அடுத்தவன் ஆபரணக் கலைஞன் என்பதால் சிலையைப் பார்த்து அதற்கேற்ப நகைகளைப் பூட்டினான். அவன் நேரம் முடிந்ததால் குங்கும வியாபாரியை எழுப்பிவிட்டு அவன் உறங்கப் போனான்.
காவலைத் தொடங்கிய குங்கும வியாபாரி, சிற்பத்தைக் கண்டு வியந்து தன்னுடைய பங்குக்கு தன்னிடமுள்ள குங்குமத்தை எடுத்து, சிற்பத்தின் நெற்றியில் இட்டான்
குங்குமம் இட்டதும் மரச் சிற்பம் உயிர் பெற்று நாணமும், நளினமும் குலுங்கும் நங்கையாக நாணிக் கோணி நின்றாள். ஒவ்வொருவரும் அவளை, தனக்கே மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், உரிமை கோரி சச்சரவில் இறங்கினர்.
அப்போது அவ்வழியே வந்த பெரியவர், நால்வரின் வாதங்களையும் கேட்டு, "அவளை உருவாக்கிய சிற்பி, தந்தைக்குச் சமமானவன்; அதனால் அப்பெண் சிற்பிக்கு உரிமையில்லை. ஆடை அணிவித்தவனோ தமையன் ஆவான். அதனால் அவனும் அப்பெண்ணை மணம் செய்ய முடியாது. அணிகலன்களை அணிவித்த பொற்கொல்லன் தாய் மாமனுக்கு ஒப்பானவன்.
அப்பெண்ணைத் தொட்டு நெற்றியில் குங்குமம் இட்டவனே அவளை மணந்து கொள்ளும் உரிமையைப் பெற்றவன்" என்று தீர்ப்புக் கூறினார். இந்தக் கதையின் மூலம் ஒரு பெண்ணைத் திருமணம் என்னும் பந்தத்தில் உட்படுத்த, குங்குமமே சிறந்த அடையாளம் என வலியுறுத்தப்படுகிறது.
ஆதாரம்: 'பெண்ணே உனக்குச் சீதனம்' என்ற நூலிலிருந்து...