பெண் அல்ல பொன்!

Women's Day
Women's Day
Published on

உடல் மென்மையாக இருந்தாலும், உறுதியான உள்ளத்துடன் படைக்கப்பட்ட பெண்கள், நினைத்த இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சியை கைவிட மாட்டார்கள். ஏறுவது ஏணிப்படியானாலும் சரி, எவரெஸ்ட் என்றாலும் சரி, உச்சிக்கு செல்வதில் உறுதியாயிருப்பார்கள். எதிலும் எப்பொழுதும் தீர்க்கமான முடிவு எடுப்பார்கள். உடனடியாக நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல டூவீலர் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் வந்தால், அடுத்த நாளே அருகில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் நிற்பார்கள்.

இன்பமோ, துன்பமோ சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றி, அதற்குள் பொருத்திக் கொள்ளும் வல்லமை பெண்களிடத்தில் அதிகம் உண்டு என்பதே உண்மை. வாகனம் வாங்கியதில் EMI கட்ட வேண்டிய சூழல் வந்தால் பணிப்பெண்ணை வேலையிலிருந்து நிறுத்தி, வீட்டு வேலைகளை சுயமாக செய்யத் தொடங்கி விடுவார்கள். அதற்கேற்ப நேரத்தை ஒதுக்குவதிலும் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். தங்களின் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியிலும் வேலை செய்வார்கள்.

வீட்டிற்கு வெளியே சென்று, பணியோ, தொழிலோ செய்து கொண்டு வரும் பொருளை பத்திரப்படுத்தி, தேவைக்கு மட்டும் செலவு செய்து,சேமிப்பதில் வல்லவர்கள். பெண்கள் எதையும் உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். சாதமானாலும்சரி.. பிரியாணியாகட்டும் சிரத்தையுடன் தயாரிப்பது அவர்களுடைய நோக்கமாக இருக்கும். எதையும் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி எளிமையாகவே கையாளுவார்கள். குடும்ப உறவுகளை அனுசரித்து, சோறு ஆக்கிப் போட்டு ஆரோக்கியம் பேணி, வம்சத்தை விருத்தி செய்து, ஊர் மெச்ச வாழ வைப்பதில் தெரிந்து கொள்ளலாம்.

நேர நிர்வாகத்தில் அவர்களிடம் கடிகாரம் கை கட்டும். ஆதவன் சோம்பல் முறிக்குமுன் எழுந்து, குட்மார்னிங் சொல்லி, குக்கரின் விசிலை எண்ணியவாறே, குழந்தைகளை எழுப்பி, கையில் டூத் பிரஷ் கொடுக்கும் போதே, அலைபேசி அழைக்கும். எதிர் முனையில், டீம்லீடர் கேட்கும் தகவலை அனுப்பி நிமிர்ந்து , குக்கரை இறக்கி வாணலியை வைக்கும்போதே, "அம்மா.." அழைப்பு கேட்கும். வேற யாரு..? பணிப்பெண் தான். அவளுக்கான வேலைகளை தெரியப்படுத்தி, சமையலில் கவனம் செலுத்தி, குழந்தைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகம் அனுப்பி வைத்து,தன் கடமையை செய்ய கிளம்புவாள். கடைசி நேர டென்ஷனை தவிர்க்க, முதல் நாள் இரவே தனக்கான உடைகள், அலுவலக பைல்கள் இத்தியாதிகளை தயார் பண்ணி விடுவதால், டென்ஷனின்றி கிளம்புவாள்.

எப்போதுமே பாஸிட்டிவ் எண்ணங்களுக்கு சொந்தக்காரி பெண் என்பதில் ஐயமில்லை. தன்னால்முடியுமா எனத் தயங்கமாட்டாள். முடியும் என முடிவெடுத்து முயற்சியும் செய்வாள். தவறுகளின் போது, வருந்தாமல் அந்த அனுபவத்தில் பாடம் கற்றுக் கொள்ளும் கில்லாடி பெண். எப்பொழுதும் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளே நிரம்பி இருக்கும். அடுத்து என்ன? என்ற கேள்விகளே ஓடிக் கொண்டிருக்கும்.

பாதையில் சில தடைகள் வருவது சகஜமே. ஆனாலும், வாழ்க்கையில் பிரச்னை என்னும் ஸ்பீடு பிரேக்கரை லாவகமாக கடந்து, உறவு, மற்றும் நட்பால் எதிரே வரும் மோதலை தவிர்த்து, தெளிவான முடிவுடன் நிதானமாக பயணம் செய்யும், நெஞ்சுறுதி கொண்ட பெண் எந்நாளும் பொன் தான்.

இதையும் படியுங்கள்:
மார்ச் 8 - மகளிர் தினம் - மார்ச் மாதத்தை 'மகளிர் வரலாற்று மாதமாக' அறிவித்தவர் யார் தெரியுமா?
Women's Day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com