டைகர் பட்டோடியைத் தெரியுமா..?

சிறுகதை
டைகர் பட்டோடியைத் தெரியுமா..?
Published on

ஓவியம்: தமிழ்

லண்டன் அண்டர் கிரவுண்ட் ஸ்டேஷன் போர்டின் சிவப்பு வட்டத்தின் மேலுள்ள நீல செவ்வகத்தில், வெள்ளை எழுத்துகள் ஒளிர அதன் அருகிலிருந்த பழைமையான மணிக்கூண்டு, வியாழன் உறங்கி வெள்ளி முளைத்து 57 நிமிடங்கள் என்றது.

அவசர கதி RFP’க்கு இன்று நள்ளிரவுதான் 'டெட்லைன்ச்'; ப்ரோபோசல் அனுப்பத் தாமதமானால் ஒன்றரை பில்லியன் டாலர் உன்னால் கம்பெனிக்கு 'லாஸ்' எனக்  கூசாமல் என் தலையில் கட்டிவிட்டு, பொண்ணுக்குப் பிறந்தநாள் என்று சாயங்காலமே 'எஸ்' ஆகி விட்டார் எனது பாஸ் ஷர்மாஜி  - கிளையண்டின் நாடித்துடிப்பை அறிந்தவர் என்பதால் மேலிடம் அவரை நெருங்காது.

'ஆயிஸ்டர் அட்டையை' ஸ்டேஷன் நுழைவு தூணில் தேய்க்கும்போது, கீழே ட்யூப் ட்ரெயின் வரும் 'தடதட' ஓசை கேட்க அவசரமாக இறங்கினேன். அந்த அதி வேகப் பயண இயந்திரம், பிளாட்பாரத்தில் எச்சமாயிருந்த ஐந்தாறு நபர்களை ஏற்றிக்கொண்டு 'மைண்ட் த கேப்' என்று சொல்லி என் அவசரத்தைப் புறக்கணித்துப் புறப்பட்டது. சரியாக மூன்றரை நொடியில் ‘ஆக்ஸ்பிரிட்ஜ் இரயிலை கண் முன் தவறவிட்டேன். பிளாட்பாரத்தில் நான் மட்டும் தனித்து விடப்பட்டேன்.

ஆளில்லாத ஆட்டோமேட்டிக் ஸ்டேஷனில் வெளிச்சம் குறைவாக இருந்தது. இன்னும் கடைசி ரயில்தான் பாக்கி. பெஞ்சில் அமர்ந்தேன். அடுத்த ரயில் பற்றிய செய்தி ஏதும் அறிவிப்புப் பலகை காட்டாமல் மௌனமாக இருக்க, வெளிச்ச பல்புகள், இயக்கம் இல்லாத இடங்களில் தானியங்கியாக அணைந்தன.

அரவம் இல்லாத தனிமை.  குளிர்பான ஆட்டோமேட்டிக் வெண்டிங் மெஷினின் கம்ப்ரெஸ் ஒலி அந்த நிசப்தத்துக்கு ஒரு அமானுஷ்யம் சேர்த்தது

லகம் தானியங்கி மயமாக உருமாற மனிதர்களிடையே நேரடிப் பேச்சு குறைந்துவிட்டது. தனிமையின் வெறுமையை விலக்க மொபைலில் ‘சித் ஸ்ரீராமை’ தேடியெடுத்து காதில் பொறுத்த எத்தனிக்கும்போது  எஸ்கலேட்டர் உயிர் பெற்றது. உருளைகள் உறும, ‘யாரும் வருகிறார்களா..?’ என எட்டிப் பார்த்தேன்.

தளர்ந்த நடை, தாடிக்குள் கண்கள். தொப்பியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு இறங்கினார் அவர். என்னைப் பார்த்து சிநேகமாகக் கையசைத்தார்.

“கடைசி வண்டி போய்விட்டதா?”

“இன்னும் இல்லை.”

அமருங்கள், என்று தள்ளி இடம் கொடுத்தேன். சற்றுத் தடுமாற்றத்துடன் இரும்பு பெஞ்சின் கைபிடியைப் பிடித்து அமர்ந்தவர்,

“பார்…ரில் லேட் ஆகிவிட்டது, ஸ்டேஷனில் யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்தேன். உன்னைப் பார்த்தால் இந்தியன் போல் உள்ளது. ஐ.டி. கம்பெனியா..?”

“ஆம்” - அனாவசிய பேச்சு வேண்டாம் என்று தோன்றியது.

“என் பெயர் 'லெனார்ட்.'” 

“ம்...” 

“இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறாயா…?”

(ஷர்மாவை மனதுக்குள் சபித்தேன். டி.வி.யில் உலகக் கோப்பை T20 பார்க்க இருந்தவனைக் கடைசி நிமிஷத்தில் இந்த ப்ராஜெக்டில் இழுத்துப்போட்டு..)

“இங்கிலாந்தின், ‘லெனார்டு’ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1938 டெஸ்ட் மேட்சில், ஓவல் மைதானத்தில் 364 ரன் அடித்தார். அந்தச் சமயத்தில் நான் பிறந்ததால் எங்க அப்பா வைத்த பெயர்!” தொடர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே,

“நீங்கள் கிரிக்கெட் ரசிகர்தானே? கிரிக்கெட் தெரியாத இந்தியர்களை நான் பார்த்ததே இல்லை...”

நான் தலையை ஆட்டினேன்.

“டைகர் பட்டோடியைத் தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய பையன் பெரிய நடிகர்.”

"நான் சிறுவனாக இருந்தபோது நெட்ஸ்…சில், பட்டோடிக்கு எதிராக பௌலிங் செய்திருக்கிறேன். 'ஆக்ஸ்போர்ட்'க்கு எதிரான ஆட்டம். அவர் அட்டகாசமான ஃபீல்டரும் கூட...”

“நாங்களெல்லாம் விராட் கோலி, பும்ரா ரகம்

"1983 ஒன்றே போதும் இந்தியாவுக்கு. அன்று லார்ட்ஸில் இருந்தேன். விவியன் ரிச்சர்ட்ஸின் பரம ரசிகன் நான். இருந்தாலும், இந்தியாவுக்கு ஆதரவாக 'பெட்' கட்டி, செம காசு அள்ளினேன். மேட்ச் முடிந்ததும் மொகிந்தர் அமர்நாத்தைப் பார்த்து, “உங்கள் அப்பாவிடம் வாங்கின ஆட்டோகிராப் பாருங்கள்" என்று காண்பித்தேன்.

வெண்டிங் மெஷின் தன் கம்ப்ரசர் சவுண்டை நிறுத்திக்கொள்ள மேலும் சூழ்நிலை நிசப்தம் ஆகியது

“என் பையன் இங்கிலாந்துக்காக ஆடவேண்டும் என்று எனக்குக் கொள்ளை ஆசை...”

“நல்லா விளையாடுவாரா?”

“எங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை...”

கவல் LED பலகையை நோக்கினேன். இன்னும் அடுத்த ரயில் பற்றிய அறிவிப்பு வரவில்லை

“எனக்கு நிறைய நண்பர்கள், குறிப்பாக ஆறு பேர். சிறிய வயதிலிருந்து கிரிக்கெட் ஆடுவோம், ஒன்றாகச் சுற்றுவோம். எல்லோருக்கும் நல்ல வேலை. தினமும் பாரில் சந்திப்போம்” - இருமினார்

“தண்ணீர் தேவையா?”

“வேண்டாம்… ஒவ்வொருவராக விலகி விட்டார்கள்.”

“ஏதும் சண்டையா?”

“இல்லை இறந்துபோய்விட்டார்கள்… ஒன்றன்பின் ஒவ்வொருவராக… என் மனைவி கேத்தரினும், ஆறு மாதம் முன்பு என்னை விட்டு விண்ணுலகம் போய்விட்டாள்...”

“எங்கே வீடு?”

“பிரஸ்டன் ரோடு.”

“நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் பாருக்கு சென்றிருந்தேன், நினைவுகளைத் திரட்ட...”

“உங்களை நான் பத்திரமாக பிரஸ்டன் ரோடு ஸ்டேஷனில் இறக்கி விடுகிறேன். வீடு வரை வரவேணுமா?"

“வேண்டாம்… கடந்த பத்து வருடங்களாக எனக்கு வேண்டியவர்கள் ஒவ்வொருவராக விலகிக்கொண்டே வருகிறார்கள். பேச்சு குறைந்துவிட்டது. பேச ஆளில்லை. ஆறுமாதமாகத்  தனிமை மிகவும் வாட்டுகிறது. உனக்குக் கடைசியாக எப்பொழுது போன் வந்தது?”

“ஸ்டேஷனுக்குள் நுழைவதற்கு 10 நிமிடம் முன் என் பாஸ், வேலையை முடித்து விட்டாயா? என்று கேட்டார்.”

“நோ ஒன் கால்ஸ் மீ! - எனக்குச் சரியான அழைப்பு வந்து இரண்டரை மாதம் ஆகிறது தெரியுமா?”

சற்று வெறித்துப் பார்த்தார். "என் மனைவிக்கு முன்னால் நான் செத்திருக்க வேண்டும். உலகத்திலேயே அதிகபட்ச வலியைத் தரக்கூடியது புறக்கணிப்புதான். ‘நான் யாருக்கும் தேவையில்லை’ என்கிற ஃபீலிங் எத்தனைக் கொடியது தெரியுமா?  என்னைப் போன்றோருக்கு ‘தனிமை’ ஒரு அசுர பூதம், அது துரத்திக்கொண்டே இருக்கும்.. நீ தற்கொலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்…?”

(ஷர்மாஜி…! - இந்த அர்த்தராத்திரியில் என்னை இப்படி மாட்டி விட்டீர்களே?)

“எனக்குத் தற்கொலை செய்து கொள்பவர்களைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது. இறைவன் கொடுத்த உயிரை, மனிதன் மாய்த்துக்கொள்வது எப்படிச் சரியாகும்?”

“அப்படியென்றால் உன் வாழ்க்கையில் இன்னும் சோகங்கள் புகவில்லை என நினைக்கிறேன்...”

“இல்லை... இறந்து போய்விட்டார்கள். ஒன்றன்பின் ஒவ்வொருவராக...”

“இரண்டு நாட்களுக்கு முன் கூட இந்த ஸ்டேஷனில் ஒரு தற்கொலை நடந்துள்ளது. 'ஈவினிங் டைம்ஸ்'ஸில் வந்ததே பார்க்கவில்லையா?”

“இல்லை” - பசி வயிற்றைக் கிள்ளியது. மெக்டோனால்'ஸில் ஒரு சாண்ட்விச் பிடித்துக்கொண்டு வந்திருக்கலாம். ரயில் பிடிக்கும் அவதியில் விடுபட்டுப்போனது. என் ரூம் மேட் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்து இத்தனை நேரம் படுத்திருப்பான். 

யில் டிஸ்பிளே போர்டு ஒளிர்ந்தது.

லெனார்டு எழுந்தார்.

“‘வெயிட், உட்காருங்கள் வருவது 'ஃபாஸ்ட் ட்ரெயின் இங்கு நிற்காது,’ என்று போட்டிருக்கிறது.”

லெனார்டு தன்பாட்டுக்கு முன்னோக்கி நகர,

'எதிர்வரும் ட்ரெயின் இங்கு நிற்காது, மஞ்சள் கோட்டைக் கடக்காமல் விலகி நில்லுங்கள்' என்றது தானியங்கி ஒலிபெருக்கி.

மஞ்சள் கோட்டைத் தாண்டி நின்றால், காற்றைக் கிழித்து வரும் வேகத்திற்கு ரயில் ஆளையே தள்ளிவிடும், பார்த்திருக்கிறேன்...

தூரத்தில் அண்டர்கிரவுண்ட் குகையில் ஒரு மெல்லிய வெளிச்சப் படுகை விரிந்தது.

தொடர்ந்து ரயில் வருவதற்கான அறிகுறியாகச் சீரான ஒளி / ஒலி கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக்கொண்டே வந்தது.

இருள் நிறைந்த ஸ்டேஷன் திடீர் வெளிச்சமாக, லெனார்ட் வேகமாக ரயில் அருகே ஓடினார்…

“லெனார்ட் போகாதீர்கள், ஜாக்கிரதை… பின்னால் வாருங்கள், இந்த ரயில் நிற்காது,” பெரிய குரலெடுத்துக் கத்தினேன்…!

அசுரவேகத்தில் முன்னோக்கி வந்தது அந்த ரயில். அதன் பெருத்த ஒலி காதைக் கிழித்தது… வெளிச்ச ஜன்னல்களின், ஒளி வரிசைகள் ஒன்றன்பின் ஒன்றாய் பிளாட்பார சுவர்களில் மோதி அவசரகதியில் செல்ல, கடைசி பெட்டி X என்ற ஒற்றை எழுத்துடன் சிவப்பு விளக்கு ஏந்தி குகைக்குள் சென்று மறைந்துவிட்டது.
வெறும் தடக் தடக் என்ற ஒலி மட்டும் மிச்சமிருந்தது.

பகீரென்றது…!

எங்கே லெனார்டு…?

பரபரப்பாக ஓடிச்சென்று தண்டவாளத்தில் எட்டிப்பார்த்தேன்...

அவரைக் காணவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com