தொண்டைப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டுமா? இது உங்களுக்கு தேவைப்படலாம்!

தொண்டைப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டுமா? இது உங்களுக்கு தேவைப்படலாம்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி,ஜீரம் காரணமாக பலருக்கு தொண்டைக் கட்டிக் கொண்டு கரகரப்பு, கமறல், பேச முடியாத சூழல் உருவாகும். புதிய இடங்களில் அருந்தும் தண்ணீர், குளிர்பானம், சீதோஷ்ண நிலையால் தொண்டைக் கட்டு, எரிச்சல், வலி ஏற்பட்டு எச்சில் கூட விழுங்க முடியாமல் சிரமமாக இருக்கும்.இதை வீட்டிலேயே எளிய முறையில் தடுப்பதோடு,தற்காத்துக் கொள்ளலாம்.

*அதிக சூடு,குளிர்ந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

*சப்தமாக பேசுவதைப் குறைத்துக் கொள்ளலாம்.

*தொடர்ந்து பேச வேண்டிய சூழ்நிலையில் வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.

*சிகரெட், பான்பராக் போடும் பழக்கத்தை விட வேண்டும்.

*புகை பிடிக்கும் இடத்தை விட்டு தள்ளி இருக்க தொண்டைக்கு பாதிப்பு வராது.

*தினமும் தூங்கும் போது சூடான பாலில் மஞ்சள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு சற்று ஆறியதும் பனங்கற்கண்டு சேர்த்து அருந்த தொண்டைக் கட்டு குணமாகும்.

*இஞ்சியுடன் 4 கிராம்புகளைச் சேர்த்து விழுதாக அரைத்து, அதை லேசாக சூடாக்கி தொண்டை மீது படியுமாறு பூசலாம்.

*அதிமதுரம், சிற்றரத்தை, சுக்கு ஆகியவற்றை பொடித்து அதை பாலில் கலந்து கொதித்ததும் வடிகட்டி அருந்த தொண்டைக் கட்டு, கமறல் சரியாகும்.

*முல்லைச் செடியின் இலைகளை நெய்யில் வதக்கி, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

*வசம்பு துண்டை வாயில் போட்டு சாறை சிறிது சிறிதாக விழுங்க தொண்டைக்கட்டு குணமாகும்.

*உப்பை வெந்நீரில் போட்டு வாய் கொப்பளிக்க தொண்டைப் பிரச்சனைகள் தீரும்.

*கொதிக்க வைத்த நீரில் வேப்பம்பூவைப் போட்டு, அதிலிருந்து வெளிவரும் ஆவியை நுகர தொண்டை பாதிப்புகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

*தண்ணீரில் நான்கு துளசி இலைகளை தினமும் போட்டு அதை அருந்த தொடர் இருமல் நிற்கும்.

*மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச் சாறு, தேன் கலந்து அருந்த நல்ல பலன் கிடைக்கும்.

*அன்னாசிப் பழ சாறுடன் மிளகுத்தூள், தேன் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

*மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து அதில் தண்ணீர் கலந்து அருந்த தொண்டை தொடர்பான பிணிகள் நீங்கும். குரல்வளம் பெருகும்.

*மா இலைச் சாறுடன் அதே அளவு தேன், பால், பசும் நெய் கலந்து சாப்பிட கட்டைக் குரலும் இனிமையாக மாறும்.

*விளாம்மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வறட்டு இருமல், மூச்சிறைப்பு, வாய் கசப்பு நீங்கும்.

*முருங்கை வேர், பட்டையை வெந்நீரில் போட்டு கொதிக்க விட்டு இறக்கி அதில் தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க நல்ல குணம் கிடைக்கும்.

*சுண்ணாம்புடன் தேன் கலந்து தொண்டையில் சிறிதாக தடவ தொண்டைக்கட்டு குணமாகும்.

*இஞ்சிச் சாறு, தேன், துளசிச் சாறை கலந்து குடிக்க சளி, இருமல், நெஞ்சில் கபம் நீக்கி நல்ல சுகம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com