
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றிவர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திர மாதத்தில் முப்பது திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பதினைந்து நாட்கள் சுக்ல பட்சம் (வளர்பிறை). பௌர்ணமியில் இருந்து பதினைந்து நாட்கள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) எனப்படும்.
அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு டிகிரி விகிதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது.
பதினோராவது நாளான ஏகாதசி என்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவி ஈர்ப்பு சக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும்போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
ஏகாதசி விரதம் இருந்தால் அதற்கு முன் பத்து நாட்கள் சாப்பிட்ட உணவில் உள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. ஜீரணகருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.
அதற்குப் பின் நமக்கு வைட்டமின் ஏ ,சி தேவைப்படுகிறது. அதனால்தான் மறுநாள் துவாதசி அன்று 'அ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, 'சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம். துவாதசியன்று சத்தான உணவு உண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் ஆன துவாதசியன்று சூரிய உதயத்திற்கு முன்பே குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு துளசி தீர்த்தம் பருகவேண்டும். பின்பு காலையில் இருபத்தியோரு வகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். விருந்தில் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது அவசியம்.
அகத்திக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிக அளவில் உள்ளது. எனவே அகத்திக்கீரை சாப்பிட்டால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். மேலும் தொண்டை வலி, குடல் புண் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும். அதோடு பித்தம் சம்பந்தமான நோய்களும் குறையும். உடல் உஷ்ணம் குறைந்து கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். அகத்தி கீரையில் பாற்கடல் அமுதமும் நெல்லிக்காய் சுண்டைக்காய் ஆகியவற்றில் மஹாலக்ஷ்மியின் அருளும் நிறைந்திருப்பதாக ஐதிகம்.
துவாதசி உணவில் அரிசி, சாதம், மோர் குழம்பு, அகத்திக்கீரை பொரியல், வறுத்த சுண்டைக்காய், பொரித்த கூட்டு, நெல்லிக்காய் பச்சடி, அக்காரவடிசல் பாயாசம், தயிர் என விரத சாப்பாடு தயார் செய்ய வேண்டும். துவாதசியன்று சமையலில் துவரம் பருப்பு, பொடி சேர்க்க மாட்டார்கள்.
பொதுவாக விரத சமையலில் வெங்காயம் பூண்டு மசாலா தயாரிப்பது கிடையாது. புளிக்குப்பதில் எலுமிச்சம்பழம் சேர்ப்பார்கள். சாதத்தில் பருப்பு போட்டு பிசைந்து, தயிர் பச்சடி சேர்த்து, அகத்திக்கீரையை தொட்டு இலையை சுற்றி நீர் விட்டு சுற்றி மூன்று முறை கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பிரார்தித்துவிட்டு சாப்பிட துவங்க வேண்டும்.
துவாதசியன்று அதனால்தான் அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் சுண்டைக்காயும் கட்டாயம் சேர்க்கிறோம்.