
என்னதான் கடுந்தவம் புரிந்தவர்களாக இருந்தாலும், இடைவிடாது இறைவனை பூஜிப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு இறைவனின் தரிசனம் கிடைக்குமோ கிடைக்காதோ, ஆனால், ஒரு குருவை நாடி அவர் உபதேசிக்கும் மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரிப்பவர்களுக்கு இறைவனின் கரிசனமும் தரிசனமும் நிச்சயம் கிடைக்கும். மனித வாழ்வின் முக்கிய நிலையான மோட்ச நிலை என்பதையே இறைவனால் நேரிடையாக வழங்க முடியாதாம். ஆம் குருமுகமாக வந்தால் மட்டுமே அந்த மோட்சம் என்பதே சித்திக்கும். குருவின் recommendation letter இல்லாமல் மோட்ச பதவி என்பதை கொடுக்க முடியாது என்பார் இறைவன்.
குருவின் மந்திரம் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? சந்தேகமே வேண்டாம். குருவால் உபதேசிக்கபட்ட மந்திரம் சக்தி வாய்ந்தது என்று சக்தியின் நாதனே சாட்சியாய் வந்து காண்பித்த ஒரு நிகழ்வு உண்டு.
ஒரு கிராமத்தில் கல்வியிலும் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற குரு ஒருவர் இருந்தார். அவரிடமிருந்து கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள பல ஊர்களிலிருந்தும் வந்து அவரின் குருகுலத்தில் வாசம் செய்து கல்வி பயின்று வந்தனர் மாணவர்கள். தன்னிடம் படிக்கும் அனைவருமே அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இரவு பகல் பாராது பாடங்களை நடத்தி வந்தார் அந்த குரு. அவரின் சீடர்கள் அனைவருமே அதி புத்திசாலிகளாக செதுக்கபட்டு வந்தனர். ஆனால் அந்த குருவுக்கே மிகுந்த வேதனை தரும்படி ஒரே ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் பெயர் ரிஷபன். குரு எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் சரி, எப்படி சொல்லி கொடுத்தாலும் சரி அது அவனுக்கு மட்டும் புரியாத புதிராக இருந்தது. தாம் நடத்திய பாடங்களிலிருந்து கேள்வி கேட்பதும் அதற்கு மாணவர்கள் விடை அளிப்பதும் வழக்கமாக நடக்கும். ஆனால், ரிஷபன் மட்டுமே பாடத்திற்கு துளி கூட சம்பந்தேமே இல்லாத, அடிப்படையான விஷயங்களைக் கூட குருவிடமே கேள்வி கேட்பான். அவனது கேள்வி நேரம் கேலி நேரமாக மாறி போனது மற்ற மாணவர்களுக்கு. குருவுக்கோ மனதுக்குள் கேவி கேவி அழும் நேரமாக மாற ஆரம்பித்தது. ரிஷபன் மீது தனி கவனம் செலுத்தி அவனுக்கு புரியும்படியாக எளிய முறையில் பல உதாரணங்கள் கொண்டு அவனுக்கு பாடம் நடத்தியும், ரிஷபனால் எதையுமே கிரஹித்து கொள்ள முடியாமல் போனது.
ரிஷபனை பார்த்து மற்ற மாணவர்கள் கேலி செய்வதை குருவால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு கல்வி வரவில்லையே என்ற கவலையை விட அச்சோ பாவம் இவனை பார்த்து எல்லாரும் கேலி செய்கிறார்களே என்ற கவலை தான் அந்த குருவிடம் அதிகம் இருந்தது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்த குரு ரிஷபனை தனியாக அழைத்து, " ரிஷபா உன் அறிவின் மீதோ திறமையின் மீதோ எனக்கு அவ நம்பிக்கை இல்லை. முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. ஒரு பாடத்தை ஒரே முறை படித்தால் கிரஹித்து கொள்பவர்கள் மட்டுமே தான் புத்திசாலி என்பது கிடையாது. திரும்ப திரும்ப படித்து அதை மனதில் பதிய வைத்து கொள்பவர்களும் புத்திசாலிதான். இங்கிருக்கும் மாணவர்கள் உன்னை பார்த்து கேலி பேச்சு பேசுவதை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நீ இந்த குருகுலத்தை விட்டு போய் விடு. என் ஆசிர்வாதம் எப்பவும் உன் கூடவே இருக்கும்" என்றார்.
மனம் கலங்கிய ரிஷபன், "நீங்கள் சொன்னபடியே செய்கிறேன். நான் இந்த இடத்தைவிட்டு போவதற்கு முன் எனக்கு ஒரே ஒரு மந்திரத்தை மட்டும் சொல்லி கொடுங்கள்" என்று கேட்க, அவனுக்கு புரியும் விதத்தில் மிக மிக எளிதாக "வா நந்தி போ நந்தி" என்பதை மந்திரமாக அவனுக்கு உபதேசித்து அவனை அனுப்பி வைத்தார் அந்த குரு நாதர். "ரிஷபா நான் உனக்கு உபதேசம் செய்திருக்கும் இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். வேறு எதிலும் உன் சிந்தனையை செலுத்தாமல், ஒரு மண்டலம் இந்த மந்திரத்தை நீ பக்தி சிரத்தையோடு சொல்லி கொண்டிருந்தால் நீ நினைத்த காரியம் நிறைவேறும்" என அவனை வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தார் அந்த குரு நாதர்.
ரிஷபனுக்கோ மிகுந்த சந்தோஷம். ஆஹா நம் குரு நாதர் ஒரு மிகச்சிறந்த மந்திரத்தை தமக்கு உபதேசித்து விட்டாரே என்ற உற்சாகத்தில் விடாமல் அதை ஜபிக்க தொடங்கினான். சதா சர்வ காலமும் அவன் வாக்கிலும் வாழ்க்கையிலும் "வா நந்தி போ நந்தி" நீக்கமற நிறைந்து விட்டது. குரு நாதர் சொன்னபடி அந்த மந்திரத்தை மட்டுமே உச்சரித்து கொண்டிருந்த ரிஷபனின் வாழ்க்கையில் எண்ணி பார்க்கவே முடியாத அளவுக்கு பல அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன. இவை அத்தனைக்கும் காரணம் தன் குருவும் அவர் உபதேசித்த அந்த உயர் மந்திரமும்தான். எனவே அவரை பார்த்து நன்றி சொல்லியே தீர வேண்டும் என புறப்பட்டான் ரிஷபன்.
மாணவர்களுக்கு அன்றைய தினத்திற்கான பாடங்களை சொல்லி கொடுத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்த குரு நாதர். அவரது தியானம் கலையும் வரை காத்திருந்த ரிஷபன் அவர் கண் விழித்ததும் அவர் காலில் விழுந்து வணங்கி, "குருவே நீங்கள் சொன்னபடி ஒரு மண்டலம் அந்த மந்திரத்தை விடாமல் சொல்லி வந்தேன். நந்தி பகவானே எனக்கு காட்சி அளித்து விட்டார். நன்றி குருவே" என ஆனந்தமாக ஆத்மார்த்தமாக கண்களில் நீர் மல்க அவரை பார்த்து சொன்னான் ரிஷபன். ரிஷபன் சொன்ன வார்த்தைகளை கேட்டு குழப்பமும் கலக்கமும் அடைந்தார் குரு நாதர். எவ்வளவோ ஸ்லோகங்களையும் பூஜைகளையும் இடைவிடாமல் செய்து வரும் முனிவர்களுக்கும் தவ யோகிகளுக்கும் காட்சி கொடுக்காத நந்தி பகவான் இவனுக்கு எப்படி காட்சி கொடுத்திருப்பார் என்ற சந்தேகம் ஏற்பட்டது அந்த குருவுக்கு. "ரிஷபா… நீ சொல்வது உண்மையானால் எங்கே அந்த மந்திரத்தை சொல்லி இப்பொழுது என் கண் முன்னே அந்த நந்தி தேவரை வர சொல்" என்று குரு கேட்க உடனே ரிஷபனும், "வா நந்தி போ நந்தி" என்று உற்சாகமாய் உச்சரிக்க ஆரம்பித்தான்.
ரிஷபனின் மந்திரத்தை கேட்ட சில மணி நேரத்தில் அங்கே வந்தார் நந்தி தேவர். "ரிஷபா, என்னை எதற்காக அழைத்தாய்?" என நந்தி தேவர் கேட்க,
"நந்தி தேவரே எனக்கு காட்சி அளித்த நீங்க இந்த மந்திரத்தை எனக்கு போதித்த எம் குரு நாதருக்கும் காட்சி அளிக்க வேண்டும்" என ரிஷபன் வேண்ட, அந்த குரு நாதருக்கு காட்சி கொடுத்தார் நந்தி தேவர்.
குரு நாதருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை,' நன்றி நந்தி தேவா. இந்த மாணவனுக்கு நான் சொல்லி தந்தது ஒரு சிறு வாக்கியம் அவ்வளவே அந்த வாக்கியத்திற்கு மனம் இறங்கியா தாங்கள் காட்சி கொடுத்தீர்?" என நந்தி தேவரை பார்த்து அந்த குரு நாதர் கேட்க…
அதற்கு நந்தியோ சிரித்தபடியே, "நீங்கள் இந்த சீடனுக்கு சொல்லி தந்தது என்னவோ இரண்டு வாக்கியங்கள்தான். அந்த வாக்கியங்களை குருவின் வாக்காக குரு உபதேசித்த உயரிய மந்திரமாக கொண்டு இந்த சீடன் பசி தாகம் தூக்கம் துறந்து இடைவிடாது உச்சரித்து கொண்டே இருந்தான். இதை கண்ணுற்ற சிவ பெருமான்தான் என்னை சீடனுக்கு காட்சி தரும்படி கட்டளை இட்டார். நான் கூட சிவபெருமானிடம், 'ஈஷ்வரா… அவன் சொல்லும் வாக்கியம் அவ்வளவு பராக்கிரமம் வாய்ந்ததா?' என்று கேட்டேன் அதற்கு பரமேஷ்வரன், 'குருவின் உபதேசத்தை உயர்வாக கொண்டவனை நாம் மதித்தே தீர வேண்டும். தன் குரு மீது நம்பிக்கை கொண்டு இருப்பவனுக்கு அருள் புரிய வேண்டியது நம் கடமை என்றார். 'ஒரு வாக்கியமோ வார்த்தையோ அது குருவின் வழி வரும்போது அது மந்திரமாக மாறி விடுகிறது. தம் குரு போதித்த அந்த மந்திரம் தமக்கு எல்லா நன்மைகளையும் பெற்று தரும் என்ற நம்பிக்கை அங்கே சேரும்போது, நல்வாழ்க்கைக்கு குறை ஏது?" என்று விளக்கம் அளித்தார்.