நடுவர் பணியில் அதிகரிக்கும் பெண்கள்

விளையாட்டு
நடுவர் பணியில் அதிகரிக்கும் பெண்கள்
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on: 

சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க போக்கை கவனித்திருக்கலாம்.

       சூப்பர் ஹெவி வெயிட் ஆடவர் குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்று.  பவோலா ஃபலோர்னி என்பவர் கண்டிப்பான நடுவராக அதில் தன் பணியைச் செய்தார்.  (ஒரு குத்துச் சண்டை வீரரின் குத்து தற்செயலாக அவர் முகத்தில் பட அதை அவர் திறம்படக் கையாண்டார்).

       65 கிலோ எடைகொண்ட ஆடவர் மல்யுத்தப் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் மார்ஷியா சியாஸன் என்பவர் அழுத்தமாக அப்போது விசிலை ஊதிக்கொண்டிருந்தார்.

       ஆக நடுவர்களாக விளங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  காமன்வெல்த் விளையாட்டுகளில் மல்யுத்தப் பிரிவில் இருபத்தோரு நடுவர்களில் பதினைந்து பேர் பெண்கள். அதாவது கிட்டத்தட்ட 70 சதவிகிதம். இந்தியாவிலிருந்தும் பெண் நடுவர்கள் கலந்து கொண்டார்கள். ஓர் எடுத்துக்காட்டு ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவின் நடுவராக இருந்த அக்ஷதா ஜாதவ்.

கட்டாரில் நடைபெறப்போகும் ஆடவர் உலக கால்பந்து போட்டியில் மூன்று பெண்கள் நடுவர்களாகவும் மூன்று பெண்கள் உதவி நடுவர்களாகவும்  பணியாற்ற இருக்கிறார்கள்.

       சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பும் அதிக அளவில் பெண் நடுவர்களை நியமிக்க இருக்கிறது. ஒவ்வொரு தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பும் குறைந்தது ஒரு பெண் நடுவரையாவது கொண்டிருக்க வேண்டும் என்று அது கூறியிருக்கிறது.  உலக அளவில் மிக அதிகமான பெண் நடுவர்களைக் கொண்டிருப்பது கூடைப்பந்து விளையாட்டுதான்.

      மாதத்தின் ஒவ்வொரு முதல் திங்கட்கிழமையும் இணையத்தின் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. அச்சமயம், தங்களது அனுபவங் களையும் போட்டியின்போது பின்பற்றிய உத்திகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறார்கள்.

       என்றாலும் விளையாட்டு வீராங்கனைகளைப் போலவே பெண் நடுவர்களும் பல தடைகளைத் தாண்டித்தான் முன்னேற வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு ஒட்டுமொத்தமாக 24.3 சதவிகித நடுவர்கள்தான் பெண்கள் எனும் நிலை.

       விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களும் அவ்வப்போது பெண் நடுவர்கள் குறித்து கேலியான வார்த்தைகளைக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வு இது. கிறிஸ்டியன் டிரோன் என்ற கால்பந்து வீரர் தவறான முறையில் ஆடியதால் அவருக்கு ‘ஃபவுல்’ கொடுத்தார் அந்தப் போட்டியின் ரெஃபரியான டல்மா கோர்டாடி என்ற பெண்மணி.

       உடனே அந்த விளையாட்டு வீரர் இதைக் கடுமையாக ஆட்சேபித்தார். அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை விலக்கி அழைத்துச் சென்றார்கள்.  அப்போது மஞ்சள் அட்டையை (எச்சரிக்கை செய்யும் விதத்தில்) அவருக்கு அளித்தார் ரெஃப்ரி.

       இதைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற டிரோன் தன்னை இழுத்துச் சென்ற தன் குழுவினரை உதறித்தள்ளி விட்டு  வெகுவேகமாக டல்மாவை நோக்கி முன்னேறி அவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார்.  இதனால் டல்மா  கீழே விழுந்தார். காவலர்கள் மைதானத்துக்குள் நுழைந்து டிரோனைக் கைது செய்தார்கள். 

       நடுவர் மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது.  அவர் முகத்திலும் கைகளிலும் காயங்கள். தனக்கு மஞ்சள் அட்டை கொடுத்ததைவிட ஒரு 'பெண் நடுவர்' அதைக் கொடுத்ததைத்தான் அந்தக் கால்பந்து வீரர் அவமானமாக உணர்ந்தார். ஆத்திரப்பட்டார்.

       உலக கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) சீனியர் துணைத் தலைவர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்  'ஒரு பெண்ணின் இடம் சமையல் அறையே தவிர கால்பந்து மைதானம் அல்ல' என்று வெளிப்படையாக கருத்து தெரிவிக்க, அவர் தன் பதவியிலிருந்து நான்கு மாதங்களுக்கு தாற்காலிகமாக நீக்கப்பட்டார்.

       இதுபோன்ற விமர்சனங்களுக்கும் செயல்களுக்கும் சரியான எதிர்வினை என்பது அவற்றைப் புறம் தள்ளிவிட்டு குறிக்கோளை நோக்கி சென்றுக்கொண்டே இருப்பதுதான். அதைப் பெண் நடுவர்கள் நன்றாகவே புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com