மரணத்தின் ஒத்திகையைப் பார்க்கும் மகளிரினம்!

Women
Women
Published on

- தா.சரவணா

ஒரு திருமணம் என்ன செய்துவிடும்? ஒரு சாதாரண மஞ்சள் கயிற்றுக்கு அவ்வளவு சக்தியா? எனக் கேள்வி எழுப்பி,‛ லிவிங் டூ கெதர்’ எனக் கூவி, நம் கலாச்சாரத்தை கலைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் பதர்களுக்கு, பெண் சக்தி, பெண்ணின் தியாகம் குறித்து எப்போது தெரிய வரும்? எனத் தெரியவில்லை.

திருமணம் என்பது, ஆணுக்கு சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் பெண்ணுக்கோ, நன்கு வளர்ந்த நாற்றை பறித்து வேறு இடத்தில் நடப்படுவது போலாகும். அதில் அவள் எவ்வளவு பாதிக்கப்படுகிறாள்? எத்தனை இழப்புகள்? ஒரு வீட்டில் மகாராணிபோல இருந்துவிட்டு, வேறொரு வீட்டுக்குச் சென்று அங்கு சகலமுமாக மாறி, தன் ராஜ்யத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்காக அவள் இழந்தது ஏராளம்.

இதில் பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்ணின் தந்தைகள்தான். ஏனெனில், அவ்வளவு நாள் மகளை ராணி மாதிரி வைத்திருந்துவிட்டு வேறொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பது என்பது அவ்வளவு எளிதில் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், திருமணம் செய்து கொடுத்த நபர் மிகவும் நல்லவராக இருந்துவிட்டால், அந்த தகப்பனைப்போல கொடுத்த வைத்தவர் யாரும் இல்லை. அப்படிப்பட்ட நல்ல மாப்பிள்ளை அமைந்த நிலையில், அந்த கணவரின் வாக்குமூலம்...

‘எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள். எனக்கு மனைவியாக வந்த பின்பு அவளுக்கென்று இருந்த ஆசைகளை, கனவுகளை மறந்து விட்டாள். இப்போது நான் அழுதால் அழுகிறாள், நான் சிரித்தால் சிரிக்கிறாள் நான் துடித்தால் துடிக்கிறாள், எனக்காகவே வாழ்கிறாள். ருசியாக உணவு சமைத்து தருகிறாள். ரகசியமாக காதல் செய்கிறாள். காலையில் நான் எழும்புவதற்கு முன்பு அவள் எழுந்து விடுகிறாள். இரவில் வீடு வருவதற்கு தாமதம் ஆனால், நான் வரும் வரை தூங்காமல் விழித்திருக்கிறாள்.

மாதவிடாய் வலி அவளை கொல்லும்போதும், சிரித்துக்கொண்டே என் ஆடைகளை துவைக்கிறாள். வீட்டை சுத்தம் செய்கிறாள். அன்பாக பேசுகிறாள். அனைத்து வேலைகளையும் சளைக்காமல் செய்கிறாள். சில இரவுகளில் கட்டிலில் கலந்து, இனிப்பான இன்பம் தருகிறாள். ஓர் நாள்கர்ப்பம் ஆகி விட்டேன் என காதுக்குள் சொல்லி மார்பில் சாய்ந்தாள்.

இதையும் படியுங்கள்:
பாகுபாட்டுக்கு ஆளாகும் பெண்கள்: நவீன உலகில் சமத்துவம் நிலைக்குமா?
Women

பக்குவமாக குழந்தை போல் பார்த்துக்கொண்டேன். பிரசவ வலி எடுத்ததும், அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். ஒரு நர்ஸ், என்னையும் உள்ளே வரச் சொன்னாள். இப்போது அவள் அருகில் நான். கத்தினாள், கதறினாள், ஏதேதோ செய்தாள். அவள் வலியால் துடிப்பதைப் பார்த்து என்னால் தாங்க முடியவில்லை. அழ வேண்டும் என்றும் நான் நினைக்க நினைக்கவில்லை. ஆனாலும் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. இந்த அன்புக்கு என்ன பெயர்? என்று எனக்கு தெரியவில்லை.

சதை கிழிந்து, குழந்தை வெளியில் வரும்போது, அவள் அடைந்த வலியை கடவுள் கூட கவிதையில் சொல்லிவிட முடியாது. பாதி குழந்தை வெளியில் வந்திருக்கையில், வலி தாங்க முடியாமல் கைகள் இரண்டையும் எடுத்து கும்பிட்டு அழுதாள். எவ்வளவு வலி இருந்தால், அவள் கும்பிட்டு அழுதிருப்பாள் என்று நினைக்கும் போது, நான் துடிதுடித்துப் போய் அவளை இறுக அணைத்துகொண்டேன். ஒரு பெரிய சத்தமிட்டு மயங்கி சாய்ந்தாள்.

ஒரு சில நிமிடங்களில் குழந்தையை கையில் கொடுத்தார்கள். நான் அவள் நெற்றியில் முத்தம் வைத்து இறுக்கி அணைத்துகொண்டேன். அவள் அனுபவித்த வலி என்பது நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை என்று உணர்ந்தேன். மரியாதை செய்யுங்கள் எம் இறைவிகளுக்கு.

நான் நேசிக்கும் மனைவிக்காகவும், நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும் இந்த உலகில் வாழும் பெண்களுக்காகவும், இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன். பெண்மை போற்றுதும், பெண்மை போற்றுதும்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com