பட்டாசு நகரின் 'புரட்சிப் பெண்': சிவகாசியின் முதல் பெண் MLA/அமைச்சர் ச. கீர்த்தனா!

70 கால அரசியல் வரலாற்றை மாற்றி எழுதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள 29 வயது சாதனையாளர் ச. கீர்த்தனாவின் எழுச்சிப் பயணம்.
TVK Minister S. Keerthana
TVK Minister S. KeerthanaAI Image
Updated on
MM strip
MM strip

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது ஒன்பது பேர் கொண்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் மற்றும் மிக இளைய அமைச்சர் என்ற மகுடத்தைச் சூடியுள்ளார் 29 வயதேயான ச. கீர்த்தனா.

'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் சிவகாசி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவரைப் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.

70 ஆண்டுகால கோட்டையைத் தகர்த்த வெற்றி:

சிவகாசி சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து சுமார் 70 ஆண்டுகளாக அது ஆண்களின் கோட்டையாகவே இருந்து வந்தது. அந்த நீண்டகால வரலாற்றைத் தகர்த்தெறிந்து, சிவகாசியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் (MLA) என்ற சாதனையை ச. கீர்த்தனா படைத்துள்ளார். தனது முதல் தேர்தலிலேயே, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை 11,697 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரசியல் களத்தை அதிர வைத்துள்ளார்.

TVK Minister S. Keerthana
TVK Minister S. Keerthana

கல்விப் பின்புலமும் அரசியல் முதிர்ச்சியும்:

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர் ச. கீர்த்தனா. மதுரை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், 2019-ல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் பெற்ற புள்ளியியல் கல்வி, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நவீன அரசியலை முன்னெடுக்க இவருக்குப் பெரும் உதவியாக இருக்கும் என இவர் நம்புகிறார்.

தேர்தல் வியூகங்களை வகுத்தவர்:

நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன், இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக அமைப்புகளான I-PAC (ஐ-பேக்) மற்றும் Showtime Consulting ஆகியவற்றில் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழகத்தில் தி.மு.க போன்ற கட்சிகளுக்காகத் தேர்தல் வியூகங்களை வகுத்தவர். இந்த அனுபவமே இவருக்கு இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சியையும், கள எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும் தந்துள்ளது.

பன்மொழித் திறனும் புலமையும் தேசியப் பார்வையும்:

ச. கீர்த்தனாவின் மிகப்பெரிய பலம் அவரது மொழித்திறன். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர். தமிழக அரசியலில் ஹிந்தி மொழி எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கும் நிலையில், "தலைவர் விஜய்யின் கொள்கைகளைத் தேசிய அளவில் கொண்டு சேர்க்கவே நான் ஹிந்தி மொழியைப் பயன்படுத்துகிறேன்" என்று இவர் கூறியது துணிச்சலான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திரா காந்தி முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை: அரசியலை மாற்றியமைத்த மர்மமான ஜோதிட கணிப்புகள்!
TVK Minister S. Keerthana

தொகுதி முன்னேற்றத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள்:

சிவகாசியின் முதுகெலும்பான பட்டாசுத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல்வேறு வாக்குறுதிகளை இவர் அளித்துள்ளார்.

தொழிலாளர் நல வாரியம்: தொழிலாளர்களுக்குக் காப்பீடு மற்றும் முறையான ஊதியம் வழங்க தனி வாரியம்.

சிறப்பு மருத்துவம்: ரசாயனத் தாக்கத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நவீன சிகிச்சை வசதிகள்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: மாணவர்களுக்குச் சர்வதேச உள்ளிருப்புப் பயிற்சி (Internship) மற்றும் பெண்களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சிகள்.

கட்டமைப்பு வசதிகள்: சிவகாசியில் கூடுதல் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துதல் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக இவர் அளித்துள்ளார்

இதையும் படியுங்கள்:
இந்த 8 பண்புகள் உங்களிடம் இருந்தால்... நீங்கள் தான் 'சூப்பர் வுமன்'!
TVK Minister S. Keerthana

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை முழக்கம்:

‘பணவசதி மற்றும் சாதிக்கு பயப்படத் தேவையில்லை; அரசியலில் துணிச்சல் இருந்தால் எதையும் சாதிக்கலாம்' என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

விஜய்யின் அமைச்சரவையில் மகளிர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளில் இவர் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வயது, சிறந்த கல்வித் தகுதி, தேர்தல் வியூக அனுபவம் எனப் பன்முகத் திறமை கொண்ட ச. கீர்த்தனா, தமிழக அரசியலில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார். பெண்களும் அரசியலில் தைரியமாக ஈடுபடலாம் என்பதற்கு சான்றாக விளங்குகிறார்.

logo
Kalki Online
kalkionline.com