
வாயும் வயிருமாக இருக்கிறாள்....
பேச்சு வழக்கில் பெண்கள் கருவுற்றிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள்.
கரு உருவான உடனேயே முதலில் தோன்றும் உறுப்பு இதயம்தான். பெண் கருவுற்ற ஆறாவது வாரத்திலேயே இதயம் துடிக்க ஆரம்பித்து விடும். அப்படி துடிக்கவில்லையெனில் அது முத்துப்பிள்ளையாகும். அதாவது வெறும் பிண்டமாகும். அதன் பிறகு அதை வளரவிடாமல் கலைத்து விடுவார்கள். இப்படி முக்கியமான உறுப்பாகத் திகழும் இதயத்தை மையப்படுத்தி 'வாயும் இதயமும்' என்று குறிப்பிடாமல் ஏன் வாயும் வயிறும் என்று கூறுகிறார்கள்?
இதயம் நின்றுப்போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறவே முடியாது. அவரை சவம் என்றுதான் நொடியில் பெயர் மாற்றி வைத்து விடுகிறோம். இப்படி பல சிறப்புகள் கொண்ட இதயத்தை குறிப்பிடாமல் கண்டதையும் பேசும் வாயோடு ஏன் கருவை மையப்படுத்தினார்கள்?
காரணம் இருக்கவே செய்கிறது. வயிற்றில் இருக்கும் கருவிற்கு உயிர் இருக்கும். உணர்வுகள் இருக்கும். கேட்கும் திறன் இருக்கும். பசிக்கும். தன் அம்மாவை பாதிக்கும் அனைத்து விஷயங்களும் அக்கருவையும் பாதிக்கும். ஆனால் பேச முடியாது. சுயமாக சாப்பிட முடியாது. பிறகு எப்படி சாப்பிடுகிறது? தாய் உட்கொள்ளும் உணவுதான் குழந்தைக்கான சாப்பாடு. அதுவும் எப்படி சாப்பிடுகிறது? அம்மாவின் வயிறுதான் அக்குழந்தைக்கு வாயாக இருக்கிறது. தாய் சாப்பிடும் உணவு தொப்புள்கொடி வழியாக கருவிற்குப் போகிறது. அதாவது தாயின் வயிறானது குழந்தைக்கு வாயாக இருக்கிறது என்பதைத்தான் 'வாயும் வயிறுமாக இருக்கிறாள்...' என்று குறிப்பிட்டார்கள்.
மிகவும் நுட்பமாக விஷயத்தை ஒரிரு வார்த்தையில் அடக்கிய நம் மூதாதையர் அதிபுத்திசாலிகள்தானே!
('தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்ற பழமொழி இங்கே ஒப்புநோக்கத் தக்கது. குழந்தைக்கும் சேர்த்து தாயே உண்டவள், குழந்தைப் பெற்றதும் அவரவர் வயிற்றை அவரவர்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்... ஒருவர் பசிக்கு இன்னொருவர் உண்ணமுடியாது என்பதைத்தான் இப்படி குறிப்பிட்டார்கள்.)
இந்த வாக்கியத்திற்கு இன்னொரு விதத்திலும் அர்த்தம் இருக்கிறது. பார்ப்போமா;
வாய் – பாலுண்ணும் குழந்தை வயிறு – வயிற்றிலுள்ள குழந்தை
சொல் பொருள் விளக்கம்:
வாயும் வயிறும் – 'அவள் இப்பொழுது வாயும் வயிறுமாக இருக்கிறாள்’ என்றால் வாய்க்கு எடுத்து ஊட்டும் பிள்ளையொன்றும் வயிற்றுப்பிள்ளையொன்றுமாக இருக்கிறாள் என்பது விளக்கமாம். அதனால், ‘அவளால் வேறு வேலை என்ன செய்ய முடியும்’ என்று பரிந்து கூறுவதாக அர்த்தம்.
சில குடும்பங்களில் அவளைப் படுத்தும் பாட்டைப் பார்த்து "வாயும் வயிறுமாக இருப்பவளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, இடைஞ்சலாவது செய்யாமல் இருக்க வேண்டாமா?” என்று மூதாட்டியார் கூறுவது இயல்பு.
கைக் குழந்தையுடன் இருக்கும் அவள்மேல் இரக்கம் காட்டி அவளுக்கு வேண்டும் உதவிகளும் செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உணவு அளிப்பவளும் அவளே; வாய்க் குழந்தைக்கு உணவு ஊட்டுபவளும் அவளே. இரு குழந்தைகளுக்கும் உடலில் ஊட்டம் வேண்டுமே என்ற பரிதாபத்தில் வந்த சொற்றொடர் தான் இந்த ‘வாயும் வயிறும்’.