குரு அருள் திரு அருள்

குரு அருள் நிச்சயம் தேடி வரும்
குரு அருள் திரு அருள்
Published on

பகுதி - 16

 -நளினி சம்பத்குமார்

ஓவியம்: வேதா

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று சொல்வார்கள். திக்கே இல்லாதவர்களுக்கு, திக்கே தெரியாதவர்களுக்குக் குருவின் சரண பாத கமலங்களே துணை. ஆம்  குரு அருள்தான் தெய்வம் இருக்கும் திக்கை நமக்கு காட்டி தரும். கலியுகத்தில் பிரத்யட்சமாக, திக்கே தெரியாமல் தவிப்பவர்களுக்கெல்லாம், தவித்தவர் களுக்கெல்லாம் “ கவலைப்படாதே... இதோ நான் இருக்கிறேன். நிச்சயம் எல்லாம் சரியாகிவிடும் என்று தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி அவர்களைத் திரும்பவும் மீட்டி கொண்டு வந்த மெய் சிலிர்க்க வைக்கும் குரு அருளின் கதைகள், நிகழ்வுகள் பல உண்டு.

காஞ்சி மஹா பெரியவர்… இக்கலியுகத்தில்  நம் கண் முன்னே நடமாடிய தெய்வம்.  இன்றும் நம் மனக் கண்களில் நடமாடிக்கொண்டிருக்கும் தெய்வம்.  இன்றும் உடல் உபாதையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  இனி நாம் பிழைப்பது சந்தேகமே என்று நினைத்தவர்கள் பலரது வாழ்க்கையில் ஒரு கனவு போல மருத்துவ மனைக்கே வந்து அவர்களுக்கு அருளாசி வழங்கி அவர்களை மீண்டும் மீட்டு கொண்டு வந்த  நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பலவற்றை நாம் படித்திருப்போம், கேட்டிருப்போம், மெய் சிலிர்த்திருப்போம். 

சமீபத்தில் ஒரு குடும்பத்தில்  நடந்த நிகழ்வு இது. ஏதோ ஒரு காரணத்தால், நன்றாகப் படித்துக்கொண்டிருந்த ஒரு பையனின் கல்வியில் திடீரென தடை ஏற்பட்டது. இனி நான் புத்தகத்தைத் தொட மாட்டேன். எனக்கு படிப்பே வேண்டாம் என விட்டு விட்டான் அந்தப் பையன். தன்னோடு படித்தவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மேற்படிப்பு, வெளிநாடு, வேலை, கல்யாணம் என்று இருக்க, தான் மட்டும் இப்படி இருக்கிறோமோ என்ற எண்ணம் அவனை வாட்டி வதைத்தபோதும் படிப்பில் நாட்டத்தைச் சுத்தமாக  இழந்திருந்தான் அவன். காஞ்சி பெரியவரின் படம் தற்செயலாக அந்தக் குடும்பத்தைத் தேடி வர, அந்த பெரியவருக்கு “காஞ்சிமா” எனப் பெயரிட்டு அவரை வழிப்பட்டு வந்தனர் அந்தக் குடும்பத்தினர். சரியாக ஒரே வாரத்தில், படிப்பே வேண்டாம் என்று சொன்னவன் மனம் மாறி, நான் மேற்படிப்பைப் படிக்கலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லி திக்குமுக்காட வைத்தான்.  “இனி இவன் கல்வி அவ்வளவுதான். இனி இவன் திரும்பப் படிப்பான், என்பதே கடினம்,  சந்தேகம்” என்று சொன்னவர்களின் வாக்குகளைப் பொய்யாக்கி அந்தப் பையனின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார் காஞ்சி குரு.

மத்வாச்சாரியார் கண்டுபிடித்த உடுப்பி க்ருஷ்ணரின் கதையும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் கதைதான். குரு அருள் தேடி தந்த திரு அருள் பற்றிய கதை அது. ஒரு நாள் ஒரு கடற்கரை ஒரம் மத்வாச்சாரியார் நடந்துக் கொண்டிருந்தார். அது சற்று கடுமையான சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்த காலம். கடலின் நடுவில் புயல் காற்றின் வேகம் தாங்காமல் ஒரு கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்தது. கப்பலில் இருப்பவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பலில் இருந்தவர்களுக்குத் தங்களின் உயிரின் மேல் பயம் அதிகரிக்க ஆரம்பித்தது. கடற்கரை ஓரம் நடந்துக்கொண்டிருப்பவர் ஒரு குரு என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் மத்வாச்சாரியாரின் தெய்வீகம் அவர்களை ஈர்க்க, அவரைப் பார்த்து தூரத்திலிருந்து கைகூப்பினார்கள், கப்பல் பயணிகள். யாரோ ஒரு சாது, மஹான் போல இருக்கிறார் அவர். அவரை வழிபடுவோம். அவர் காப்பாற்றினால்தான் உண்டு. சுற்றுமுற்றும் உதவிக்கு வேறு யாருமில்லை என எண்ணி, கப்பலில் இருந்தவர்கள் மத்வாச்சாரியாரை நோக்கி இரு கரம் கூப்பி வணங்கி நின்றனர்.

“எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கப்பலில் இருந்தவர்கள் கதறியதை மத்வாச்சாரியார் எதேச்சையாகப் பார்த்தார். அடடா கப்பலில் தத்தளித்துக்கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து தன் தோளில் இருந்த துண்டை அப்படியும் இப்படியுமாக மாறி மாறி அசைத்தார், மத்வாச்சாரியார். என்ன ஆச்சரியம். மகா ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருந்த புயல் குருவின் அசைவைப் பார்த்து அசையாமல் நின்றுபோனது. கப்பலில் இருந்தவர்களுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஆஹா, அந்த மகான் சொன்னதைக் கேட்டு தான் இயற்கை தன் சீற்றத்தை நிறுத்தி இருக்கிறது. அந்த மகான் யார் என்றோ அவர் பெயர் என்னவென்றோ எதுவும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நமக்காக இயற்கையிடம் பரிந்துரைத்து, நம்மை எல்லாம் பெரும் துயரத்திலிருந்து காப்பாற்றிய அந்த மகானுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கப்பலை கடல் கரை ஓரம் கொண்டு வந்து நிறுத்தி மத்வாச்சாரியாரை இரு கரம் கூப்பி வணங்கி, கீழே விழுந்து நமஸ்காரம் செய்தனர் அந்த கப்பலில் வந்தவர்கள். “ஸ்வாமி, இந்தக் கப்பலில் ஏகப்பட்ட விலை உயர்ந்த பொன், மணிகள், இரத்தினங்கள் என எல்லாம் இருக்கின்றன. எங்களுக்கு உயிர் பிச்சை அளித்த உங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். உங்களுக்கு இந்த விலை உயர்ந்த பொருட்களிலிருந்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என இரு கரம் கூப்பி கண்களில் கண்ணீர் வழிய நின்றனர் அந்த பயணிகள்.

 மத்வாச்சாரியார் அவர்களைக் கனிவோடு பார்த்தார். இதெல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டு அவர்களது அன்புக்காக அவர்கள் காட்டிய அந்த அன்புக்காக, அவர்களது கப்பலுக்குள் நுழைந்து அந்தக் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று பார்த்தார். மேல் தளத்தில் பாறை பாறையாக கோபி சந்தன கட்டிகள் இருந்தன. கப்பலின் பாரத்தை சமன்படுத்துவதற்காக அவர்கள் அந்தக்   கோபி சந்தன கட்டிகளை அடுக்கி வைத்திருந்தனர். கோபி சந்தனக் கட்டிகளை பார்த்ததுமே மத்வாச்சாரியார் ஆனந்த கண்ணீர் சிந்தினார். “அந்த கோபி சந்தனக் கட்டியை எனக்குத் தர முடியுமா? எனக்கு பொன்னோ, மாணிக்கமோ எதுவும் வேண்டாம். இதைக் கொடுங்கள் போதும்” என்றார்.

இவ்வளவு விலை உயர்ந்த பொருட்கள் இங்கே இருக்கும்போது இதை எல்லாம் விட்டுவிட்டு இதைக் கேட்கிறீர்களே எனக் கேட்டபடியே, அவர்கள் அந்தக் கோபி சந்தனப் பாறையை மத்வாச்சாரியாரிடம் கொடுத்தனர். அதை கையில் வாங்கியதும் மத்வாச்சார்யாருக்கு அவ்வளவு சந்தோஷம் பொங்கியது. “க்ருஷ்ணா, க்ருஷ்ணா, க்ருஷ்ணா” என்று நாம ஜபம் செய்து கொண்டே இருந்தார் மத்வாச்சார்யார். கப்பல் பயணிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

கோபி சந்தனக் கட்டியை எடுத்துக்கொண்டு மத்வசரோவர் பக்கம் ஓடினார் மத்வாச்சார்யார். கப்பல் பயணிகளும் இவர் எங்கே போகிறார், எதற்காக போகிறார் என்று ஆவல் மேலிட அவர் பின்னாலேயே சென்றனர். மத்வசரோவரின் கரை ஓரம் அந்த கோபி சந்தனத்தை வைத்து விட்டு க்ருஷ்ண பஜனைகளை பாடியபடியே இருந்தார் மத்வாச்சார்யார்.  திடீரென  அந்த கோபி சந்தனப் பாறை இரண்டாக பிளந்து அங்கிருந்து வெளிப்பட்டான் சாட்சாத் உடுப்பி க்ருஷ்ணன். அடடா, இந்தக் கோபி சந்தனப் பாறைக்குள் க்ருஷ்ணர் இருந்தாரா என வந்தவர்கள் அதிசயித்து நின்றனர். அதிசயங்கள் புரிய குருவால் மட்டுமே முடியும் அல்லவா?

தங்களுடன் க்ருஷணர் பயணித்ததையோ, அந்தக் க்ருஷ்ணரைத் தேடி எடுத்தது ஒரு குரு என்றோ எதுவும் தெரியாமல் நின்றவர்களுக்குத் தன் அருளைத் தந்து திரு அருளையும் காட்டிக் கொடுத்தார் மத்வாச்சாரியார் எனும் குரு.

நமக்குள் இருக்கும் இறைவனை நிச்சயம் காட்டி தந்து, இறைவனின் திருவருளை நாம் பெற நிச்சயம் துணை இருப்பார் குரு.  நிறைவாய் குருவின் திருவடியைப் பணிவோம். இம்மையிலும் மறுமையிலும் நிறைவான திரு அருளைப் பெறுவோம்.

குரு அருளும் திரு அருளும் என்றும் நம்மோடு நிறைந்திருக்கட்டும்.

 சுபம். 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com