
பப்பாளி காயில் செய்யும் உணவு வகைகள் ஆரோக்கியமான மற்றும் சுவை மிகுந்தவைகள் ஆகும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாவை வெளியேற்றுவதோடு வயிற்றை நச்சுத்தன்மை இல்லாமல் வைக்கிறது.
பப்பாளி கார புலாவ்
தேவை:
பாசுமதிஅரிசி – 1 கப்
பப்பாளிகாய் – 1 கப் (சிறிதாக நறுக்கியது)
காரட் – 1/2 கப் (நறுக்கியது)
மிளகாய் – 2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – ½ டீஸ்பூன்
சீரகத்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி, புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
செய்முறை: பாசுமதி அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பப்பாளித் துண்டுகள், காரட், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி குறைந்த தீயில் மூடி வைத்து 15-20 நிமிடங்கள் சமைக்கவும். இறுதியாக கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்த்து அலங்கரிக்கவும்.
பப்பாளி கார புலாவ் தயார். குருமா அல்லது தயிர் பச்சடி போன்றவையுடன் பரிமாறலாம்.
பப்பாளி கார கிரேவி
தேவை:
பப்பாளிகாய் – 1 கப் (சிறியதாக நறுக்கியது)
பெரியவெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 3
பூண்டு – 3 பல்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – ½ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி (நறுக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை: முதலில், ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கியதும், நறுக்கிய பப்பாளி துண்டுகள், தக்காளி, மசாலாதூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சற்று குறைந்த தீயில் மூடி வைத்து பச்சை காய்களை நன்றாக சமைக்கவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும். சுவையான பப்பாளி கார கிரேவி தயார்! இது சப்பாத்தி, ரொட்டி, புலாவ் போன்ற உணவுகளுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
பப்பாளி கார ரொட்டி
தேவை:
பப்பாளிகாய் – 1 கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
கோதுமைமாவு – 2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும். அதில் நறுக்கிய பப்பாளி துண்டுகளை சேர்த்து, நன்றாக விரசவும். பிறகு, எண்ணெய் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து, மிருதுவான மாவாக பிசையவும். மாவை சிறிய உருண்டைகள் ஆக்கி, சப்பாத்தி போல தட்டவும். ஒரு தவாவில் ரொட்டியை இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். சுவையான பப்பாளி கார ரொட்டி தயார். இது குருமா அல்லது சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.