

தற்காலத்தில் மோட்டார்சைக்கிள், கார் முதலான வாகனங்களை வாங்கினால் அதை ஓட்டுவதற்காக முறையாக விண்ணப்பித்து லைசென்ஸ் வாங்க வேண்டும். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒருகாலத்தில் வீட்டில் பயன்படுத்தும் ரேடியோவிற்கும் லைசென்ஸ் வழங்கும் நடைமுறை இருந்தது நம்மில் பலரும் அறியாத ஒரு விஷயமாகும். அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
எழுபதாம் ஆண்டுகளில் நம் மக்கள் அனைவருக்கும் இருந்த ஒரே பொழுதுபோக்கு சாதனம் வானொலி எனும் ரேடியோ. அக்காலத்தில் இதைப் பொதுவாக ரேடியோ என்று அழைப்பார்கள். எல்லோர் வீட்டிலும் வானொலி இருக்காது. வசதி படைத்தவர்கள் மட்டுமே வீட்டில் வானொலியை வாங்கி உபயோகிப்பார்கள். அக்காலத்தில் வானொலி என்பது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி அளவிற்குப் பெரியதாக இருக்கும். இதற்கு “வால்வு செட்” என்று பெயர். டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பதற்கு முன்னால் வால்வுகளை வைத்தே வானொலிகள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய வானொலிகளை இயக்கினால் அவை சற்று நேரம் சூடாகி பின்னரே தன் இயக்கத்தைத் தொடங்கும்.
திரைப்படப் பாடல்களைக் கேட்கவும், திரைப்படங்களின் சுருக்கப்பட்ட ஆடியோ வடிவமான ஒலிச்சித்திரத்தைக் கேட்கவும், செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், கர்நாடக இசையைக் கேட்கவும் வானொலிகள் பெரிதும் பயன்பட்டன.
அக்காலத்தில் வானொலிகளில் ஒலிபரப்பு செய்யப்படும் நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. நீங்கள் கேட்டவை என்ற நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. நாம் விரும்பிக் கேட்கும் பாடல்களை நமது பெயரைச் கூறி ஒலிபரப்புவார்கள். தனது பெயரை வானொலியில் கேட்க, அக்காலத்தில் பலரிடையே பெரும் ஆர்வம் இருந்தது.
வால்வுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வானொலிகள் அளவில் மிகப் பெரியதாய் இருந்தன. விலையும் அதிகமாக இருந்தன. இதன் பின்னர் டிரான்ஸிஸ்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டிரான்ஸிஸ்டர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வானொலிகள் அளவில் சிறியதாகவும் கைக்கு அடக்கமாவும் இருந்தன. விலையும் மலிவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பாக்கெட் ரேடியோ என்ற ஒரு வானொலி அறிமுகமானது. கையடக்கமாக இருந்த இந்த வானொலியாது பேட்டரியால் இயங்கக்கூடியதாக இருந்தது. இதில் FM / AM என்ற வசதிகள் மட்டுமே இருந்தன.
அக்காலத்தில் வீட்டில் ரேடியோவை வைத்துப் பயன்படுத்த விரும்பினால் தபால் நிலையங்களில் அதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து ரேடியோ லைசென்ஸ் வாங்க வேண்டும். தபால்நிலையத்தில் ஒரு பாஸ்புக் போன்ற சிறிய புத்தகத்தைத் தருவார்கள். ஒரு வருடத்திற்கு பத்து ரூபாய் கட்டணமாக தவறாமல் செலுத்த வேண்டும். பின்னர் இக்கட்டணம் பதினைந்து ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதற்கு Domestic Radio License என்று பெயர். அவ்வப்போது வீட்டிற்கு வந்து ரேடியோவிற்கான லைசென்ஸ் இருக்கிறதா என்று சோதனையும் செய்வார்கள். லைசென்ஸ் இல்லையென்றால் ரேடியோவை பறிமுதல் செய்வார்கள். 1984 ஆம் ஆண்டில் ரேடியோ லைசென்ஸ் முறை விலக்கிக் கொள்ளப்பட்டது.
வானொலி நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள வானொலி என்ற இருவார இதழ் விற்பனை செய்யப்பட்டது. சென்னை, திருச்சி, கோயமுத்தூர் வானொலி நிலையங்களின் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் தேதி வாரியாக இந்த இதழில் அச்சிடப்பட்டிருக்கும். அக்காலத்தில் மக்கள் இதை ஆர்வத்துடன் வாங்கி நிகழ்ச்சிகளை அறிந்து பயன்படுத்துவார்கள்.
எழுபத்திஐந்தாம் ஆண்டில் தொலைக்காட்சி நடைமுறைக்கு வந்தது. தொலைக்காட்சி வருகைக்குப் பிறகும் பல ஆண்டுகள் வானொலி மக்களால் பெரிதும் விரும்பி பயன்படுத்தப்பட்டது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.