1)சிலருக்கு புருவங்களில் உள்ள முடி நரைத்து காணப்படும். இதற்கு காரணம் வயது மட்டுமல்ல ஊட்டச்சத்து பற்றாக்குறை, எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளாலும் கூட ஏற்படும்.
2) அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான பி12, விட்டமின் டி, இரும்புச்சத்து குறைபாடுகள் நம் புருவங்களை முன்கூட்டியே நரைக்கச் செய்து விடுகிறது.
3) சிலருக்கு வயதாகும் போது தலைமுடி மட்டும் நரைப்பதில்லை. சில சமயங்களில் அவர்களின் புருவங்களும் கூட நரைக்க ஆரம்பித்து விடும். இப்படி புருவங்களின் முடியில் உள்ள நிற மாற்றத்திற்கு ஹார்மோன் பிரச்சனைகள், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது.
4) புருவங்களில் உள்ள முடிகள், கண் இமைகள், உடல் ரோமங்கள் ஆகியவை நரைப்பதை "போலியாசிஸ்" என்று அழைக்கப்படுகிறது.
5) நம்முடைய கூந்தல் மற்றும் புருவங்களில் உள்ள முடிகள் கருப்பாக இருக்க மெலனின் என்ற நிறமி உதவுகிறது. இந்த மெலனின் குறைபாடு காரணமாகவும் புருவங்களில் நரைமுடி தோன்றக்கூடும்.
6) மெலனினில் உள்ள ஃபியோமெலனின் மற்றும் யூமெலனின் என்ற இரண்டு வண்ண நிறமிகளும் தான் நம் புருவங்களின் கருமை நிறத்திற்கு காரணமாகிறது. இதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு காரணமாக முன்கூட்டியே நரைமுடி தோன்றுகிறது.
7) பூஞ்சை தொற்றின் காரணமாகவும், மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி போன்ற பாதிப்புகளுக்கு பின்பும், ரேடியோ தெரபிக்கு பிறகும் கூட சருமத்தின் முடிகள் குறிப்பாக புருவத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம்.
8) மன அழுத்தம் காரணமாகவும், அதிகப்படியான கவலை மற்றும் மனநலம் பாதித்தாலும் கூட இப்படி முடிகள் நரைக்கலாம்.
9) சிகரெட்டிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் புருவங்களில் நிறத்தை வரையறுக்கும் நிறமிகளின் உற்பத்தியை சீர்குலைப்பதால் புருவங்களில் நரைமுடி தோன்றக்கூடும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது நல்லது.
10) பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடை அதிகரிப்புக்கு மட்டுமின்றி தோல் மற்றும் முடியின் நிற மாற்றத்திற்கும் காரணமாகின்றது.
11) தரமில்லாத அழகு பொருட்கள், அதிகப்படியான ரசாயனங்கள் கொண்ட மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதும் புருவங்களில் நரைமுடியை ஏற்படுத்தும்.
இளம் வயதிலேயே புருவங்கள் அல்லது இமைகளில் நரை ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை, ஹார்மோன் மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெலனின் குறைபாடு இருப்பதை உறுதி செய்தால் அதற்கான சிகிச்சைகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் தினமும் உடற்பயிற்சி செய்வதும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதும் மன அழுத்தத்தை தவிர்ப்பதும் நல்லது. விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) அடர்த்தியான புருவ வளர்ச்சிக்கு உதவுவதும் முன்கூட்டியே நரைப்பதை தடுப்பதற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான அளவு தூக்கம், ஓய்வு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை தவிர்ப்பதும் நம் உடலில் ஹார்மோன்களின் சமநிலையை தக்க வைக்க உதவும்.