
நட்பு நம் வாழ்க்கையில் விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷம். இது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. குழந்தை பருவத்தில் தொடங்கும் நட்பு என்ற அற்புதமான பிணைப்பு முதுமை வரை தொடர்கிறது. நட்பு, என்பது வயது, மொழி, இனம், நாடு போன்ற எல்லா எல்லைகளையும் தாண்டிய உறவு.
குழந்தைப் பருவ நட்பு தூய்மையானது. ஏற்ற தாழ்வுகள் பேதங்களற்ற அருமையான உன்னத உணர்வு. பள்ளிப் பருவ நட்பு நெருக்கமாகி ரகசியங்கள், ஆசிரியர்கள் பற்றிய விமர்சனங்கள்,மாணவனைப் பற்றிய கிண்டல்கள், கேலி என ஜாலியாக போகும் உற்சாகமான காலம்.
கல்லூரி நட்பு காதல், எதிர்கால லட்சியம் போன்ற பலவற்றை நண்பர்களுடன் பகிரும் பருவம். சில நட்புகள் வாழ்நாள் முழவதும் தொடரும் நட்பாக இருப்பதுண்டு.. தொழில் வாழ்க்கை நட்பு, வேலை, குடும்பம் போன்றவற்றால் நேரம் குறைவாகினும் மனதுக்கு இதம் தரும் நட்புகள் கிடைப்பது பெறும் பேறு.
பல வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், தனக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையை மகப்பேறற்ற தன் உயிர் தோழிக்கு தத்துக் கொடுத்துவிட்டார். தன் வீட்டிலேயே பலத்த எதிர்ப்புகள் வந்தாலும் கலங்காதவராய் தன் தோழிக்காக இந்த தியாகத்தைச் செய்தார். நட்பு என்பது வலிமையானது மற்றும் ஆத்மார்த்தமானது.
சுகமும் துன்பமும் கலந்த வாழ்க்கையில் நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மற்றும் புரிந்து ஆறுதல் அளிக்கும் நண்பர்கள் ஒரு வரப்பிரசாதம். எனக்கு அவ்வகையில் இரண்டு சிநேகிதிகள் அமைந்தது என் பாக்கியம். அலுவலக ரீதியாக சந்தித்து பின் நெருங்கிய நண்பர்களானோம்.
கல்கி அவர்கள் ‘சிவகாமியின் சபதம்’ நாவலில், மாமல்லர் மற்றும் பரஞ்சோதி இடையே உள்ள நட்பை விவரிக்கும் போது,
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்” என்ற திருக்குரளை மேற்கோள் காட்டியிருப்பார்.
சாதாரணமாக ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்து கலந்து பழகுவதனால் நட்பு உண்டாகி வளர்கிறது. ஆனால் இரண்டு பேருக்குள் ஒத்த உணர்ச்சி இருக்கும் பட்சத்தில், மேற்சொன்னவாறு கலந்து பழகுதல் இல்லாமலே நட்பாகிய தலைசிறந்த உறவு ஏற்பட்டுவிடும் என்றும் விளக்கியிருப்பார்.
நாங்கள் தோழிகள் மூன்று பேரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளமாட்டோம். ஆனால் எங்கள் எண்ணங்கள் ஒரே அலைவரிசையில் ஒத்திருக்கும். எப்போதாவது சந்திக்கும்போது எங்களின் உரையாடல்கள் எங்களை உற்சாகப்படுத்தக் கூடிய நேர்மறையான நல்ல விஷயங்களாக மட்டுமே இருக்கும். இது மேலும் புத்துணர்ச்சி தந்து எங்களை ஊக்குவிக்கும்.
நட்பு என்பது வாழ்வின் சிறந்த பரிசு. வயதைக் கடந்து மனதை இணைக்கும் மிகச் சிறந்த உறவு. நட்பு என்பது பாசம், புரிதல், ஆதரவு, பரஸ்பர மரியாதை மட்டுமின்றி உன்னதமான ஒரு உறவு.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. என்பது பொன்மொழி.