மாம்பழங்களில் அல்ஃபோன்சா, சிந்தூரா ஆந்திரா லங்டா, ரத்தினகிரி என்று பல வகைகள் இருப்பது போன்று நூர்ஜஹான் மாம்பழமும் ஒரு வகையாகும். மத்தியப் பிரதேசத்தில் கத்தி வாடா எனும் இடத்தில் அதிக அளவில் விளையும், ஆனால் மக்களால் அதிகம் அறியப்படாத இந்த வகை மாம்பழத்திற்கு 'நூர்ஜஹான்' என்ற முகலாய மகாராணி நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த மாம்பழம், மத்ய பிரதேசத்தை மையமாகக் கொண்டிருந்தது. இந்த வகையான மரத்தில் ஜனவரி பிப்ரவரியில் பூக்கள் பூத்து ஜுன் மாதம் பழ அறுவடைக்குப் தயாராகிறது. நம் நாட்டிலேயே பெரிய வகை மாம்பழமாக இது கருதப்படுகிறது.
இந்த பழம் சுமார் மூன்றிலிருந்து மூன்றரை கிலோ அளவு எடை உள்ளது. மேலும் ஒரு அடி நீளம் அளவு உள்ளது. இதற்கு டிமாண்ட் அதிகம் என்றாலும் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. குஜராத்திலும் இது கிடைக்கிறது.
இந்த மாமரத்தின் தனித்தன்மை என்னவென்றால் இது சுமார் 12 அடி உயரம் வரை வளரும். மேலும் இதன் பழம் மிகவும் பெரியதாக இருப்பதால் சப்போர்ட் தேவைப்படும். ஆல்ஃபான்சோ மாம்பழம் மாம்பழத்தின் அரசன் என்றும், நூர்ஜஹான் மாம்பழம் மாம்பழங்களின் அரசி என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பழத்திற்கு அதிக டிமாண்ட் உள்ளதால் முன்னதாகவே புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இதன் பெரிய வடிவம், நல்ல மணம் மற்றும் சுவை போன்ற தனித்தன்மையினால் அதிகம் விரும்பப்படுகிறது.