நகரங்கள் பெண்களுக்கு நரகமாகாமலிருக்க...

நகரங்கள் பெண்களுக்கு நரகமாகாமலிருக்க...
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on

'நகரங்களை வடிவமைக்கும்போதும் புதுப்பிக்கும் போதும் அதில் பெண்கள் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்' என்கிறது ஐ.நா. சபையினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 'பெண்களுக்கு பலனளிக்கும் வகையில் நகரங்களை வடிவமைத்தல்' (Designing Cities that work for Women”,) என்ற​ அறிக்கை. 

       உலக மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி பெண்கள்தான்.  என்றாலும் சமீபத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் பல நாடுகளில் உள்ள பெண்கள் பொதுவெளியில் பாதுகாப்பு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.  பிரிட்டனில் 18லிருந்து 24 வயது வரை உள்ள பெண்களுக்கிடையே நடைபெற்ற கருத்துக் கணிப்பில், பொது இடங்களில் தாங்கள் பாலியல் ரீதியில் சீண்டப்படுவதாக 97 சதவிகிதப் பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.  இருட்டிய பிறகு பொதுப் போக்குவரத்தில் செல்வது தங்களைப் பாதுகாப்பாக உணர வைக்கவில்லை என்று கூறியிருக் கிறார்கள் அயர்லாந்து நாட்டுப் பெண்களில் மிகப் பெரும்பான்மையினர்.  பொது இடங்களில் தங்களுக்கு ஏற்ற கழிவறைகள் இல்லை என்பதை வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்கள் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் பெண்கள்.

நகரங்களில் பலவிதங்களில் வெளிப்படும் பெண்களை அலட்சியப்படுத்தும் மனோபாவத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  கடந்த கால மற்றும் தற்போதைய பிரபலங்களுக்கான சிலைகளை கவனித்தால் கூட அவற்றில் வெறும் ​மூன்று சதவிகிதம்தான் பெண்களின் சிலைகளாக உள்ளன என்பதையும் நினைவுபடுத்துகிறது.

       பல்வேறு வயது மற்றும் அடையாளங்களைக் கொண்ட பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் நகரங்கள் வடிவமைக்கப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் மட்டுமல்ல; குடும்பங்களின் வாழ்வையும் பெரிதும் பாதிக்கும் என்கிறது அந்த அறிக்கை.

       நகரங்களில் அளிக்கப்படும் கல்வி வசதிகளில் பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும்.  நகரங்களில் நிலவும் பல்வேறு சமூக அமைப்புகளிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்தாக வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.

       இதுகுறித்து குறிப்பான எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறும்படி ஒரு பிரபல சமூக சேவகியிடம் கேட்டபோது, ‘ஒரு நகரத்தில் இருட்டான, நீண்ட குகைப்பாதைகள் இருந்தால் அது பெண்களுக்கும் முதியவர்களுக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும்.  நகரத்தின் ஒரு பகுதியில் ஒழுக்கமற்ற ஆண்கள் அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடுகள் இருந்தால் அவையும் பெண்களுக்கு நடுக்கத்தைத் தரும்.’

       பெண்களை நட்போடு அணுகும் நகரம் என்பது எதைக் குறிக்கிறது?  ஐ.நா.சபை தனது வலைத்தளத்தில் கீழே உள்ள தன்மைகள் கொண்ட நகரங்களைத்தான் அப்படிக் கருதுகிறது.

· உடல்நலம், ஆரோக்கியம்,  சமூக சேவைகள் ஆகியவை ஒரு நகரத்தில் பெண்களையும் எட்ட வேண்டும்.

· பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் போதிய அளவில் இருக்க வேண்டும்.

· போக்குவரத்து, வீடு, பாதுகாப்பு போன்ற தரமான நகர சேவைகள் அவர்களுக்கு எட்டும்படி இருக்க வேண்டும்.

· வன்முறையை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்கள் உரிமைகளையும் அவற்றைச் செயல்படுத்தத் தேவையான வசதிகளையும் அந்த நகர அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.

· உள்ளூர் அரசுகள் நகரங்களுக்கான திட்டங்களை அமல்படுத்தும்போது பெண்களின் கோணங்களையும் வசதிகளையும் மனதில் கொள்ள வேண்டும்.

· செயல்பாடுகளிலும் ஆண்களுக்குச் சமமான முறையில் பெண்களும் பங்கேற்குமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

· தாய்ப்பால் கொடுப்பதற்கான அந்தரங்க வசதிகள் பொதுவிடங்களில் செய்துத் தரப்பட வேண்டும்.

· குழந்தைகளின் டயப்பர்களை பொது இடங்களில் மாற்றுவதற்கு போதிய சூழல் வேண்டும்.

· தங்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது உரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிப்பதற்கு ஏதுவான சூழல் நிலவ வேண்டும்.

· குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாதுகாப்பாக, அமைதியாக நடக்கும் விதத்தில் சாலைகள் இருக்க வேண்டும்

ஆக, குறைபாடுகளை சரிசெய்வதற்கான முதல்கட்டமாக நகரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.  அதற்கான திட்டங்களை வகுப்பவர்கள் பாதிக்குப் பாதி பெண்களாக இருக்க வேண்டும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com