2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அடைந்த வெற்றியின் பிறகு, அமெரிக்க மகளிரிடையே, தங்களுடைய உரிமைகள் பறி போய் விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. டிரம்பிற்கு வாக்களித்ததன் மூலம், ஆண்கள், பெண்களின் உரிமைக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்ற கருத்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பல மாகாணங்களிலும், குடியரசுக் கட்சியின் தூண்டுதலின் காராணமாக கருக்கலைப்பு தடை செய்யப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
2010ஆம் ஆண்டில் தென் கொரிய நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட '4பி இயக்கம்' போல, தங்களுடைய உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள, அமெரிக்க மகளிரும், இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது.
4பி இயக்கம் என்றால் என்ன? 'பி' என்ற கொரியன் மொழியின் எழுத்துக்கு 'இல்லை' என்று பொருள்.
தென் கொரிய கலாச்சாரம் ஆணாதிக்க கலாச்சாரம். கன்ஃபூசியஸ் சித்தாந்தம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகப் பெண்கள் கருதுகிறார்கள். இந்த சித்தாந்தத்தின் படி, பெண்கள் ஆண்களுக்கு கீழ் படிய வேண்டும். இளமையில் தந்தைக்கு, திருமணமான பின்பு கணவனுக்கு, அவர்களின் முதுமைப் பருவத்தில் மகனுக்கு என்று ஆண்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் வாழ வேண்டும். அவர்களுக்கு என்று சுய சிந்தனை கூடாது.
பெரும்பாலான கொரியன் குடும்பத்தில், வீட்டு வேலை செய்வது, குழந்தைகள் மற்றும் முதியோர்களைப் பராமரிப்பது ஆகியவற்றில் மகளிரின் பங்கு மட்டுமே இருந்து வந்தது. கொரியாவில் மகளிருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வந்தது. இந்த வன்முறைக்கு மூல காரணம் பெரும்பாலும் அந்தப் பெண்ணின் கணவன். வேலை செய்யும் இடங்களில், ஆண் மற்றும் பெண் அலுவலர்களிடையே ஊதியத்தில் வித்தியாசம் இருந்து வந்தது. இந்த வித்தியாசம் 26 சதவிகிதம் அல்லது அதற்கும் மேல்.
இந்த காரணங்களால், இந்த இயக்கத்திற்கு பெண்களிடையே பரவலான வரவேற்பு கிடைத்தது.
பி4 – நான்கு இல்லைகள்.
பிஹோன் – ஆணுடன் திருமணம் இல்லை.
பிச்சுல்சன் – குழந்தை பிறப்பு இல்லை.
பியோனே – ஆண்களுடன் காதல், வெளியே செல்வது இல்லை.
பிசெக்சு – ஆணிடம் பாலினத் தொடர்பு இல்லை.
2016ஆம் ஆண்டு, சியோல் நகரில், இரயில் நிலையம் ஒன்றில், ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டாள். அந்த விவரம் வலை தளத்தில் வைரலாகப் பரவி, பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற கொடுமைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இதற்குக் காரணமான ஆணாதிக்க நெறிமுறைகளைத் தகர்த்து எறிய வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற, மகளிர் பங்கேற்ற எதிர்ப்பு கூட்டங்கள் நாடு தோறும் நடந்தன.
2016ஆம் ஆண்டு, தென் கொரியாவில் மாநிலங்கள் வாரியாக, கருத்தரிக்கும் வயதில் எத்தனை மகளிர் இருக்கின்றனர் என்ற வரைபடத்தை அரசு வெளியிட்டது. “நாங்கள் பிள்ளை பெறும் இயந்திரமா?” என்று மகளிரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த 4பி இயக்கத்தினால், தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்து, தற்போது ஒரு பெண்ணிற்கு, 0.72 குழந்தை என்ற விகிதத்தில் உள்ளது. அரசு எடுத்த கணக்கெடுப்பின் படி, 48 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை.
இந்த இயக்கத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதனை எதிர்ப்பவர்கள், நாட்டைப் பற்றிக் கவலைப்படாத சுயநலவாதிகளின் இயக்கம் என்றும், சமூக விரோதிகள் மற்றும் ஆண் இனத்தை விரும்பாத பெண்கள் குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கில் நடத்துகின்ற இயக்கம் என்றும், ஓரினச் சேர்க்கையில் விருப்பம் உள்ள பெண்கள் நடத்துகின்ற இயக்கம் என்றும் பல பெயரிட்டுத் தூற்றுகிறார்கள்.
ஆனால், இந்த இயக்கத்தினால், பெண்கள் தங்களுடைய எதிர் காலத்தைப் பற்றித் தெளிவாக சிந்தித்து முடிவு எடுக்க முடிகிறது என்றும், அவர்கள் சுதந்திரமாக சிந்திக்கும் தன்மையைப் பெறுவதாகவும் இதனை ஆதரிப்பவர்கள் கருதுகிறார்கள்.
தென் கொரியாவில் ஆரம்பித்த இந்த இயக்கம் சைனா, ஜப்பான் நாடுகளில் கால் பதித்து, தற்போது அமெரிக்காவில் தலை தூக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.