

அம்மாவோ அக்காவோ அன்பான தங்கையோ
வயதான பாட்டியோ வாழவந்த அண்ணியோ
உடனுறையும் மனைவியோ உதிரத்திலுதித்த மகளோ
வாய்க்கு ருசியாய் வருமுறவினருக்கும் வகைவகையாய்
ஆக்கிப்போடும் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக
டாக்டரேட் வாங்கியோரையும் தாண்டியவர்கள் அறிவீரோ?
கணிதம் பௌதிகம் கலர்கலரான கெமிஸ்ட்ரி
(Maths,Physics,Chemistry)
மேனேஜ்மெண்ட் மனோதத்துவம் பொருளாதாரம் கவனித்தல்
(Management,Psychology,Economics,Observation Skills)
பலபணிகளை ஒரேநேரத்தில் பக்குவமாய் முடித்துவைத்தல்
(Multi Tasking)
என்ற அனைத்திலுமே இவர்களல்லவோ கில்லாடிகள்!
என்றைக்காவது நாம் இவர்களைப் புகழ்ந்தோமா?
மூச்சுமுட்டத் தின்றுவிட்டு முத்தாய்ப்பாய்ப் படுத்தெழும்ப
இந்தப் பெண்டிரல்லவோ எல்லாநாளும் உற்றதுணை!
கணிதம்:
அறுவர் குடும்பத்துக்கு ஆறுதலாய்ச் சப்பாத்திசெய்ய
எத்தனைகப் மாவென்று எப்படித்தான் அறிவாரோ!
உப்பு உறைப்புக்கு உடலிழுக்கும் மணத்துக்கு
எந்த விகிதமென்று என்றைக்கும் மறந்ததில்லை!
மீளும் சிலவற்றை மிகுந்துவரும் நாளினிலே
மாற்றுடிஷ் செய்ய மனதினிலே கணக்குண்டு!
பௌதிகம்:
ஒவ்வொரு டிஷ்க்கும் உஷ்ணத் தேவையினை
உளமார அறிந்ததனால் எரியும்கேஸ் ஸ்டவின்
இயல்பான ஜ்வாலையையும் கூட்டிக் குறைத்திடுவர்
கொண்டு வருவர் உணவில் டேஸ்டை!
ஊற்றும் எண்ணெயின் உயரும் கொதிப்பை…
விசிலடிக்கும் குக்கரின் விசிலுக்கு முன்னரே…
அனுமானிப்பதில் வல்லமை அனுபவத்தின் வாயிலாகவே!
உஷ்ணம் அழுத்தம் எரிபொருள் ஆற்றல்
அனைத்துந்தானே பௌதிகப் பாட அடிப்படைகள்!
எந்திரமின்றியே எல்லாவற்றையும் இவர்கள் கணக்கிடுவதெங்ஙணம்?!
வேதியியல்:
மாவை மென்மையாக்கி மசாலாப்பொருட்களை நன்குசேர்த்து
வேகும் பருப்பின் வினைத்திறனை நன்கறிந்து
பாலைத் தயிராக்கும் பக்குவ நிலையறிந்து
அடுப்படி கெமிஸ்ட்ரியை அமெரிக்காவில் படிக்காமலே
அனுபவத்தில் கற்றே நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்களே!
மேலாண்மை:
ஒரேநேரத்தில் சாம்பார் பொரியல் கூட்டென்று
அசத்தும் இவர்கள் அவரவர்க்கு நேரத்தில்
உரிய உணவை உயர்வான தரத்தினிலே
சர்வ் செய்யும்பாங்கினை சந்தோஷமாய் நாமும்
என்றைக்கும் புகழவேண்டும்!இதுதானே மேனேஜ்மெண்ட்!
கவனிக்கும் திறன்:
பருப்பு பக்குவமாய் பாட்டிக்கும் உகந்ததாய்
வெந்ததா என்பதனை வெறும் பார்வையிலே…
வேகும் வெஜிடபிளின் வண்ண மாற்றத்திலே…
தோசையின் முகம்பார்த்துத் திருப்பும் நுணுக்கத்திலே…
இருக்கிறதே இவர்களின் இனிதான கவனிப்பு!
ஒரே நேரத்தில் பலவேலை:
கொதிக்கும் டீயுடன் பால் சேர்த்தபடி…
விசிலடிக்கும் குக்கரை விரைந்து அடக்கியபடி…
சிணுங்கும் செல்போனை சிரத்தையுடன் எடுத்தபடி…
இடுப்புக் குழந்தைக்கு இயல்பாய் ஊட்டியபடி…
எதுவும் பிசகாமல் எங்கேயும் தவறாமல்
இருக்கும் பெண்களை நான் என்னென்று வர்ணிப்பேன்?!
எகனாமிக்ஸ்:
குறைவான பட்ஜட்டில் குடும்பத்தார் தேவைகளை
நிறைவாகச்செயும் ஆற்றல் நிதியில் கண்
வீணாக எதனையுமே விடாத பேரருமை
கொண்ட இவர்களன்றோ குவலயத்தின் பெருந்தூண்கள்!
மனதத்துவம்:
எந்த உணவில் எவருக்கு அதிபிரியம்
வாய்க்கு ருசிதருபவை வயிற்றுக்கும் பொருந்திடுமோ
அப்பா மாமனாரை அகத்தின் உள்நிறுத்தி
தனியாய்ச் சிலவற்றைத் தாளிக்காமல் விட்டு
உடல்நலத்தின் மூலம் உள்மனத்தின் வேட்கையையும்
சீராக்கும் இவர்களல்லவோ சிறந்த குடும்பத் தலைவிகள்!
அடுப்படி நல்ல ஆராய்ச்சிக் கூடமென்றால்
இவர்களெல்லாம் அங்கு இணையற்ற பேராசிரியைகள்!
உணவை மருந்தாக்கி உடலை உயிர்ப்பாக்கும்
பெண்மையை உணர்வோம்!பெண்டிரைப் போற்றுவோம்!