மனித வாழ்வின் சாரத்தை உணர்த்திய விவேகானந்தர்

ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்த தினம் - தேசிய இளைஞர் தினம்
மனித வாழ்வின் சாரத்தை உணர்த்திய விவேகானந்தர்
Published on

சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை. விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இராமகிருஷ்ணருடன்
றை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். 1893-இல் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு, அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுகள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவுகளால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

கல்கத்தாவில் ராமகிருஷணர்மகிமை இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவு களிலும், எழுத்துகளிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

தமிழர் பற்றி விவேகானந்தர்

சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு (Euphrates) நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.

 அஞ்சல் தலைகள்

சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறையினர் அஞ்சல் தலைகள் வெளியிட்டனர். 

விவேகானந்தர் நினைவுகள்

1.விவேகானந்தர் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு பண்ணையைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது அந்தப் பண்ணையில் இருந்த ஒரு காளை, கட்டை அவிழ்த்துக் கொண்டு ஆவேசமாக ஓடி வந்தது. அங்கிருந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர். ஆனால் விவேகானந்தர் மட்டும் அசையாமல் நின்று காளையையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காளை அவருக்குப் பக்கத்தில் வந்து சிறிது நேரம் அவரை ஏறிட்டுப் பார்த்து விட்டுத் திரும்பிப் போய்விட்டது. பின்னர் அங்கிருந்த பணியாளர்கள் விவேகானந்தரை “சுவாமி! எந்த தைரியத்தில் நெருங்கி, "சுவாமி! அசையாமல் நின்று கொண்டிருந்தீர்கள்..? என்று கேட்டனர்.அதற்கு விவேகானந்தர், என்னைத் தூக்கி எறிந்தால் நான் எவ்வளவு உயரம் மேலே போயிருப்பேன் என்று கணக்கிட்டுக்கொண்டு இருந்தேன்..'என்றாராம் அமைதியாக.விவேகானந்தரின் உடல் பலமும் மனோ பலமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 2. சுவாமி விவேகானந்தர் ராஜஸ்தானுக்கு ஒரு முறை சென்றிருந்தார். பாலைவனங்கள் நிறைந்த பகுதியான அங்குக் கடும் வெப்பம் நிலவியது. வெயிலின் கொடுமையால் 'லூ' என்ற நோய் மக்களை வாட்டிக் கொண் டிருந்தது. அதிலிருந்து காத்துக் கொள்வதற்காக அவர்கள் பெரிய தலைப்பாகை கட்டிக் கொண்டனர். விவேகானந்தரை அந்நோய் தாக்காமல் இருப்பதற்காக தலைப்பாகை கட்டிக் கொள்ளச் சொன்ன அரசர், தானே அவருக்கு தலைப்பாகை கட்டி விட்டார். அதோடு தலைப்பாகை கட்டும் விதம்பற்றியும் சொல்லிக் கொடுத்தார். அன்று முதல் தலைப்பாகை கட்ட ஆரம்பித்தார் சுவாமி விவேகானந்தர். பின்பு அதுவே அவரது அடையாளமாகவும் ஆகிவிட்டது.

மறைவு
1902 ஆம்  ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com