பூரியின் பூரணமான குரு

குரு அருள் திரு அருள்
பூரியின் பூரணமான குரு

பகுதி 15

“ உன்னை புல்லைக் காட்டிலும் தாழ்வாக நினைத்துக்கொள்.

மரத்தைக் காட்டிலும் பொறுமையாக இரு.

யாராவது உன்னை அவமானப்படுத்தினால், அதை மனதில்

ஏற்றிக்கொள்ளாதே, கலங்கிடாதே...

மற்றவர்களிடம் என்றுமே நல்ல மரியாதையாக பேசு,

மரியாதையாக நடத்து.

இந்த மனோபாவத்தோடு விடாமல் “ ஹரி” கீர்த்தனம் செய்வாய்.”

ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா பிரபு செய்த அற்புதமான உபதேசம் இது. பூரி ஜகன்னாதன் மீது அபாரமான பக்தி கொண்ட ஒரு மஹா குரு அவர். க்ருஷ்ண பக்தியை எப்படி செய்ய வேண்டும் என்று உலகிற்கு காட்டி தந்தவர் அல்லவா அவர்?

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

என்று வையகம் முழுக்க நாம ஜபம் ஒலிக்க காரணமான நாம அவதார புருஷர், ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாபிரபு. அவரை கண்ணெதிரே நடமாடும் ஜகன்னாதராகதான் மக்கள் கொண்டாடினார்கள்.

ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்வின் அவதாரமாகவே கொண்டாடப்படும் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா பிரபு புரிந்த லீலைகள் பற்பல. ஒரு முறை பூரி ஜகன்னாத யாத்திரையின்போது, தன் சிஷ்யர்களை ஒன்பது கோஷ்டிகளாக பிரித்து, அவரவர்களை நாம ஜபம் செய்ய சொல்லியும், பஜனை பாடல்களை பாட சொல்லியும், அந்தப் பாட்டில் தன்னை மறந்து ஆடவும் சொல்லிவிட்டார் சைதன்யர். 9 குழுக்களும் பக்தி பரவசத்தில், ஜகன்னாத நாமாவில் திளைத்து ஆடி கொண்டிருந்தபோது, அவரவர்களுக்குள் ஓர் ஆசை தோன்றியது. நம் குருவான ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாபிரபு நம்மோடு ஆடினால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த மஹானோடு, மஹா குருவோடு சேர்ந்து ஆடுவதல்லவா மஹா பிரசாதம் என்று அவர்கள் ஒவ்வொருமே ஆசைப்பட்டனர். ஆனால், குரு நம்மோடு சேர்ந்து ஆடுவது என்பது எல்லாம் நடக்குமா? அதற்கு மஹா புண்யம் அல்லவா செய்திருக்க வேண்டும்? சைதன்ய மஹா பிரபு நம்மோடு சேர்ந்து ஆடுவது என்பது அந்த பூரி ஜகன்னாதரே நம்மோடு ஆடுவதை போல் அல்லவோ என்று அவர்கள் ஆசைப்பட்டது குரு சைதன்யருக்கு தெரிந்து விட்டது. சிஷ்யர்களின் உண்மையான மனதை குரு அறியாமல் இருப்பாரா என்ன? ரத யாத்திரையின்போது ஒரே சமயத்தில் 9 கோஷ்டிகளிலும் இருந்தார் சைதன்யர். அவர்கள் ஒவ்வொருவம் ஆசைபட்டதை போலவே அவர்கள் அனைவருமே வியக்கும் வண்ணம் ஒரே சமயத்தில் அவர்களோடு ஆடினார், பாடினார். ரத யாத்திரை முடிந்ததும், அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு குரு ஆடினாரே என்னோடு குரு ஆடினாரே என்று சொல்லி கொண்டபோதுதான் அவர்களுக்கே தெரிந்தது, அவர்கள் அனைவரோடும் அந்த மஹான் ஒரே சமயத்தில் நாம ஜபம் ஜபித்து கொண்டு பக்தி பரவசத்தில் ஆடினார் என்பதே.

ஒரு சமயம் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா பிரபு ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீ கூர்மம் என்ற இடத்திற்கு சென்றார். ஸ்ரீகூர்மத்தில் வாசுதேவ கோஷ் என்ற ஒரு மிக சிறந்த பக்தர் அந்தச் சமயத்தில் இருந்தார். தொழு நோயின் கோர பிடியில் தவித்து வந்த அவரை அவரது குடும்பத்தினர்களே கை விட்டிருந்த சமயம் அது. அவரது ஆசை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அழகு, செல்வம், உற்றார் உறவினர் என அனைவரையும் இழந்து விட்டு நிற்கிறோம். யாராவது மகான் வந்தால் அவர்களையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரே ஆசையை சுமந்தபடி வாழ்ந்து வந்தார் அவர். சைதன்ய மஹா பிரபு அந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்ய போகிறார் வாசு தேவ கோஷ். ஊராரும் உற்றார் உறவினர்களும் தன்னை ஒரு நோயாளி என ஒதுக்கி விட்டார்கள் . ஆனால், காருண்யமே உருவான மஹா குருவான சைதன்யர் நிச்சயம் தன்னை ஒதுக்கவே மாட்டார். பரம காருண்யத்தோடு தன்னை பார்ப்பார். அவரது பார்வை ஒன்றே போதும் என்று மிக்க நம்பிக்கையில் சைதன்யரை காண ஆசை ஆசையாக வந்த வாசுதேவ கோஷிற்கு சைதன்யர் அப்போதுதான் கிளம்பினார் என்ற செய்தி இடியாக இறங்கியது. க்ருஷ்ணா….மஹா பாபியாக இருக்கிறேன் போலும் நான். அதனால்தான் ஒரு குருவின் தரிசனம் கூட எனக்கு கிடைக்கவில்லை என்று அங்கேயே நின்று தேம்பி தேம்பி அழுதுகொண்டே இருந்தார் வாசுதேவ கோஷ்.

அருகில் இருந்தவர்களிடமெல்லாம், “அந்த மஹா குரு எப்போது கிளம்பினார்? திரும்ப எப்போது இங்கே வருவார்?” என கண்ணீரோடு வாசுதேவ கோஷ் கேட்க.. அவர்களோ, “இப்போதான் கிளம்பினார், சரியாக நீ இங்கே வருவதற்கு சில நிமிடங்கள் முன்தான் கிளம்பினார். திரும்ப அவர் எப்போது இங்கே வருவார் என்றெல்லாம் தெரியாது. நல்ல வாய்ப்பை இழந்து விட்டாயே” என உச் கொட்டினார்கள். “குருவே உங்களைக் காண மாட்டேனா… நான் செய்த பாவங்களுக்கான தண்டனைகளைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேனே…. உங்கள் முக தரிசனமாவது எனக்கு கிடைக்க அருள் புரியக் கூடாதா?” என்று ஏங்கி தவித்து புலம்பிக்கொண்டிருந்தார் வாசு தேவ கோஷ். ஸ்ரீ கூர்ம ஊர் எல்லையில் நின்றிருந்த ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் மனதில், இந்த பக்தனின் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. சிஷ்யனின் உண்மையான புலம்பல் அந்த உயரிய குருவின் மனதில் எட்டியே விட்டது. ஒரு ஜீவன் அங்கே நம் தரிசனத்திற்காகக் காத்து கொண்டிருக்கிறது, ஏங்கி கொண்டிருக்கிறது என்று உணர்ந்தார் சைதன்ய மஹா பிரபு. அந்த ஜீவனை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆவலில் அங்கிருந்து அப்படியே ஓடி வாசு தேவ கோஷ் இருக்கும் இடத்திற்கு திரும்ப வந்த சைதன்யர், வாசு தேவ கோஷை பார்த்து,

“வா மகனே வா” என அன்போடு அழைத்தார். வாசு தேவ கோஷை அன்போடு அரவணைத்து அவருக்கு ஆறுதல் சொல்ல சைதன்யர் யத்தணித்தபோது, வாசு தேவ கோஷ், “ குருவே நீங்கள் என்னைப் பார்க்க வந்ததே மஹா பாக்கியம். என்னைத் தொடாதீங்க. உங்கள் ஸ்பரிசம் பட தகுதி இல்லாதவன் நான். என் உடம்பு முழுக்க சீழ் வழிகிறது..மிகக் கொடுமையான தொழு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் தரிசனமே எனக்கு க்ருஷ்ண தரிசனம். இது போதும் எனக்கு. தயவு செய்து கொடிய சீழ் வழியும் இந்த பாவியைத் தொட்டு விடாதீர்கள்” என்று கண்ணீர் மல்க கதறினார். அதற்கு சைதன்ய மஹா பிரபுவோ, “ உன் உடம்பிலிருந்து வழிவது சீழ் அல்லப்பா அது க்ருஷ்ண பக்தியின் ரசம். க்ருஷ்ண ப்ரேமையினால் வந்த ஒரு விஷயம்” என்றார்.

“ உன் சரீரத்தில் வழியும் அந்த க்ருஷ்ண ப்ரேமை என் மேல் ஒட்டனும்” என்று வாசு தேவ கோஷை நெருங்கினார் சைதன்யர். பக்தனைப் பரிவோடு ஆலிங்கனம் பண்ணிக்கொண்டே விட்டார்.

“க்ருஷ்ணா..என் உயிர் இப்படியே பிரிந்து விட்டால் போதுமே. மஹா குரு இந்த சீழ் உடம்பை தொடும்படி ஆகி விட்டதே” என கதறினார் வாசு தேவ் கோஷ்.

ஸ்ரீ சைதன்ய மஹா பிரபுவின் தரிசனமும் அவர் காட்டிய கரிசனத்திலும், வாசு தேவ கோஷின் சரீரம் சட்டென மாறியேவிட்டது.

”அப்பா உன்னோட குரு பக்தியும் க்ருஷ்ண பக்தியும்தான் என்னை ஊர் எல்லையைத் தாண்ட விடாமல் செய்தது. உன் உயரிய பக்திக்கு மெச்சியே க்ருஷ்ணன் கொடுத்த பரிசு இது” என்று சிரித்தபடியே சொன்னார் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா பிரபு. குருவின் க்ருபா கடாக்ஷம் என்பது அதுதானே. அதைத்தான் நிருபணம் செய்தே விட்டார் சைதன்யர்.

நம் கஷ்டங்களை மானசீகமாக குருவின் திருவடியில் சமர்பிப்போம். எங்கிருந்தாலும் குரு அருளும் திரு அருளும் சேர்த்தே கிடைக்கும் படி நிச்சயம் குரு அருள் புரிவார்.

(குரு அருள் திரு அருள் வளரும்…)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com