வயதில் ஆணென்ன பெண்ணென்ன?

Marriage
Marriage

- மரிய சாரா

திருமணம் எனும் கோலாகல கொண்டாட்டத்தில் பெண் பார்க்கும் படலம் தான் முக்கியமான முதல் படி. அதில் பெண்ணிற்கு ஆணையும் ஆணிற்கு பெண்ணையும் பிடித்துவிட்டால், பிறகு மற்றவை பேசி முடிக்கப்பட்டு திருமணம் முடிக்கப்படும். அதில் முக்கியமாக இரு வீட்டார் பணபலம், மணமக்கள் படிப்பு, வரதட்சணை, ஜாதகம் என பல விஷயங்கள் இருந்தாலும், மணமக்களின் வயதும் முக்கியமாக பார்க்கப்படும். அதில் ஆணிற்கு அதிக வயதும் பெண்ணிற்கும் குறைவான வயதும் இருப்பதை உறுதி செய்த பின்னரே மற்றவை பேசப்படும்.

ஆனால் காதல் திருமணங்களில் சில நேரங்களில் இங்கு மாறுதல் நிகழ்கின்றது. வயதில் மூத்த பெண்ணும், வயதில் குறைந்த ஆணும் காதலின் புரிதலில் திருமணம் செய்துகொள்ளும் போது எத்தனை விமர்சனங்கள் இந்த சமூகத்தில்? அது எப்படி வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாம்? என்கிற கேள்வி எல்லோருமே கேட்டுவிடுகின்றனரே?

அதிலும் அந்த பெண்ணிற்கு முன்னமே திருமணமாகி கணவனை இழந்து அல்லது விவாகரத்து பெற்றிருந்தால், இன்னும் கூடுதலாக அந்த பெண்ணிற்கு குழந்தை இருந்தால், அவ்வளவு தான். "அய்யயோ இந்த பையனுக்கு வேற பெண்ணே கிடைக்கவில்லையா? அந்த பொண்ணு பணக்காரி போல, அதான் இந்த பையன் இப்படி முடிவெடுத்திட்டான்." என எட்டு விதமாய் பேசும் அந்த நான்கு நபர்களுக்கு இதில் என்ன இழப்பு என்பது தான் தெரியவில்லை.

திருமணம் செய்ய பெண்ணை விட ஆணுக்கு தான் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பதே ஆணாதிக்கம் தானோ. ஏன் பெண்ணிற்கு வயது கூடுதலாக இருந்தால் என்ன? அது அவர் அவர் விருப்பம். வாழப்போவது அவர்கள் தான். நமக்கு ஏன் எரிச்சலாக இருக்க வேண்டும்? பெண்ணிற்கு வயது ஆணைவிட குறைவாக இருந்தால் தான் அவளை அந்த ஆண் தனது விருப்பத்திற்கு ஆட்டிவைக்கலாம் என எண்ணிய மூடர்கூட தலைவர்கள் சிலர் விதித்த விதிதான் இது.

இதையும் படியுங்கள்:
ஸ்கூல் பேக் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
Marriage

கேட்டால், உளவியல், அறிவியல் என அளப்பார்கள். வயது, அழகு, வசதி எல்லாம் பார்த்து தான் காதல் வருமெனில் அது உண்மையில் காதல் இல்லை, அது வியாபாரம். அப்படி முடிவாகும் பல திருமணங்கள் தான் இன்றைக்கு நீதிமன்ற வாசலில் கால் கடுக்க நிற்கின்றன பிரித்துவைக்கச் சொல்லி. பணபொருத்தம், படிப்பு பொருத்தம், வயது பொருத்தம் பார்க்கும் பலர் மனப் பொருத்தம் பார்ப்பதில்லை. அப்படி மனப் பொருத்தம் அமையப்பெற்ற இருவர், அதில் பெண் வயதில் மூத்தவர் என்றால் என்ன ஆகிவிடப்போகிறது?

நல்ல திருமண பந்தம் அமைவதற்கு இங்கு தேவைப்படுவது வயது அல்ல, நல்ல புரிதல் தான். அப்படியான நல்ல புரிதல் இருக்கும் எந்த ஆணும் அல்லது பெண்ணும், தன்னை விட வயதில் மூத்தவரையும் மணக்கலாம், குறைந்தவரையும் மணக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com