முதுமையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அவர்களுக்கு என்ன தேவை?

Old women
Old women
Published on

2011ஆண்டின் இந்திய மக்கள் தொகைக்கணக்கின்படி 60வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விகிதம் 1000:1022 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. பெண்கள் ஆண்களை விட அதிக வாழ்நாளை பெற்றிருப்பதை ஆய்வுகளும், அனுபவங்களும் நமக்கு உணர்த்தியுள்ளன. ஆனால் முதுமையில் ஆண் துணையின்றி பெண்கள் தனித்து விடப்படுவதையும் புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பிறந்தது முதல் பெற்றோர், மணமான பிறகு கணவன், கணவனுக்கு பிறகு மகன்கள் என ஒவ்வொரு நிலையிலும் பிறரைச் சார்ந்து வாழ்பவள் பெண். தனக்கென வாழாதவள் பெண். ஆண்களை விட நீண்ட நாள் வாழும் முதுமைப்பெண்கள் மனநலமும் உடல்நலமும் வெகுவாக பாதிக்கப்பட்டு சவால்களுடன் மீதி வாழ்நாட்களை கடந்து முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

முதுமையில் ஒரு ஆண் சுதாரித்துக் கொண்டு வாழ்வது போல ஒரு பெண்ணால் வாழ முடிவதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். வாழ்நாள் முழுவதும் தனக்கென வாழாத பெண் முதுமைக் காலப் பராமரிப்பில் தொலை நோக்கு பார்வையுடன் இருப்பதில்லை, குறிப்பாக பொருளாதார சுய சார்பை உறுதிப்படுத்திக் கொள்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

வசதியுள்ளவர்கள் வங்கியில் உள்ள பணத்திற்கும் அசையா, மற்றும் அசையும் சொத்துக்களுக்கு வாரிசாக மனைவியை முன்மொழிய மறக்கக் கூடாது. இச்செயல்பாடு முதுமையில் உடலும் மனமும் நலிவுற்றாலும், அவர்களுக்கு ஓரளவு கவுரத்தைத் தேடித் தரும்.

அடிமை வாழ்க்கைக்கே பழக்கப்பட்ட பெண்கள் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு, தனது பிற்கால பாதுகாப்பான எதிர்கால வாழ்வுக்காக குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தவேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் எவ்வித சிரமமும் யாருடைய துணையுமின்றியும் வாழ்வதற்குத் தேவையான வாழ்வியல் திறன்களை அவர்கள் பெறமுடியும். வங்கிகளுக்கும் கொடுக்கல், வாங்கல் உள்ள பிற இடங்களுக்கும் கணவன்மார்கள் மனைவியை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வைப்பது பிற்காலத்தில் பெண்கள் பணம் சார்ந்த விஷயங்களில் ஏமாற்றப்படுவதை தடுக்கும் அல்லது குறைக்கும்.

நோய்வாய்ப்பட்டு படுத்துக்கிடக்கும் கணவனுக்கு பணிவிடைசெய்யும் மனைவி நோய்வாய்ப்பட்டால், அவளை பராமரிக்க மகனோ, கணவனோ காட்டும் அக்கறை குறைந்த அளவே. இந்த நிலை மாற அனைத்து நிலைகளிலும் உடனடி முயற்சிகள் தேவை. பல பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதாலும் சமூக கட்டமைப்பின் தாக்கத்தினாலும் தனது உடல் உபாதைகளை வெளியே சொல்லுவதே இல்லை. இது முதுமை கொடுக்கும் பரிசு என தகுந்த மருத்துவ சிகிச்சை கூட எடுத்துக்கொள்ளாமல் அன்றாட வாழ்வை கடவுள் விட்ட வழி என கடத்தி வருகிறார்கள். கணவனோ மகன்களோ அவர்களை கட்டாயப்படுத்தி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லும் பொறுப்பிணை ஏற்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
நெசவுக்கு நியாயம் செய்வோம்! (மனசுக்குள் அழுத அனுபவம்)
Old women

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஒய்வூதிய விவரங்கள், தனக்குப் பிறகு தனது ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற எடுக்க வேண்டிய வழிமுறைகள், அதற்கான விண்ணப்ப படிவங்கள், இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள், உதவக்கூடிய உண்மையான நண்பர்களின் தொடர்பு எண்கள், முதுமைப்பெண்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் முதுமைப்பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி ஒரு காலக்கட்டத்தில் தெரிந்து கொள்ளவேண்டும். அவற்றை தனக்கு புரியும்விதத்தில் தானே எழுதி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

முதுமைப்பெண்கள் மகன் ,மகள் மற்றும் கணவனால் கண்ணியமாக நடத்தப்படுவதை அரசும் தன்னார்வ அமைப்புகளும் உறுதிப்படுத்தவேண்டும்.

கணவனை இழந்த பிறகு ஒரு முதுமைப் பெண்ணிற்குத் தேவையானது கழிவிரக்கம் அல்ல. அவளுடைய பாசத்தை வாங்கி வளர்ந்தவர்கள் அவளுக்கு அதை திரும்ப வட்டியுடன் தரவேண்டும். அவர்களுடன் பேச கனிசமான நேரத்தை ஒதுக்கவேண்டும். பேரன் பேத்தியுடன் காலத்தைக் கழிப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறக்கூடாது. யோசித்துப் பார்த்தால் அவர்கள் மகிழ்வாக மீதமுள்ள காலத்தை வாழ்வதற்கான புதிய வழிகள் நம்முடைய மனதிலேயே தோன்றும்.

மொத்தத்தில் முதுமைப்பெண்கள் நலனில் மேல் நம் அனைவருக்கும் எந்த நாளும் முழு அக்கறைத் தேவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com