

பெண்ணின் பெருமை பேசும்
புராண கதைகள் போலவே,
பூமியிலும் பெண்ணுக்கு
பல அவதாரங்களே !
மகள், மனைவி ,
காதலி, சகோதரியென
அவதாரம் எதுவாக இருந்தாலும்
அவள் செய்வதெல்லாம் அதிசயமே!
மகளாக மாறும் போது...
பெற்றோருக்கு பிரிய மகளாவாள்.!
உடன் பிறந்த சகோதரனுக்கு
பாச உறவாவாள்!
உறவுகள் பல கூடி கொண்டாடவே
ஒரு காரணமாவாள்.
பாசப்பிணைப்பு என்பதே
பெண்ணில் தொடங்கி
பெண்களில் தானே
பூரணமாகிறது!
மனைவியாக வரும் போது...
தாலி கட்டியவனுக்கு
தகுந்த துணைவியாவாள்.!
கணவனின் கண்ணசைவை
காதல் விருப்பத்தை,
குரல் கனைப்புச் சத்தத்தை,
களைப்பை… கோபத்தை
அவனது மூச்சு காற்றினில்
முகம் பார்க்காமலே...
மனதை புரிந்து நடப்பாள்.
அம்மா என்கிற அவதாரத்தில்...,
வயிற்றினில் கரு உண்டானதில்
வருகிற வாந்தி குமட்டலை சகித்து
வளரும் சிசுவுக்கும் சேர்த்து...
சத்தான உணவையே சாப்பிடுவாள்.!
வயிற்றுக்குள் வளருகின்ற
வாரிசின் உருவத்தை காணாமலே
அது உருளுவதை, உதைப்பதை
தொட்டு உணர்ந்து மகிழ்வாள்.!
கண்ணுக்கு தெரியாமல் வளரும்
குழந்தையின் அசைவை கொண்டே
ஆகாயத்தில் இடம் வாங்கி
அழகிய மளிகை அமைத்து
அங்கே தூளி கட்டி ஆட்டி ரசிப்பாள்.!
உயிரை அறுக்கும் வலியை தந்து
உறவென வெளிவருகிற பிள்ளைக்கு
உலகத்தையே அறியாத மகவுக்கு
உதிரத்தையே பாலாக்கி ஊட்டுவாள்.!
அன்னையெனும் அன்பு உருவத்தில்..
அவள் செய்வதெல்லாம் அற்புதமே!
ஆக...பெண்மை ஒரு பேரதிசயமே!
- பாரதிமணியன்
பெண்ணே நீ!
பிடுங்கி நடப்படும் நாற்று!
பிடுங்கப்பட்ட இடத்தையும் தழைக்க வைப்பாய்!
நடப்பட்ட இடத்தையும் வாழ வைப்பாய்!
பெண்ணே நீ!
இடிதாங்கியை விடவும் மேலானவள்!
எத்தனை இடிகள் இறங்கி விழுந்தாலும்
அத்தனையையும் அழகாய்த் தாங்கி
குடும்பக் கோபுரத்தை ஒளிரச் செய்வாய்!
பெண்ணே நீ!
கண்ணுக்குத் தெரியாத மின்சாரம்!
வீட்டின் ஒவ்வொரு பொருளையும்
இயங்கச் செய்யும் ஏக சக்தி!
பெண்ணே நீ!
மர்மங்கள் நிறைந்த மந்திரக்கோல்!
உன்னிடமிருக்கும் உயர்ந்த சக்தியால்
வாழ்வையிங்கு வளமான தாக்குவாய்!
பெண்ணே நீ!
கம்பனின் கை எழுத்தாணி!
உன்னை வர்ணித்தே உலகத்தில் இலக்கியங்கள்
நித்தமும் தோன்றும்!நினைவை நிறைக்கும்!
பெண்ணே நீ!
ஆண்டவன் படைத்த அற்புதப் படைப்பு!
அமைதியைப் பூமியில் நிலவிடச் செய்திட
உன்னையன்றி உலகில் வேறேதுண்டு?
பெண்ணே நீ!
மாறுவேடம் தரிக்கும் மகத்தானவள்!
சிறுமியாய் கன்னியாய் மனைவியாய் தாயாய்
பாட்டியுமாகிப் பரிணமிப்பவள் நீ!
பெண்ணே நீ!
வானத்தையும் வளைத்துப் போட்டவள்!
விமான ஓட்டியாய் ராக்கட் பயணியாய்
எதனையும் விடாமல் முன்னேறி நிற்பவள்!
பெண்ணே நீ!
நீராய் நின்று நீளுலகை ஆள்பவள்!
நதியாய் கடலாய் பரந்திருக்கும் சமுத்திரமாய்
நல்லதே செய்திடும் நாயகியும் நீதானே!
பெண்ணே நீ!
எளிதாய் வாழ்வில் ஏற்றத்தை விளைப்பவள்!
கண்பார்வை தனைக்கொண்டே காளையரை உசிப்பெழுப்பி
உச்சத்தைத் தொடவைக்கும் உத்தமப் பெண்ணன்றோ!
பெண்ணே நீ!
இயற்கை வடித்தெடுத்த எழிலான மெஷின்!
உன்னிலிருந்தே உலகம் என்றும் பெருகிடுது!
கண்ணில் வைத்தே உனைக்காப்பாற்றத் தோன்றிடுது!
பெண்ணே நீ!
கண்களுக்கும் மேலான கருப்பொருள் ஆனவள்!
ஆக்குகின்றாய் வளர்க்கின்றாய் அன்பைப் பொழிகின்றாய்
மருந்தாகி நிற்கின்றாய்! மகிழ்ச்சிக்கு வித்தாகின்றாய்!
மகளிர்தினம் மட்டுமல்ல மற்றைய நாட்களிலும்
உந்தன் மகத்துவத்தை உரக்கச் சொல்லிடவே
எந்தன்தமிழ் நினைக்கும்!இனியசொற்கள்தனை வழங்கும்!
விட்டுக்கொடுத்தல் தியாகம் வீட்டின்நலன் காத்தல்
கட்டிய கணவன் கனிவான அவன்பெற்றோர்
உற்றார் உறவினரென்று ஒருவரையும் விட்டுவிடாமல்
குடும்பத் தேரிழுக்கும் குவலய நற்பெண்களே!
உங்கள் வாழ்விலென்றும் ஒளிரட்டும் இன்பநிலா!
என்றைக்கும் முழுநிலவாய் இருந்துலகைக் காத்திடுவீர்!
- ரெ. ஆத்மநாதன்