தொழில்நுட்பங்கள் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில், குழந்தை பெற முடியாதவர்களின் நிலை, ஓரளவு பரந்த மனப்பான்மையுடன் தான் பார்க்கப்படுகிறது, அவர்களை ஏற்றுக்கொண்ட உலகம் இது, அவர்களுக்கு துணையாக இருந்து மக்கள் ஆதரவு தருகிறார்கள்... இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று தான் நானும் ஆசைக் கொள்கிறேன். ஆனால் முடியவில்லையே! இன்றும் பல இடங்களில் குழந்தை பெறாதவர்கள் பெரிய அளவில் காயப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
திருமணம், கருத்தரித்தல், குழந்தைப்பேறு என்பதெல்லாம் விழாக்களாக கொண்டாடப்பட்டாலும், அந்த கொண்டாட்டங்களின் பின்னணியில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணின் நிலைமை விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகதான் உள்ளது. பெண் பருவமடைந்தால், அவள் திருமணத்திற்கு தயாராகி விட்டாள்; திருமணம் ஆனால் மகப்பேறுக்கு தயாராகி விட்டாள் என்பதைப் போன்ற தவறான எண்ணங்கள் இன்றளவும் சமூகத்தில் வலம் வருவதை யாரால் தடுக்க முடிகிறது? திருமணத்தன்று கொண்டாட்டம் கோலாகலம் என ஆரம்பிக்கும் புதியதொரு வாழ்க்கையில் ஒரு பெண் தொடர்ந்து சந்திக்கும் பிரச்சனைக்கள் அந்த கொண்டாட்டத்தையே வெறுக்க செய்யும் நிலையை ஏற்படுத்துகின்றன.
திருமணமான தம்பதியை, உறவினர்கள் முதல் முறை பார்க்கும் போது வெறும் நலம் விசாரிப்பதுடன் முடித்துக் கொள்வர். இரண்டு முதல் ஆறு மாதங்கள் கடந்து சந்திக்கும் போது ஏதும் 'நல்ல செய்தி உள்ளதா'? என குறிப்பாக அழுத்தி புன்னகையுடன் கேட்பர். ஒரு வருடம் கடந்ததும், 'என்னமா ஏதும் நல்ல விஷயம்லா இல்லையா' என்று கேட்க, இந்த முறை அந்த புன்னகை காணாமல் போயிருக்கும். இன்னும் வருடங்கள் கடந்தால் அவளுக்கு 'மலடி' என்ற பெயரை வைத்து பட்டம் சூட்டி விடுவர். அப்படி சூட்டுவதும் பெரும்பாலான பெண்களே என்பதுதான் வெட்கத்துக்குரியது.
'ஒரு பெண்ணை பெண்ணால் தான் புரிந்துக் கொள்ள முடியும்' என்பார்கள்.... ஆனால் இந்த விஷயத்தில் 'ஒரு பெண் பெண்ணால் தான் அதிகம் தூற்றப்படுகிறாள்' அதுவே உண்மை!