
உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான தரத்தில் சுகாதாரப் பராமரிப்புகளை வழங்க வேண்டும் என்பதை நாடுகளுக்கு வலியுறுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இந்நாள். உலகின் எப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வருமானம் பாலினம் சாதி மதம் போன்ற எவ்வித பாகுபாடும் இன்றி தரமான சுகாதாரப் பாதுகாப்பை பெறவேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் நோக்கம்.
சுகாதாரத்தில் உடல் பாதிப்புகள் மட்டுமின்றி மன நலனும் அடங்கும். பண்பாடு, தனி மனித ஒழுக்கம் மற்றும் வளர்ப்பு சூழல், பழக்க வழக்கங்கள், வசதி வாய்ப்புகள், பாலினம் போன்றவைகள் சுகாதாரத்தின் அடிப்படை களாக உள்ளன. இக்காலத்தில் அனைவருக்கும் சம அளவு சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் சமமற்ற பொருளாதாரம்.
நம் வாழ்வில் இன்பங்களுடன் விபத்து, பொருளாதாரக் குறைவு, உடல் குறைபாடு, முதுமை, துணையின் இழப்பு போன்ற எண்ணற்ற துன்பங்களும் அவ்வப்போது வந்து செல்லும்..அவற்றிலிருந்து மீண்டு மீண்டும் புத்துணர் வுடன் வாழ உறுதுணையாக இருப்பது நமது உறுதியான மனநலத்துடன் நோயற்ற வலுவான உடல் நலமும்தான். ஆகவேதான் குடும்ப ஆரோக்கியமும் உணவும் உடையும் இருப்பிடமும் சுகாதாரப் பராமரிப்பும் கொண்ட நல்வாழ்க்கையை ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் போதிக்க வேண்டும். அதிலும் பள்ளிகளில் சுகாதாரத்தை பேணும் முறைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு கற்பித்து அவர்களை நோய் பாதிப்பிலிருந்து காக்கும் கடமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கடமை. கர்ப்பிணிப்பெண்கள் தங்கள் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியமான எதிர்காலத்தை மனதில் வைத்து சத்தான உணவுகளை எடுப்பதும் மருத்துவர்களின் அறிவுரைப்படி நடப்பதும் அவசியமானது. முதியவர்களின் நலனை அக்கறையுடன் கவனித்து பராமரிப்பதும் நம் கடமைகளில் ஒன்று.
குறிப்பாக மக்கள் அனைவருக்கும் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி நோய்கள் பற்றிய விபரங்கள், நோய்த்தடுப்பு முறைகள், நோயினை குணப்படுத்துதல், தரமான மருத்துவ பராமரிப்பு போன்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் சிறந்த மருத்துவமனை வசதி களையும் அரசு செய்து தரவேண்டும். உலக மக்களில் சுமார் 100 கோடி பேருக்கு சுகாதாரத் தேவைகள் நிறைவேறுவதில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரமொன்று தெரிவிக்கிறது. இந்த நிலை மாற பணம் என்ற அடிப்படை வேறுபாட்டைக் களைந்து அனைவரும் சமமான மருத்துவ வசதிகள் பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். சுகாதார விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான சமூகம் பேண இந்நாளில் உறுதி எடுப்போம்.