வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!
Published on

நெய்வாசல் நெடுஞ்செழியன்

யிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம், வெள்விடை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. இறைவன் சுவேதவிருஷபேசுவரர், வெள்விடைநாதர், ரத்னாங்குரேசுவரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். திருமால் வெள்விடையாகி (வெண்மை நிற நந்தி) சுவாமியை தரிசித்து, அவரை தனது முதுகில் தாங்கிக்கொண்டதால் இத்தல இறைவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் வெள்விடை என்பதே வெள்ளடையாக மருவியது.

பரத்வாஜன் என்ற அந்தணனின் வறுமையைப் போக்குவதற்காக குபேரனைக் கொண்டு அளவிலா பொன்மணிகளை அருளி, அம்மணிகளை ஜுவாலைகளோடு இருக்கச் செய்தமையால், இத்தல இறைவனுக்கு ரத்னாங்குரேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்பாள் நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கன்னி அம்மை என்றும் அழைக்கப்படுகின்றார். சிதம்பரம் நடராச பெருமானைப் போல, பத்து தீர்த்தங்களைக் கொண்டவராகத் திகழ்கிறார் இத்தல இறைவன்.

ன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவின் எடைக்கு நிகராக தனது தொடை தசைகளை, அதை விரட்டி வந்த வேடனுக்குக் கொடுத்து, புறாவைக் காப்பாற்றிய சிபி சக்கரவர்த்தியின் கருணையை அறிவோம். அப்படிப் புறாவாக உருமாறி வந்த அக்னி பகவானை தோஷம் பற்ற, அவர் எடுத்த புறா வடிவம் நீங்கவில்லை. அந்த தோஷம் நீங்க, காவிரி நீரைக்கொண்டு இத்தல சுவாமிக்கு அபிஷேகம் செய்து அக்னி பகவான் தனது சுய உருவைப் பெற்றதால், திருக்குருகாவூர் என்ற பெயர் ஏற்படலாயிற்று. மகாவிஷ்ணு, பிரம்மா, சரஸ்வதி, இந்திரன், வருணன், அக்னி ஆகியோர் இத்தீர்த்தத்தில் நீராடி வெள்ளடைநாதரை வழிபட்டு பேறு பெற்றதாக ஆலய வரலாறு கூறுகின்றது. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், கொங்கண சித்தர், காகமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர் ஆகியோர் இத்தல இறைவனைப் பாடியுள்ளனர்.

ன்னுடனான வாதில் தோற்று, கழுமரம் ஏறிய சமணர்களின் செயலால் தோஷத்திற்கு ஆளானார் திருஞானசம்பந்தர். அதற்குப் பிராயசித்தமாக கங்கையில் நீராட விரும்பினார். சம்பந்தரின் விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு தை மாத அமாவாசையன்று சிவபெருமான் இத்தலத்திலுள்ள வெள்விடைத் (கிணறு) தீர்த்தத்தில் கங்கையை பால்போல பொங்கச் செய்து, அதில் நீராடச் செய்தார். இதனால் சம்பந்தரின் தோஷம் நீங்கிற்று. இதன் காரணமாக இந்தக் கிணற்றுக்கு, 'பால் கிணறு' என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வு இவ்வாலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, கங்கையில் நீராடிய பலனைப் பெறுகின்றனர்.

ருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சீர்காழி திருத்தலத்தை தரிசித்துவிட்டு திருக்குருகாவூர் சென்றார். அது கோடைக்காலம், வெயிலின் வெம்மையாலும், தண்ணீர் வேட்கையாலும் பசியாலும் சுந்தரரும் அவருடன் வந்த அடியார்களும் தவித்தனர். அப்போது ஒரு வேதியராய் உரு மாறி வந்த வெள்ளடைநாதர், தண்ணீர்பந்தல் அமைத்து அமரச் செய்து, களைப்பாற அவர்களுக்கு குளிர்ந்த நீரும், சுவையான உணவும் தந்து ஓய்வெடுக்குமாறு கூறினார். பசியாறிய களைப்பினால் அடியார்கள் உறங்கினர். பிறகு விழித்துப் பார்த்தபோது அங்கிருந்த பந்தலையும் உணவு கொடுத்த வேதியரையும் காணவில்லை. உணவும் நீரும் தந்து உபசரித்தது சாட்சாத் அந்த இறைவனே என்ற உண்மையை உணர்ந்த சுந்தரர், 'அறிந்திலேன்' எனும் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டே திருக்குருகாவூர் ஆலயத்தைச் சென்றடைந்து இறைவனை பக்தியுடன் வலம் வந்தார்.

மூன்று பிராகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஆலயம். கருவறை கோபுரங்களைத் தவிர, ராஜகோபுரம் கிடையாது. மகாமண்டபத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும் அதற்கடுத்ததாக கருவறையும் அமைந்துள்ளது. கருவறையில் பெருமான் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். கருவறைக் கோட்டத்தைச் சுற்றி செல்வவிநாயர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். நவ பாஷாணத்தால் ஆன பழனி பாலதண்டாயுதபாணியை உருவாக்கிய போகர், இத்தல செல்வ விநாயகரை வழிபட்ட பின்னரே அம்முயற்சியை மேற்கொண்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார். இந்த செல்வ கணபதியை வணங்குவோருக்கு செல்வம் குவியும்.

கொடிமரத்தின் வடக்கே தெற்கு நோக்கி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் வடக்கில் மற்றொரு முருகன் சன்னிதி அமைந்துள்ளது. இதில் முருகப்பெருமான் இரு தேவியருடன் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். தென்திசை பார்ப்பதால் இவரை குரு அம்சம் கொண்டவர் என்கிறார் அகத்தியர். இந்த முருகனை தொழுவோர், நவக்கிரக ஆலயத்தில் லட்சார்ச்சனை செய்த புண்ணியத்தைப் பெறலாம். இதனால் இந்தக் கோயிலில் தனியாக நவக்கிரகங்கள் இடம்பெறவில்லை. இந்த முருகப் பெருமானை அமாவாசையன்று வழிபட, எம பயம் நீங்கும் என்பதும் நம்பிக்கை. தினசரி நான்குகால பூஜைகள் நிகழும் இந்தக் கோயிலில், சிவபெருமானுக்குரிய அனைத்து விசேஷங்களும் நடைபெறுகின்றன.

அமைவிடம் : சீர்காழியிலிருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் வடகால் என்ற ஊரிலிருந்து தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோயில். சீர்காழியிலிருந்து பேருந்து வசதியும், வடகாலிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

தரிசன நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com