
மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் முக்கியமான விஷயங்கள். சில நட்புகள் நன்மை தரும், சில நட்புகள் தீமை பயக்கும். எது எப்படி இருந்தாலும் இளம் வயதில் ஏற்படும் நட்பு, அவர்களின் வயதான காலத்தில் உடல், உள்ள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவில் உள்ள ராச்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில், நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தைச் செலவிடுபவர்கள் தமது பிந்தைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் நல்லவிதமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு பாராட்டுவது உங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் என்று 12 வகையான ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கும்போது உங்கள் ரத்த அழுத்தம் குறைந்து சீரான ஓட்டத்திற்கு மாறுகிறது. உடலில் வீக்கங்கள் குறையும், வலிகளை குறைக்கும் ஆக்டிவ் புரோட்டீன் உடலில் சேர்கிறது. இதுவே இதயநோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது என்கிறார்கள் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
தனியாக இருப்பவர்களுக்கும், சரியான நட்பு வட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் ஹார்ட் அட்டாக் அதிகம் வருவதாகக் கண்டறிந்துள்ளனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் நட்பு பாராட்டுவதற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வயதில் மூத்தவர்களுக்கு இது மிகவும் பயனளிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். வீட்டிலேயே முடங்கி இராமல் நண்பர்கள் இடையே நேரம் செலவழித்து வருகிறவர்களுக்கு சளி, இருமல் முதல் கேன்சர் வரை நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது என்கிறார்கள்.
நீங்கள் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்கள் உடலில் ‘சிக் ஏ மற்றும் இன்டர் காமின்' என்ற பொருட்கள் சுரக்கின்றன. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமுடன் வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அதுவும் சட்டென்று குறையும், நல்லது நடக்கும் என்ற நேர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றும் என்கிறார்கள் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
பிறந்த குழந்தைக்கு 9 மாதங்களில் அவர்கள் மற்றவர்களின் நட்புறவை நாடுவார்கள், நட்பைப் புரிந்துகொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். மாணவ பருவத்தில் ஏற்படும் நட்பு மிகப்பெரிய மாற்றங்களை அவர்களின் எதிர்காலத்தில் ஏற்படுத்துவதாக அமெரிக்க வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
உலகில் உண்மையான நட்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. சிறந்த நண்பர்களை அடையாளம் காண கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர்களை ஆய்வுக்குட்படுத்தி கண்டறிந்த விதிகள்.
உங்கள் நண்பர்கள் நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் சரி, அது இரவு 12 மணியோ, அதிகாலை 4 மணியோ கூப்பிட்ட உடனே உங்கள் போனை எடுத்துப் பேச வேண்டும், எந்த இக்கட்டான நேரத்திலும் உங்கள் பேச்சை அவர் கேட்க வேண்டும். எந்த பிரச்னை என்றாலும் சரி, நியாயமான கருத்தை சொல்லக்கூடியவராக இருக்க வேண்டும். நீங்கள் வேறு ஒருவருடன் பொழுதை கழித்தாலும் அமைதி காத்து உங்களுக்குக் கம்பெனி கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலையில் தோள் கொடுக்கும் முதல் ஆளாக இருக்க வேண்டும், நீங்கள் சாய்ந்து அழ தோள் கொடுக்கும் முதல் ஆள் அவராக இருக்க வேண்டும். உங்களுடைய விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் முதல் ஆளாக அவர் இருக்க வேண்டும். நீண்ட காலம் தொடர்பில் இல்லாமல் போகும் சூழ்நிலை வந்தாலும் உங்கள் நட்பில் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களை நம்புகிறவராகவும் அதைக் கேட்கும் முதல் ஆளாகவும் அவர் இருக்க வேண்டும். உங்கள் ரகசியங்களை என்றொன்றும் காப்பாற்றுகிறவராக இருக்க வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு ஆபத்து என்றால் ஓடோடி வரக்கூடியவராக அவர் இருக்க வேண்டும். உங்களுக்கு ஓர் ஆபத்து என்றால், நீங்கள் சொல்லாமலே அவர் களத்தில் குதித்து உங்களுக்கு உதவுகிறவராக இருக்க வேண்டும். இந்த விதிகளை உங்கள் நண்பர்களிடம் மட்டும் எதிர்பார்க்கக் கூடாது, நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.