உலகின் மிக உயரமான பெண்மணி யார்?

Rumeysa Gelgi
Rumeysa Gelgi

கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் ‘உலகின் மிக உயரமான பெண்மணி’ எனும் இடத்தைப் பெற்றிருப்பவர் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி (Rumeysa Gelgi) எனும் பெண்மணி ஆவார். 1997 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் துருக்கியில் பிறந்த இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவர் கூடுதலாக, ஆராய்ச்சியாளராகவும் வலை உருவாக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

2021 ஆம் ஆண்டின் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த இவரின் உயரம் 7 அடி 0.7 அங்குலம் (215.16 செ.மீ) என்று இருக்கிறது. இதற்கு முன்பாக, 2014 ஆம் ஆண்டில் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில், 7 அடி 0.09 (213.6 செ.மீ) எனும் உயரத்துடன் ‘உலகின் உயரமான பதின்ம வயதுப் பெண்’ எனும் இடத்தைப் பெற்றிருந்தார். 2022 ஆம் ஆண்டு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் ‘உலகின் மிகப்பெரிய கைகளைக் கொண்ட பெண்மணி’, ‘உலகின் நீளமான விரல்களைக் கொண்ட பெண்மணி’, ‘உலகின் நீளமான முதுகைக் கொண்ட பெண்மணி’ என்கிற மூன்று இடங்களையும் இவரேப் பெற்றிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தும் மரபணுக் கோளாறு நோயான வீவர் நோய்க்குறியால் (Weaver syndrome) பாதிக்கப்பட்ட இவர் குழந்தையாக இருக்கும் போதே வழக்கத்தை விட மிக உயரமாக வளரத் தொடங்கினார். அதனால், அவர் பல உடல் நலப் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதானது. அவருடைய எலும்புகள் பெரியதாக இருந்த போதும், அது வலுவில்லாமல் இருந்ததால் சக்கர நாற்காலி (Wheel Chair) அல்லது நடக்கும் கருவி (Walker) துணையோடுதான் எங்கும் செல்ல முடிந்தது.

ருமேசா, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அவரது அரிய மருத்துவ நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதுடன் உடலின் நேர்மறை மற்றும் பன்முகத் தன்மையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார்.

Rumeysa Gelgi)
Rumeysa Gelgi)

2020 ஆம் ஆண்டில் வலை உருவாக்கப் (Web Developer) பயிற்சி பெற்ற இவர், தனது தொழிற்திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக, அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதிக்குச் செல்ல வேண்டுமென்று விரும்பினார்.

தன்னிடம் முதுகுத்தண்டு வளைவு, மூட்டுப் பிரச்சனைகள், தசைப் பிரச்சனைகள் உள்ளிட்ட சில உடல்நலக் குறைகளுடன் முதுகுத்தண்டிலுள்ள அழுத்தம் காரணமாக ஒரு இடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருக்க முடியாது எனும் குறையும் இருந்ததால், அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் வருத்தமடைந்தார்.    

துருக்கியிலுள்ள இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் வரை செல்ல 13 மணி நேரமாகும் என்பதால், விமானத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்று நினைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?
Rumeysa Gelgi

அவ்வேளையில், விமான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 2022 ஆம் ஆண்டில், விமானத்தின் ஆறு இருக்கைகள் கொண்ட இடத்தில், தனக்கான தூக்குப் படுக்கையினை (Stretcher) அமைத்து, சான்பிரான்சிஸ்கோ சென்று திரும்பினார்.

உலகம் முழுவதுமுள்ள ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற இவரது விமானப் பயணம், “ருமேசா: உயரமான நடைப்பயணம்” என்று தலைப்பிடப் பெற்ற கின்னஸ் உலகச் சாதனை ஆவணப்படத்திலும் சிறப்புக் காட்சியாக இடம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"ஒவ்வொரு தீமையும் உங்களுக்கான ஒரு நன்மையாக மாற்றப்படலாம், எனவே, நீங்கள் யார் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள், உங்கள் திறனை உணர்ந்து உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்று குறிப்பிடும் ருமேசா கெல்கியின் கருத்து, தங்களது குறைகளை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல அறிவுரையாகவும் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com