

கோவிலுக்குள் நுழைந்தவுடனே நாம் செய்யும் முதல் செயல் மணி அடிப்பது. பலர் இதை கடவுளை அழைப்பதற்கான சடங்காக மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறு. இந்தச் செயலில் ஒரு உளவியல் மற்றும் அறிவியல் பின்னணி இருப்பது நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை.
இந்தச் சிறிய மணி ஓசைக்குள் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோமா...
கோவிலுக்குள் நுழையும்போது நமது மனம் ஆயிரக்கணக்கான கவலைகளிலும், சிந்தனைகளிலும் சிதறி இருக்கும். மணியின் கூர்மையான ஓசை, சிதறி இருக்கும் மனதை ஒரு புள்ளியில் குவித்து, தற்போது நடக்கும் நிகழ்வில் உங்களை நிலைநிறுத்துகிறது.
இந்த மனநிலைதான் தியானத்திற்கும், இறை வழிபாட்டிற்கும் மிக அவசியமானது. நவீன உளவியலில் இதை Attention Reset அல்லது Mindfulness Trigger என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, சிதறி ஓடிய கவனத்தை ஒரே புள்ளியில் திரட்டும் ஒரு எளிய வழி.
பாரம்பரிய கோவில் மணிகள் பெரும்பாலும் செம்பு மற்றும் தகரம் கலந்த Bell Metal அல்லது Bronze போன்ற உலோகங்களால் செய்யப்பட்டவை. இந்த உலோகங்கள் நீடித்த ஒலியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. அந்த ஒலி சில விநாடிகள் நீடிப்பதால், அதைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மூளையில் உள்ள சிந்தனைகளை கட்டுப்படுத்தி, ஒரு அமைதியான நிலைக்கு உங்களைக் கொண்டு செல்கிறது. இது தியானம் அல்லது வழிபாட்டுக்கு மனதை தயார் செய்ய உதவுகிறது.
மணியோசையின் அதிர்வு நமது நரம்பு மண்டலத்தை (Nervous System) அமைதிப்படுத்துகிறது. ஒருமுறை ஓங்கி அடித்து, அந்த ஓசை மெல்ல மெல்லக் குறைந்து மறைவதை நீங்கள் கூர்ந்து கவனித்தால், உங்கள் மன அழுத்தம் பெருமளவு குறைவதை நீங்களே உணரலாம். மேலும், இது இதயத் துடிப்பு மற்றும் மூச்சு வேகத்தை சற்றே சமநிலைப்படுத்த உதவுகிறது.
மணி அடிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
மணியை மிக மெதுவாகவோ அல்லது விளையாட்டாகவோ தட்டக் கூடாது.
ஒருமுறை பலமாக அடித்து, அதன் அந்தப் பிணைப்பை (Vibration) உங்கள் உடல் உணர வேண்டும்.
மணி ஓசை முழுமையாக அடங்கும் வரை சில நொடிகள் அமைதியாக நின்று அந்தத் தருணத்தை அனுபவிப்பது சிறப்பு.
இனி நீங்கள் கோவிலுக்குச் செல்லும்போது, மணி அடிப்பதை ஏதோ ஒரு சடங்காகக் கருதாமல், அது உங்கள் உடலையும் மனதையும் தயார் செய்யும் ஒரு ஹீலிங் முறை என்பதை உணர்ந்து செய்யுங்கள். நமது கலாச்சாரம் என்பது மூடநம்பிக்கை அல்ல, அது வாழ்வியலோடு கலந்த அறிவியல்.