
- என்.சித்ரா, பாண்டிச்சேரி
என் சகோதரி மெனோபாஸ் பிரச்னைக்காக அவ்வப்போது மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்று வருவாள். ஒருமுறை பரிசோதனைக்குச் செல்லும்போது தன் மகளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தாள். என் சகோதரியைப் பரிசோதித்த டாக்டர், "இரவு நேரத்தில் நன்றாகத் தூங்குவீர்களா?" என்று விசாரித்திருக்கிறார்.
என் சகோதரி, (பின் விளைவு தெரியாமல்) "அதெல்லாம் சூப்பரா குறட்டை விட்டுத் தூங்கறேன் டாக்டர்" என்று பெருமையாக சொல்லவும், "என்ன குறட்டை விட்டுத் தூங்கறியா?" என்று டாக்டர் திடீரென 'சிங்கமுத்து' குரலில் மாறி பதற்றமாக கேட்டிருக்கிறார்.
என் சகோதரி, "இல்ல டாக்டர் என் மகள்தான் சொல்லுவா" என்று பக்கத்திலிருந்த மகளை கைகாட்டி பழியை தன் மகள் மேல் போட்டு தப்பிக்க, டாக்டரின் கேள்விக்கணை, பதினைந்து வயதான மகளைப் பார்த்துப் பாய்ந்தது. மிரண்டுபோன மகளும் “ஆமாம் டாக்டர்" என்று தயங்கியபடியே பரிதாபமாக சொல்லியிருக்கிறாள்.
"அப்படியெல்லாம் செய்யக்கூடாது. இதை உடனே கவனிக்கணும்" என்று மருத்துவர், பக்கத்திலிருந்த அவரது மருத்துவக் கணவரிடம் இவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
கூண்டுக்குள் சிக்கிய கிளிகளாக இவர்கள் அந்த டாக்டரிடம் செல்ல, அந்த டாக்டரும் இவளிடம் அதே கேள்விகளை கேட்டு, "நீங்க உடனே உங்கக் கணவரை அழைத்துக்கொண்டு என்னை வந்து பாருங்க... தாமதிக்காதீங்க... அப்பதான் சிகிச்சையை உடனே தொடங்க முடியும்" என்று சொல்லியிருக்கிறார்.
தனக்கு ஏதோ பெரிய வியாதி என்று நினைத்த என் சகோதரி, தன் கணவனிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். சாதாரணமாக மருத்துவமனை பக்கமே தலைவைத்துப் படுக்காதவர். மனைவியுடன் ஆட்டோவில் பறந்திருக்கிறார்.
என் அத்திம்பேரை பார்த்ததும் அந்த டாக்டர் குறட்டை விஷயத்தை விசாரிக்க, அவரும் “ரொம்ப சத்தமா இல்ல சார், எப்பவாவது" என்று சொல்ல, "நோ, நோ... உங்க டாட்டர் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. குறட்டையைப் பத்தி நான் அமெரிக்கா போய் 'ரிசர்ச்' பண்ணிட்டு வந்திருக்கேன். இதை இப்படியே விட்டா, ‘ஹார்ட் அட்டாக்', 'பாரலிஸஸ் அட்டாக்' வந்து கை, கால் செயலிழந்து போகலாம்" என்றதோடு இன்னும் வாயில் நுழையாத வியாதிகளையும் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்.
பிறகு "நீங்க எங்க வேலைப் பார்க்கறீங்க?" என்று விசாரித்திருக்கிறார். இவரும் தான் வேலை பார்க்கும் வங்கியின் பெயரை சொல்ல, சந்தோஷமான டாக்டர், "அப்ப லோன் வாங்க ரொம்ப சௌகரியமாப்போச்சு” என்று சொல்லி சிரித்திருக்கிறார்.
இவர் அமெரிக்கா போய் 'ரிசர்ச்' பண்ணினதுக்கு நான் எதுக்கு லோன் வாங்கணும் என்று நினைத்து வாயடைத்துப் போயிருந்த என் அத்திம்பேரிடம், இரண்டு ஓயருடன் இருந்த மெஷினை காட்டி "இந்த ஒயர்களை இரண்டு மூக்கிலும் செருகிண்டு (தும்மல் வராதோ) தூங்கணும். இந்த மெஷினின் விலை வெறும் 75,000/- ரூபாய்தான்" என்று விளம்பர பாணியில் தொடங்கி, ''மிஷின் வைப்பதற்கு முன்னால் பரிசோதனைக்காக உங்க மனைவி ஒரு நாள் இங்கே வந்து தங்க வேண்டும். அவங்க தூங்கும்போது குறட்டை விடும் அளவை வைத்துதான் சிகிச்சை ஆரம்பிக்கணும்" என்று பேசிக்கொண்டேபோக, மிரண்டுபோன அத்திம்பேர், என் சகோதரியின் கையைப் பற்றிக்கொண்டு நடந்தே வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு என் அக்கா, கொஞ்சம் யோசித்துதான் மூச்சே விடுகிறாள். அந்த டாக்டர் சொன்னதுபோல் குறட்டை விடுவது அவ்வளவு ஆபத்தான விஷயமா? எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் குறட்டை விடுவதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இன்று விஷயம் தெரிந்து அனைவரும் குறட்டைக்கு குட்பை சொல்ல பயிற்சியெடுக்கின்றனர். கெட்டதிலும் ஒரு நல்லது என்று சொல்வார்களே அது இதைத்தானோ!
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் மார்ச் 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்