பெண்களின் மூளை சிறியதாக இருப்பது ஏன்?

பெண்களின் மூளை சிறியதாக இருப்பது ஏன்?
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on: 
-ஜி.எஸ்.எஸ்.

ஆணின் மூளையை விட பெண்ணின் மூளை சிறியது. இப்படிக் கூறுவது ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் கூடத்தான்.

பெண்ணின் மூளை ஏன் சிறியதாக இருக்க வேண்டும்? இதற்கு சுவாரஸ்யமான ஒரு விடையை அளிக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.
1959ல் டிமிட்ரி பெல்யஸேவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஓர் ஆராய்ச்சியை தொடங்கினார். அந்த ஆராய்ச்சி பல வருடங்களுக்கு தொடர்ந்து. காட்டில் வசிக்கும் குள்ளநரிகளில் சிலவற்றை (அவை சின்னக் குட்டிகளாக இருக்கும்போதே) தன் வீட்டுக்கு கொண்டுவந்து வளர்க்கத் தொடங்கினார்.

காலப்போக்கில், அவை வளர வளர ஏதோ வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியைப்போலவே நடந்துகொள்ளத் தொடங்கின. சுருக்கமாகச் சொல்வதென்றால் அவை நாயைப் போல நடந்து கொண்டன. வாலாட்டுவது, குரைப்பது, உத்தரவுக்கு கீழ்படிவது, அன்புக்கு ஏங்குவது – இப்படி குள்ளநரிகளின் குணத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லா இயல்புகளை கொண்டிருந்தன வீட்டில் வளர்க்கப்பட்ட குள்ளநரிகள்.

இப்படி வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களின் மூளை அளவு காட்டில் வளரும் அதே இனத்தைச் சேர்ந்த மிருகங்களின் மூளையைவிட அளவு குறைவாகவே இருந்தது. (பொதுவாகவே நாய், பூனை, ஆடு, பன்றி போன்ற வீடுகளில் வளர்க்கப்படும் மிருகங்களின் மூளை சிறியதாகவே உள்ளது. அதே அளவு கொண்ட காட்டு மிருகங்களின் மூளையைவிட சுமார் 25% குறைவு). மனித மண்டையோட்டின் அளவு, கடந்த பல்லாயிரக்கணக்கான வருடங்களில், மிகச்சிறய அளவுகளில் குறைந்துகொண்டு வருகிறது. இதற்கு ஒரு காரணமாக மனித இனம் காட்டுத்தனமான வாழ்க்கை முறையிலிருந்து மாறி வருவதைக் குறிப்பிடுகிறார்கள்.

ராபர்ட் ட்ரிவர்ஸ் எனும் விஞ்ஞானி 1985ல் "சமூக பரிணாம வளர்ச்சி" எனும் நூலை எழுதினார். இதில் தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் பழகும் சமூக உணர்வுக்கும் மூளையின் அளவுக்கும் தொடர்பு உள்ளது என்றார்.

சரி, இவற்றிற்கும் பெண்ணின் மூளை அளவில் சிறியதாக இருப்பதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பல சமூகங்களில் பெண் அடக்கப்பட்டு வந்திருக்கிறாள். பல காலகட்டங்களில் வெளியில் செல்வது ஆணாகவும், வீட்டில் அடங்கியிருப்பது பெண்ணாகவும் இருந்திருக்கிறார்கள். பெண்ணின் மூளை சிறியதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் மேலே குறிப்பிட்ட விஞ்ஞானிகள்.

ஆனால் ஒன்று மூளையின் அளவு குறைந்த விலங்குகளுக்கு உணர்வுப்பூர்வமான அறிவாற்றல் அதிகமாக இருக்கும். வீட்டில் வளர்க்கப்பட்ட குள்ளநரிகள் மனிதனின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படுவது இதற்கு ஓர் உதாரணம்.

தவிர உடல் அளவுக்கும் மூளையின் அளவுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒரே வயது கொண்ட சராசரி ஆணின் உயரம், ஒரு சராசரி பெண்ணின் உயரத்தைவிட அதிகமாகவே இருக்கும். எனவே ஆணின் மூளை சற்று பெரியதாக இருப்பது இயல்புதான்.
சமீபத்தில் ரோசலின் பிராங்கிளின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ குழு, லிசி எலியட் என்ற நரம்பியல் விஞ்ஞானியின் தலைமையில், ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவு கீழே உள்ள வகையில் அமைந்தது.

பெண்ணின் மூளை ஆணின் மூளையை விட சுமார் 11 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுவாகவே ஒரு ஆணின் உடல் அளவைவிட பெண்ணின் உடல் அளவு குறைவாக இருப்பதுதான். உடல் அளவு அதிகமாக உள்ள ஆணின் மூளை அளவு, உடல் அளவு குறைவாக உள்ள ஆணின் மூளை அளவைவிட அதிகமாக இருக்கிறது.

எனவே பெண்ணின் மூளை அளவு குறைவானது என்று பொதுவாகக் கூறுவது அவ்வளவு சரியல்ல. பெண் என்பதால் அல்ல, உடல் பொதுவாக குறைவாக அளவில் இருப்பதால், பெண்ணின் மூளை அளவு குறைவாக இருக்கிறது.
ஆராய்ச்சிகள் தொடர்கின்றன…

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com