

கடந்த ஜனவரி 29-ம்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். வேலைவாய்ப்பு, உற்பத்தித் துறை, மற்றும் பெண் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்க முடியும். 2050-க்குள் பெண்களின் பங்கேற்பை 55% வரை அதிகரிப்பது, நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு (GDP) மிக முக்கியமானது
என வலியுறுத்துகிறது.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 1-ம்தேதி) மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும், நிதியமைச்சர், நாட்டின் கைத்தறி பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புடவை அணிவது வழக்கம்.
அதன்படி நேற்று, இந்தியாவின் பிரசித்தி பெற்ற கைத்தறி நெசவுகளில் ஒன்றான அடர் இளஞ்சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்திருந்தார். ஊதா நிற கட்டம் போட்ட புடவையில், இளம் பொன் பழுப்பு நிற பார்டர் இடம் பெற்றிருந்தது.
2026-27ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் மக்களவையில் காலை 11:02 மணிக்கு வாசிக்க தொடங்கி பிற்பகல் 12:25 மணிக்கு நிறைவு செய்தார்.
மத்திய பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதற்கான முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தனது பட்ஜெட் உரையில், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதற்கும், நிறுவனங்களின் உரிமையாளர்களாக பெண்கள் மாறுவதற்கும் உதவும் வழிமுறைகளை கோடிட்டுக் காட்டினார்.
மகளிர் குழுவினர் சொந்த கடைகள் தொடங்கலாம் :
இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டும் லட்சுமிபதி தீதி திட்டத்தில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் லட்சுமிபதி தீதிகளாக மாறி உள்ளனர்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மகளிர் சுயஉதவி குழுவினர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் ‘ஷீ மார்ட்’ (SHE Mart) எனப்படும் சொந்த சில்லரை விற்பனை கடைகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்று நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘SHE Marts’ன் முதன்மை குறிக்கோள், கிளஸ்டர் மட்டத்தில் குறிப்பாக விவசாயக் கிளஸ்டர்களில் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்கு ஒரு சந்தையை வழங்குவதாகும். இது முதன்மையாக பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்களுக்கானது. இது பெண்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, கிராமப்புறப் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு வலுவான சந்தை வாய்ப்பை உருவாக்குவதையும், உள்ளூர் தயாரிப்புகளுக்கு அதிக அங்கீகாரத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம், சுய உதவிக் குழுக்கள் போன்ற உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துவதோடு, பெண் தொழில்முனைவோர் பெரிய சந்தைகளை அடையவும், தங்கள் பிராண்டுகளை உருவாக்கவும், நிலையான வருமான ஆதாரங்களை உருவாக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்குச் செல்ல உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மாவட்டந்தோறும் பெண்கள் விடுதி :
நாடு முழுவதும் 700-க்கு மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. மாவட்டம்தோறும் ஒரு பெண்கள் விடுதி அமைக்கப்படும். மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவ கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், பகுப்பாய்வு கூடங்கள் ஆகியவற்றுக்கு கடனுடன் இணைந்த மூலதன மானிய ஆதரவு திட்டம் தொடங்கப்படும். பெரிய தொழிற்சாலை தளவாட மையங்களுக்கு அருகே 5 பல்கலைக்கழக நகரியங்கள் அமைக்கப்படும்.
மேற்படிப்புக்காக நகரத்தை விட்டு வெளியேற விரும்பும் பெண் பிள்ளைகளுக்கு 2026–27 மத்திய பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்விக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று கூறியுள்ளது.
ஆண் பிள்ளைகள் வெளிநாட்டில் படித்தால், பெற்றோர்கள் இப்போது ஆயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்கலாம். ஏனெனில், கல்விக்கான TCS வரியை அரசாங்கம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைத்துள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் இந்த வரி விதிக்கப்படுகிறது.
அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையில் திறமைகளை மேம்படுத்துவதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், 15 ஆயிரம் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் இதுபற்றிய திறன்களை வளர்க்கும் ஆய்வகங்களை அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து :
17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை குறைந்த செலவில் பெற முடியும். புற்றுநோய் பாதிப்பில் சிகிச்சை பெறுவதில் அதற்கான செலவு அதிகமாக உள்ளது.
தற்போது பட்ஜெட்டில் இந்த அறிவிப்பின் மூலம் மருந்துகள் விலை குறையும். பொதுவாகவே புற்றுநோய் தொடர்பான மருந்துகளின் விலை அதிகமாக இருந்து வருகிறது. வரி ரத்தால் இனி குறைந்த விலையில் மருந்துகளை பெறமுடியும்.
பெண்கள் ஏமாற்றம் :
தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் அதன் மீதான வரியை மேலும் குறைப்பது குறித்து மத்திய பட்ஜெட்டில், அறிவிப்பு வெளியாகும் என பெண்கள் அதிகமாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'கடந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.26,889 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்தாண்டுக்கான 2026-27 மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவிதமான முக்கியமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அந்த வகையில் இந்த பட்ஜெட் பெண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை'
என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.