
"நம்முடைய பாரத பூமிக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசத்தின் பெருமைமிகு பெண்கள் பெருமிதம் சேர்த்து வந்திருக்கிறார்கள். சாவித்திரிபாய் ஃபுலே அவர்கள், ராணி வேலு நாச்சியார் அவர்கள் போன்றோர் இப்படிப்பட்ட இரண்டு ஆளுமைகள். அவர்களுடைய தனித்தன்மை ஒவ்வொரு யுகத்திலும் பெண்சக்தியை முன்னேற்றும் பாதையைத் தொடர்ந்து துலக்கும் விளக்குத் தூண்கள் போன்றவை. தமிழகத்தின் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சூட்டிய புகழாரம்தான் இது.
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய எத்தனையோ வீரப்பெண்களை இந்த பாரததேசம் கண்டுள்ளது. அதில் கணவரை இழந்தும் துவளாமல் தன் மக்களைக் காப்பாற்ற போர்க்களத்தில் வாளேந்திய ராணி வேலுநாச்சியார். தனித்துவ மிக்க வீரமங்கையாக இன்றளவும் நம் நினைவுகளில் வாழ்கிறார்.
இவரின் வீரம் மற்றவர்கள் போல சாதாரண வீரம் அல்ல. எதிராக வந்த மாபெரும் படைகளை சளைக்காமல் எதிர் கொண்டு வீழ்த்திய வீரம். இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை வென்றடக்கி கம்பீரமான ராணியாக வாழ்ந்து மறைந்தவர்.
வேலுநாச்சியார் பிறந்தது ‘சக்கந்தி’’ என்னும் இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். தந்தை முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தவர்தான் வேலுநாச்சியார். "விளையும் பயிர் முளையிலே தெரியும்" எனும் பழமொழியை நிரூபித்தவர் இவர். ஆம். சிறுவயதில் வேலுநாச்சியார் அதிகம் அறிந்த ஒரே வார்த்தை வீரம். தெரியவே தெரியாத வார்த்தை பயம். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார் இவர். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் சிறந்து விளங்கினார். அந்தக் காலத்திலேயே பத்து மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர்1746 ம் வருடம் வேலு நாச்சியாரை மணமுடித்து சிவகங்கைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. அடுத்த குறி சிவகங்கை. சிவகங்கையின் வீரம் செறிந்த மன்னரான முத்து வடுகநாதர் மற்றும் அவருக்கு உற்ற துணையாக இருந்த ராணி வேலு நாச்சியார், தளபதிகள் மருது சகோதரர்களை மீறி சிவகங்கையைத் தாக்க நவாப்புக்கு உதவியாக ஆங்கிலேயேப் படைகள் வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கிய நவாப் படைகளின் தாக்குதலுக்கு பலியானார்கள் மன்னரும் அவரது படைவீரர்களும்.
அங்கிருந்து தப்பிய ராணி வேலு நாச்சியார் இழந்த மண்ணை மீட்கும் சபதத்துடன் தளபதிகளான மருது சகோதரர்களின் உதவியுடன் தலைமறைவாக வாழ்ந்து நவாப்பின் எதிரியான ஹைதர் அலியிடம் உதவி கேட்டு ஆண் போன்ற மாறு வேடத்தில் சென்றார். ராணியின் துணிவைக் கண்டு வியந்த ஹைதர் அலி தந்த ஆதரவுடன் தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.
ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப் படைகளை எதிர்த்துப் போரிட்ட வேலு நாச்சியார். முதலில் காளையார் கோயிலைக் கைப்பற்றினார்.
சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் பரவி நின்ற ஆங்கிலேயப் படைகளை விவேகமாக சிந்தித்து மருது சகோதரர்களுடன் இரு படையாகப் பிரிந்து தோற்கடித்து சிவகங்கையை மீட்டார். எப்படி?
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை எதிர்பாராத ஆங்கிலேயப் படைகள் தோற்று ஓடின. சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார்.
பெண் என்றால் வீரத்தின் அடையாளமாகவும் இருக்க வேண்டும் என்பதை அன்றே நிரூபித்துக் காட்டியவர். ராணி வேலு நாச்சியார். முதன்முறையாகத் படையில் பெண்களுக்கென்று ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தியோர் பட்டியலில் இராணி வேலு நாச்சியாரின் பெயர்தான் முன்னணி வகிக்கிறது. அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கும், பெண்மையின் தீரத்துக்கும் சாட்சியாக இன்றும் இருக்கிறது.