கர்ப்ப காலத்தில் வயிறு மற்றும் இடுப்பை சுற்றி அரிப்பு ஏற்படுவது சாதாரணமானது தான். அரிப்பு பல காரணங்களால் ஏற்படுகின்றது.
a) ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் சருமத்தை வறட்சியாக்கி அரிப்பை ஏற்படுத்தும்.
b) கருப்பை வளரும் பொழுது வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தோல்கள் விரிவடையும். அதன் காரணமாக அரிப்பு ஏற்படும்.
c) கர்ப்ப காலத்தில் சருமத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூட லேசான அரிப்பு ஏற்படலாம். கர்ப்பத்தின் பிற்பகுதியில் வயிற்றின் தோல் நீட்டப்படும் சமயங்களில் அரிப்பு ஏற்படும். இம்மாதிரி சமயங்களில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
d) கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது அரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆசன வாயைச் சுற்றி வீங்கிய நரம்புகள், மூலநோய், அரிப்பு, வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
e) அரிப்பு சில நேரங்களில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் நலக் குறைபாட்டின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
f) சில சமயங்களில் மகப்பேறியல் கொலஸ்டாசிஸ் என்ற தீவிரமான பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆனால் இவை தீவிரமாக இருந்தால் தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?
*அரிப்பு அதிகமாக இருந்தாலோ அல்லது பரவினாலோ
*அரிப்புடன் வேறு அறிகுறிகள் படை நோய், வீக்கம் போன்றவை இருந்தாலோ
*ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் அரிப்பு நீடித்தாலோ
*அரிப்பு கர்ப்பத்தின் பிற்பகுதியில் ஏற்பட்டாலோ,
*அரிப்பு காரணமாக சரியாக தூங்க முடியாவிட்டாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
அரிப்புகளை போக்க தடுப்பு மற்றும் சிகிச்சை:
a) நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
b) சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.
c) இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும், குளிர்ந்த நீரில் குளிப்பதும், அதிகமான வெப்பத்தை தவிர்ப்பதும் நல்லது. தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதும் அரிப்பையும், நமைச்சலையும் போக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் தாமாக எந்த மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன்பு தகுந்த மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசித்து விடுவது நல்லது. அவர் உங்களுக்கு எந்த மருந்துகள் பொருத்தமானது என்பதை அறிந்து பரிந்துரைப்பார்.