
ஒரு வீட்டை சொர்க்கமாக்குவதும், அப்படி இல்லாமல் செய்வதும் அந்தந்த வீட்டின் இல்லத்தரசிகள் கையில்தான் உள்ளது. தன்னையும், தான் சார்ந்த வீட்டையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க எந்தவிதமான குறுக்கு வழியும் கிடையாது. அதற்கு சில வழிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது.
தினமும் உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். அவை எளிமையானதாக இருந்தால் போதுமானது. அப்படி செய்யும் உடற்பயிற்சிகள் உங்கள் தசைகளை தளர்த்தி உங்களை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. அதனால் மன இறுக்கம், டென்ஷன் குறைகிறது. ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது, இதயத்தையும், நுரையீரலையும் பலப்படுத்துகிறது. அதனால் எதையும் தாங்கும் ஸ்டேமினா கிடைக்கிறது. ஜாக்கிங் மற்றும் யோகா நல்லது. நீங்களும் செய்யுங்கள்; உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துங்கள்.
தூக்கம் அவசியம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், இரவில் எப்போது தூங்கப் போகிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சந்தோஷமும், ஆரோக்கியமும் கூடும். இரவில் 10 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் முழித்துக்கொண்டு இருக்காதீர்கள். 10 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எழும் பழக்கத்தை உருவாக்குங்கள். அளவாக தூங்குங்கள். ஆனால், ஒரு போதும் தூக்கத்தை தவிர்க்காதீர்கள்.
சப்தம் மனநிம்மதியை கெடுக்கும். மெல்லிய இனிய இசையையும், பாடல்களும் மனதிற்கு அமைதியை தரும். இயற்கையான பறவைகளின் சப்தங்களை ரசித்து பாருங்கள், மனதிற்கு இதம் தரும்.
கடவுளுக்கு அடுத்தபடியாக மிகவும் போற்றுதலுக்குரியது சுத்தம்தான். அதனால் உடலையும், ஆடைகளையும் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. உங்கள் வீட்டையும், சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீட்டில் எதையும் எடுத்த இடத்தில் வையுங்கள். வீட்டில் குப்பைகளை சேரவிடாமல் பார்த்துகொள்ளுங்கள். உங்களுக்கு வரும் ஏகப்பட்ட குழப்பங்களுக்கு காரணம் எதையும் எடுத்த இடத்தில் வைக்காமல் கண்ட இடங்களில் வைத்துவிட்டு அவசரத்திற்கு கிடைக்காமல் டென்ஷன் ஆவதுதான்.
கோபத்தை குறையுங்கள். அது உங்களை பலவீனப்படுத்தும் விஷயம். ‘கோபப்படாமல் எதுவும் ஆகாது, வேலை வாங்க முடியாது’ என்பார்கள் சிலர். அது சரியானதல்ல, உங்களுடைய மென்மையான பர்சனாலிட்டி மூலம் எதையும் சாதிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய எந்தவொரு பிரச்னைகளையும் பெரிதுபடுத்தாதீர்கள். அதை அடுத்தவர்களிடம் சொல்லி கலவரப்படுத்தாதீர்கள். இதனால் நட்பு வட்டமே நாசமாகும். யாரும் உங்கள் பிரச்னைகளை தீர்க்கும் ஆர்வத்தில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்னைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டமும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கே என்பதை புரிந்துகொள்ளுங்கள், அதனால் ஒவ்வொரு பொழுதையும் சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
மற்றவர்கள் செய்யும் நல்ல காரியங்களை மனம் திறந்து பாராட்டி மகிழுங்கள். பாராட்டு அனைவருக்கும் பயன்படும் ஓர் உன்னத மருந்து.
செய்யும் வேலையை ஆர்வத்துடனும், வித்தியாசமான அணுகுமுறைகளை புகுத்தியும், வெற்றி காண வேண்டும் என்ற உந்துதலுடனும் செய்யும் எந்தவொரு செயலும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்து நோய்களை தடுக்கும். ஒவ்வொருவரும் ஓவியம் தீட்டுவது, தோட்டம் அமைப்பது, சிற்சில சிற்பங்கள் செய்வது, சமூக சேவைகளில் ஈடுபடுவது என்று எதிலாவது ஆர்வமாக ஈடுபடுங்கள் நோய்கள் உங்களை தீண்டாது.
மனஅழுத்தம் தவிர்ப்பது, சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் நல்ல உறவு ஆகியவைதான் முழு ஆரோக்கியமான வாழ்க்கையாக இருக்கும். இந்த விஷயங்களை ஒரே சீராக கூடாமலும், குறையாமலும் கடைபிடித்தால் போதும்; வாழ்க்கை என்றும் சந்தோஷம்தான்.