மஞ்சள் எனும் மகத்தான உணவு!

மஞ்சள் எனும் மகத்தான உணவு!

ஞ்சள் நம் வீட்டின் மங்களகரமான பொருள் மட்டுமல்ல, மகத்துவமான மருத்துவ உணவும்கூட. மஞ்சளின் தாயகம் இந்தியா என்பதால் உலகில் மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் இந்தியாவிற்கே. உலகின் 90% தேவையை இந்திய மஞ்சள்தான் பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் 1.6 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு, 6 லட்சம் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் சங்கிலி பார்பனி, தெலுங்கானாவின் நிஜமதாபாத், தமிழ்நாட்டின் – ஈரோடு இவை மூன்றும்தான் உலகிலேயே அதிக மஞ்சள் உற்பத்தி செய்யும் இடங்கள். ஒரு மஞ்சள் செடியில் ஒரே ஒரு கிழங்குதான் வளரும். அதன் கிளைகளாக வளர்வது விரலிமஞ்சள் இதை சமையலுக்குப் பயன்படுத்துவர். கிழங்கு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்துவர்.

இந்திய அறுவைச் சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் ‘சுஸ்ருதர்’ கிட்டத்தட்ட 1120 நோய்களுக்கு மருத்துவம் சொன்னவர். இவர்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மஞ்சளை ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுத்தியவர். மஞ்சளை தோல் நோய்கள் மற்றும் வலிகளைக் குறைக்கவும் உடலிலுள்ள நச்சுக்களை முறிக்கவும், உடலிலுள்ள கெட்டக் கொழுப்பைக் குறைக்கவும் அந்த நாளில் பயன்படுத்தியுள்ளனர். அவரைத் தொடர்ந்து மஞ்சளின் முக்கியக் குணமான குணப்படுத்தும் பண்பை நமது பாட்டிகளும் ‘பாட்டி வைத்தியம்’ மூலம் செய்துள்ளனர். அதுவே இன்றும் மஞ்சள் ஒரு சர்வ ரோக நிவாரணியாக இருப்பதற்குக் காரணம்.

மஞ்சள் சிறந்த நோய் எதிர்ப்பாற்றல் கொண்டது. காரணம் அதிலுள்ள புரதம், இரும்பு, கால்சியம், மங்கனிஸ், பொட்டாசியம், துத்தநாகம், காப்பர்  மற்றும் வைட்டமின் பி6, சி.இ., நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் இருப்பதுதான். சமையலில் மஞ்சள் சேர்ப்பதன் காரணமே அது சிக்கலான கார்போஹைட்ரேட்களை செரிக்க வைக்கும் என்பதால்தான் மேலும், அசைவ உணவுகளில் மசாலாவுடன் மஞ்சள் சேர்ப்பதற்குக் காரணம் மாமிச உணவின் பாதிப்புகளைக் குறைக்கத்தான்.

மஞ்சளுக்கு மஞ்சள் நிறத்தைத் தரும் ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள்தான் பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்த குர்குமின் புற்றுநோயை தடுக்கும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கும் என்பதால் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகள் மஞ்சளை சூப்பர் உணவாக அறிவித்தன.

பக்கவாதத்தை எதிர்க்கும் ஆற்றல் மஞ்சளில் இருப்பதை அமெரிக்க ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மஞ்சளில் உள்ள ரசாயானம் பக்கவாதத்தால் பாதிப்புக்குள்ளான மூளை செல்களை மீண்டும் செயலாற்ற உதவுகிறது என்கிறார்கள்.

தவறான உணவுப் பழக்கம் மற்றும் புகைப்பிடித்தலால் வரும் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு என்கிறார்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசன் ஆராய்ச்சியாளர்கள்.

ஆஸ்டிரோபோராசிஸ் எனும் எலும்பு சிதைவு நோயைத் தடுக்கும் ஆற்றல் மஞ்சளில் உள்ளது என்கிறார்கள் அமெரிக்க அரிசோனா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள். இதனால் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் இதனை மஞ்சள் தடுக்கும் என்கிறார்கள்.

‘கிளைக்கோமா’ எனப்படும் கண்திரவ அழுத்த நோய் பார்வையைப் பாதிக்கக்கூடியது. இந்நோய்யைத் தடுக்கும் ஆற்றல் மஞ்சளிலுள்ள குர்குமினுக்கு உண்டு என்கிறார்கள். விஞ்ஞானிகள் கண் நோய்கள் பலவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் உடையது மஞ்சள். சுடுநீரில் மஞ்சள்தூள் கலந்து, சொட்டு மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர்.

மஞ்சள் மூளையிலுள்ள நியூரான் நரம்பு செல்களின் பாதிப்பைச் சரிசெய்யும் ஆற்றல் உடையது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர் ஜெர்மனி ஆராய்ச்சி யாளர்கள். இந்தப் பாதிப்பு காரணமாக வருவதுதான் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய். காலை உணவில் ஒரு கிராம் மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் ஆரம்பக் கட்ட சர்க்கரை நோயையும் ஞாபக மறதி நோயையும் தவிர்க்கலாம் என்கிறார்கள்.

மஞ்சளை ஈரலைக் காக்கும் மருந்து என்கிறது ஆயூர்வேத மருத்துவம். மஞ்சள் காமாலை நோய்க்கு மஞ்சள் பொடியைத் தினமும் இருமுறை சூடுநீரில் சாப்பிட, மஞ்சள் காமாலை குறையும் என்கிறார்கள்.

இருமல், சளி தொந்தரவுக்கு மஞ்சள் நல்ல மருந்து, மஞ்சளை சுட்டு அதன் புகையை நுகர்ந்தால் சளி, இருமல் குறையும். சுடுநீரில் மஞ்சள் போட்டு ஆவியும் பிடிக்கலாம். பல இடங்களில் மஞ்சளை உள்மூல நோய்க்குப் பயன்படுத்துகிறார்கள்.

மஞ்சள் சிறந்த ஆன்டிஆக்சிடண்ட் என்பதால் தற்போது பலரும் இரவில் மஞ்சள் பாலை அருந்தி வருகின்றனர். அதனால் பல பலன்கள் உண்டு. மஞ்சள் பால் பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் தொற்றுகளைத் தடுக்கும். நுரையீரலில் சேரும் சளியை அகற்றி, சுவாச கோளாறுகளைத் தவிர்க்கிறது. புற்றுநோய் செல் வளர்ச்சியைத் தடுக்கிறது. கீல்வாதம் மற்றும் மூடக்குவாத வலிகளையும் குறைக்கிறது. ஹார்மோன் சுரப்பை சீர் செய்து பெண்களின் கருப்பை பிரச்னைகளுக்குத் தீர்க்கிறது. ஹார்மோன் சுரப்பை சீர் செய்து பெண்களின் கருப்பை பிரச்னைகளைத் தீர்க்கிறது. மண்ணீரல் மற்றும் கணையம் மற்றும் வயிற்றுப் பகுதி செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.

பாலில் கலக்கும் மஞ்சள் தூளை வீட்டிலேயே அரைத்து பயன்படுத்துவது நல்லது. பாக்கெட் மஞ்சள் தூளையும், பாக்கெட் பாலையும் தவிர்ப்பது நல்லது. மஞ்சள் பாலில் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவதுதான் சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள். மஞ்சளை தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்துவதே நல்லது காரணம் மஞ்சள் விரைவில் வெளிச்சத்தில் வேதிமாற்றம் அடையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com