
எத்தனை விதமான வளர்ச்சியை அடைந்த போதிலும் நம் இந்திய பெண்மணிகள் இந்த பாசத்திற்கும் தன்மானத்திற்கும் இடையில் இன்றளவும் சிக்கி கொண்டுதான் தவிக்கிறார்கள்.
ஒரு பெண் திருமணமானது முதல் இறக்கும் வரை இந்த இரண்டிற்கும் இடையில் போராடுகிறாள். ஏன் ஆண்களுக்கு இந்த போராட்டம் இல்லையா என்று கேட்டால் அவ்வளவாக இல்லை என்பதுதான் பதில்.
ஒரு ஆண் திருமணமான பிறகும் தன்னுடைய தன்மானத்திற்கு கேடு வராமல் எப்படி வேண்டுமானாலும் நிலைமையை சரி செய்து கொள்ளலாம். முக்கால்வாசி இல்லங்களில் ஆண் வைத்ததுதான் சட்டமாக இன்னமும் இருக்கிறது.
ஒரு ஆணை எடுத்துக்கொண்டால் அவர் தன் தன்மானத்தை எப்போதும் விட்டு கொடுக்கவே மாட்டார். அப்படி அவர்கள் தன்மானத்தை இழுத்து பிடித்து வைத்திருந்தாலுமே, அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. எல்லோரும் அவர் மீது வைத்திருக்கும் பாசமும் கடுகளவும் குறையாது.
ஆனால் பெண்களை பொறுத்தவரையில் இந்த இரண்டையும் கையாளவது என்பது மிகவும் பெரிய சிக்கலான விஷயமாகும். ஒரு பெண் சிறிதளவு தன்மானத்தை பற்றி நினைத்து வேறு எதாவது ஒரு நிகழ்ச்சியையோ அல்லது நபரையோ நிராகரிக்கவோ அல்லது வேறு எதாவது விதத்தில் முயற்சியோ செய்தால் அவ்வளவுதான். கணவரும் உறவினர்களும் சேர்ந்துகொண்டு உனக்கு உன் தன்மானம்தான் முக்கியமென்றால் நாங்கள் எதற்கு? உனக்கு குடும்பம் எதற்கு? ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தன்மானத்தை பற்றி நினைக்கிறாயா? என்றெல்லாம் கூறுவார்கள். பெற்ற குழந்தைங்கள் உட்பட உனக்கு பாசத்தைவிட கௌரவம்தான் முக்கியமா? என்று கேள்வி கேட்பார்கள்.
ஆகவே, பொதுவாகவே பெண்கள் தன்னுடைய தன்மானத்தையும் சுய மரியாதையையும் கழட்டி குடும்பம் எனும் அடகுக்கடையில் அடமானமாக வைத்துவிடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் பாசம்தான் முக்கியம். நகையையோ அல்லது வேறு எதாவது பொருட்களை அடமானம் வைத்தால் பிறகு மீட்டு விடலாம். ஆனால் பெண்களால் இறக்கும்வரை தன் குடும்பத்தில் அடமானம் வைத்த தன்மானத்தை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது
ஒருவேளை ஒரு பெண் தன்மானத்தை காக்க நினைத்து அதில் வெற்றி பெறுவாளேயானால் பந்த பாசம் அவளிடம் இல்லாமல் விலகிப் போய் விடும். தன்மானத்தை இழந்தால் பாசம் பந்தம் எல்லாம் பெண்களை சுற்றி இருக்கும்.
ஆனால் ஆண்களுக்கோ தன்மானத்தை கெட்டியாக பிடித்து வைத்திருந்தால் கூட பாசங்களும் பந்தங்களும் அவரை விட்டு விலகாது.
இதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம். பெண்களால் ஒருபோதும் இரண்டையும் ஒரே நேரத்தில் சரி சமமாக பெற இயலாது.
அதற்காக, பெண்களே முழு தன்மானத்தையும் இழந்துவிடாதீர்கள். ஒரு சில தருணங்களில் பாசத்தை சிறிதளவு மூட்டை கட்டி வைத்துவிட்டு உங்களுக்காக சிறிது தன்மானத்தோடும் வாழுங்கள்.