0,00 INR

No products in the cart.

குரு அருளால் தேடி வந்த அரண்மனை அழைப்பு!

குரு அருள் திரு அருள்- 6

-நளினி சம்பத் குமார்

ஓவியம்: வேதா

குருவின் திருவடியை அடைய என்ன தகுதி வேண்டும்? என்னிடம் எந்த தகுதியுமே இல்லையே… அதிகமான பாவம் செய்து அந்தப் பாவ மூட்டையைத்தானே சுமந்துகொண்டிருக்கிறேன் என்று வருந்துபவர்கள், பாவத்தைத் தீர்த்துக்கொள்ள தீர்த்த யாத்திரைகள் போகிறோமோ இல்லையோ, கங்கையில் சென்று நீராடுகிறோமோ இல்லையோ ஆனால், கட்டாயம் நாம் சென்று நம்மை நனைத்துகொள்ள வேண்டிய ஒரு இடம் என்பது குருவின் திருவடிதான். மனதில் சதா நினைத்துக்கொள்ள வேண்டியதும் குருவைப் பற்றிதான். குருவின் தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் பாவங்கள் விலகிடும் என்பது நிதர்சனமான உண்மை. குரு க்ருபை என்பது நம் மீது பட ஆரம்பிக்கும்போது அது நம்மை, இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்து நன்மை தரும் விஷயங்களை மட்டுமே பார்க்க வைக்கும், பேச வைக்கும், சிந்திக்க வைக்கும்.

கலியுகத்தில் நாம் கரையேற, நம் மீது பாவ கறைகள் ஏறாமல் இருக்க பகவான் நாமா ஒன்றே கதி என்று காண்பித்த குரு(மருதாநல்லூர்) ஸத்குரு ஸ்வாமிகள். பகவத் நாமாவை பாடிக்கொண்டே இருக்கும் அந்த ஸ்வாமிகளிடம் பாடமும், பாடல்களும் பயின்ற சிஷ்யர்கள் பலர். இசையில் மட்டுமே நாட்டம்கொண்டு ஏட்டைக் கண்டாலேயே வாட்டம் கொள்கிற ஒரு சிறுவன் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஸத்குரு ஸ்வாமிகளிடம் வந்து சேர்ந்தான். பெற்றோர்களுக்கோ அவன் மீது அனேக வருத்தம். படிப்புப் பக்கமே போகாமல் எல்லா நேரமும் பாட்டு மட்டுமே பாடிக்கொண்டிருக்கிறானே இவன் என்று. ஸத்குரு ஸ்வாமிகள் பாடும்போதெல்லாம் அவர் கூடவே பஜனைப் பாடல்களைப் பாடுவது, அவருக்குத் தம்பூரா மீட்டிக் கொடுப்பது, அவரது வஸ்திரங்களைத் துவைத்துக் கொடுப்பது என தன்னால் இயன்ற அளவு (அவை எல்லாம் குருவுக்குச் செய்யும் கைங்கர்யம் என்பதை உணராமலேயே) உண்மையாக செய்துகொண்டு வந்தான் அந்தச் சிறுவன். தன்னுடனேயே இருக்கும் அந்தச் சிறுவனுக்கு அந்தக் குரு வைத்த பெயரோ ‘ராமதாஸ்’ என்பது. ராமதாஸனின் வாய் எப்போதும் பஜனைப் பாடல்களைப் பாட, அவன் வாழ்க்கையோ குரு சேவையை மட்டுமே நாட… வாழ்க்கையில் வேறு எதன்மீதும் பெரிய நாட்டமோ, தேடலோ இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது ராமதாஸின் நாட்கள்.

ரு நாள் ஸத்குரு ஸ்வாமிகள் இருக்கும் இடத்திற்கு ஒரு சந்யாசி வந்தார். மரியாதை நிமித்தமாக அந்த மகானை நமஸ்காரம் செய்தார் ஸத்குரு ஸ்வாமிகள்.  சந்யாசி, ஸத்குரு ஸ்வாமிகளைப் பார்த்து,  “நன்றாக இரு” என்று கூறி, ஆசிர்வாதம் செய்ததைப் பார்த்து ராமதாஸுக்கு ஏனோ கோபம் வந்தது. ஏன் கோபம்? எதற்காக கோபம்? என்று விளக்கம் எல்லாம் யாரிடமும் கொடுக்காமல், நேரிடையாக அந்த  சந்யாசி தங்கும் இடம் அருகே சென்றுவிட்டான் ராமதாஸ். சந்யாசி குளிக்கும் குளத்தருகே உள்ள ஒரு மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு, சந்யாசி நீராடிவிட்டு வந்ததுமே அவரைப் பார்த்து,
“எவ்வளவு துணிச்சல் இருந்தால் நேற்று என் குரு நாதரைப் பார்த்து நன்றாக இரு என்று ஆசிர்வதித்தீர்ப்பீர்கள்? இந்த ஊரை விட்டே போய் விடுங்கள்” என்று சப்தம் போட்டான். ராமதாஸ் போட்ட சத்தத்தில் அந்த சத் சந்யாசி ஊரை விட்டே போய்விட, ராமதாஸும் தொலைதூரம் எங்கோ போய்விட்டான். தன் சிஷ்யன் ஒருவன் ஒரு சந்யாசியைப் பார்த்து மரியாதை இல்லாத வார்த்தையை பேசினான் என்ற செய்தி ஸத்குரு ஸ்வாமிகளை எட்டுவதற்கு முன் நாம் எட்டா தூரம் போய் விடவேண்டும் என்று ஓட்டம் பிடித்து ஓடிவிட்டான் ராமதாஸ். சில காலம் எங்கோ இருந்துவிட்டு, மெல்ல ஸத்குரு ஸ்வாமிகளிடம் மீண்டும் வந்துவிட்டான். ஸ்வாமிகளைப் பார்க்காமல், அவருக்குக் கைங்கர்யங்கள் செய்யாமல் அவனால் எங்குமே இருக்க முடியவில்லை. ராமதாஸின் பெற்றோர்களோ அவன் ஸ்வாமிகளிடம் இருப்பதைக் கேள்விப்பட்டு அவனைத் தேடி வருகிறார்கள். ஸ்வாமிகள் ராமதாஸைக் கூப்பிட்டு, “இதோ பாரப்பா… இத்தனை காலம் நீ இங்கே இருந்துவிட்டாய். உன்னைத் தேடி உன் பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். இனி, நீ அவர்களோடு சென்று விடு” என்றார் அன்பாக. அதற்கு ராமதாஸோ பெற்றோர்களோடு செல்ல மறுப்பு சொல்ல… உடனே ஸ்வாமிகள், “உனக்கு என்ன வேண்டும் சொல்லு. சமாதி சித்திக்க அனுக்ரஹம் செய்யவேண்டுமா? ராம தரிசனம் செய்து வைக்கவா? உயர்ந்த பக்தியைத் தரவா?” என ஒவ்வொன்றாக  கேட்க கேட்க, ராமதாஸோ “எனக்கு அதெல்லாம் எதுவுமே வேண்டாம்” என்று தீர்மானமாகச் சொன்னான்.

”ராமதாஸா, உனக்கு என்ன வேண்டுமோ அதை நீயே சொல்லி விடு” என்ற ஸ்வாமிகளின் வேண்டுகோளுக்கு,
“அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. தெரியாது” என்று சொன்ன ராமதாஸின் வார்த்தையைக் கேட்டு விக்கித்து நின்ற ஸ்வாமிகளிடம்,
“உங்களுக்கென்று ஒரு குரு கிடையாது. ராமர்தான் உங்களுக்குக் குரு. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ராம நாமம்தான், ராம நாம பஜனைதான். ஒரு குருவுக்குச் செய்யும் சேவையில் இருக்கக்கூடிய மனத்திருப்தியும் சந்தோஷத்தையும் நீங்கள் அறிந்திருக்கவே மாட்டீர்கள். உங்களுக்கு இடைவிடாது கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருக்கும்போது கிடைக்கக்கூடிய அந்தப் பேரானந்தத்தை ராம தரிசனம் கூட தந்து விட முடியாது” என்றான்.

“சரிப்பா… நீ சொல்றதக் கேட்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உன் குரு பக்தி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உண்மையான குரு பக்தி என்பது குருவுக்குச் சேவை செய்வதில் மட்டுமல்ல… அவர் சொல்வதைக் கேட்பதிலும்தானே. இதோ இந்த ராம விக்ரஹத்தை உன்னோடு அனுப்பி வைக்கிறேன். நீ உன் பெற்றோரோடு ஊருக்குச் செல். திருமணம் செய்து கொள். ஊஞ்சவிருத்தி செய்து வா. ஒரு நாள் உன்னைத் தேடி நிச்சயம் நானே உன் ஊருக்கு வருவேன்” என்று சொல்லி அவனைச் சமாதானம் செய்து வைத்தார் ஸத்குரு ஸ்வாமிகள்.

குருவின் வாக்கையும் வாழ்க்கையும் தன் வாழ்க்கை முறையாக கொண்ட ராமதாஸ், தன் குரு ஊஞ்சவிருத்திக்குச் செல்லும்போது எப்படி செல்வாரோ அதைப் போலவே சாமரம், சத்ரம், தண்டம், பாதுகை என எல்லாவற்றையும் எடுத்துகொண்டு செல்வாரோ, அதை போலவே தானும் ராம நாம, சாமரம் சகிதம் ஊஞ்சவிருத்திக்குச் செல்ல ஆரம்பித்தார். தினம் இப்படியே ஊஞ்சவிருத்தி சென்று வந்துகொண்டிருந்த ராமதாஸை பார்த்து ஒரு ஊர் பெரியவர், “நாளை இந்த ஊர் ராஜா இந்தப் பக்கமாக வருகிறார். அவர் கண் எதிரே தயவு செய்து பட்டு விடாதப்பா. ஒரு ராஜாதான் உன்னை மாதிரி சாமரம், சத்ரம் எல்லாம் எடுத்துண்டு வர்றது வழக்கம். அவருக்கு எதிரில் நீ இப்படி வருவது என்பது அவரை அவமானப்படுத்துவது மாதிரி ஆகிவிடும். ராஜாவின் கடுங் கோபத்திற்கும், தண்டனைக்கும் ஆளாக நேர்ந்து விடும். இந்தக் கோலத்தை மாற்றி கொண்டு செங்கோல் கொண்டு சாம்ராஜ்யம் ஆள்பவரின் முன் உன் சாமரத்தை கொண்டு வராமல் அதை வீட்டிலேயே வைத்துவிட்டு நாளை ஊஞ்சவிருத்தி எடுத்துக்கொள்” என்று சொல்லி சென்றார்.

தன் குருவோ தன்னை ஊஞ்சவிருத்தி எடுத்துச்செல்ல பணித்திருக்கிறார் ஆனால், ஊஞ்சவிருத்தி எடுப்பதற்கே இங்கே ஏகப்பட்ட கெடு விதிக்கிறார்களே என கவலைப்பட்டுகொண்டு அடுத்த நாள் ஊஞ்சவிருத்திக்குப் போகாமலேயே இருந்துவிட்டார் ராமதாஸ். மாலை பொழுது ஆனது. வாசலில் ராஜாவின் வாயிற்காப்பாளர்கள் ராமதாஸைத் தேடி அவரை அரண்மனைக்கு அழைத்துப்போக வந்துவிட்டார்கள். “எதற்காக வந்து இருக்கிறீர்கள்? நான்தான் சாமரத்தோடு வெளியில் எங்குமே போகவில்லையே” என ராமதாஸ் கூற, அதற்கு காவலாளிகளோ, “எங்கள் மகாராணி இன்று உங்களால்தான் உண்ணாமலேயே இருக்கின்றார்கள். தினம் நீங்கள் ஊஞ்சவிருத்தி எடுத்துகொண்டு வரும் போது உங்களை நமஸ்கரித்துவிட்டு, நீங்கள் தரும் அட்சதையை
வாங்கிகொண்டு விட்டுதான் மகாராணி சாப்பிடுவார். இன்று நீங்கள் வராததால், உங்களிடமிருந்து அட்சதையைப் பெறாததால், மகாராணி சாப்பிடவே இல்லை” என்றார்கள் அரண்மனைக் காவலாளிகள்.

எந்தக் கோலத்தோடும், கோலோடும் போனால் ராஜா தண்டனை தருவார் என்ற செய்தி கேட்டு ராமதாஸ் ஊஞ்சவிருத்திக்குப் போகாமல் இருந்தாரோ, அவரிடம் ராஜா கொடுத்தனுப்பியதாகச் சொல்லி சாமரம், செங்கோல், பாதுகைகளை அரண்மனைப் பணியாளர்கள் பவ்யமாகக் கொடுத்து, இதை எல்லாம் ஏந்திக்கொண்டு நீங்கள் ஊஞ்சவிருத்தி எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வரவேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக்கொண்டார்கள். அப்படியே கிளம்பினார் ராமதாஸும். எல்லாம் குரு க்ருபையால் குருவின் கடாக்‌ஷத்தால் மட்டுமே நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தார். யாரைக் கண்டு அச்சப்பட்டாரோ, அவரே தன்னை அழைப்பது என்பது தம் குருவின் ஆசிர்வாதத்தால்தானே ஒழிய வேறு எதனால், வேறு யாரால்?

அதிசயங்களை நிகழ்த்திட குருவால் மட்டுமே முடியும்.

1 COMMENT

  1. குருவின் பெருமையை வெகு அற்புதமாக அளித்துள்ளீர்கள் நளினி மேடம்.
    கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி 620017

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...