0,00 INR

No products in the cart.

அன்பெனும் பேராயுதம்!

ஜெயஸ்ரீராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி – பரிசுக் கதை – 8

கதை : நித்யா
ஓவியம் : ஸ்யாம்

“ராதாம்மா… உங்களை எங்கேல்லாம் தேடறது போங்க…” வாசுவின் சலிப்பான குரல் காதில் விழ, நிமிர்ந்தாள் ராதா. அவனைப் பார்த்து புன்னகைத்தாள். பார்வை ‘என்ன விசயம்…?’ என்று கேட்காமல் கேட்டது.

“சீக்கிரம் ஆபிஸ் ரூம் வாங்க. உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்காரு!” என்றான் வாசு அவசரக் குரலில்.

ராதா நம்ப முடியாது திகைத்தாள். “அடப் போ வாசு… எப்பவும் விளையாட்டுதான் உனக்கு.”

நித்யா

“அட, நிஜமாங்க. சாமி சத்தியமா. மேனேஜர் சாருதான் கையோட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாரு. அரை மணி நேரமா விடுதி முழுக்கத் தேடி அலையறேன். கடைசியில பார்த்தா… இங்கே தோட்டத்துல செடியை நட்டுக்கிட்டு இருக்கீங்க. வாங்க முதல்ல…”

அவன் சொன்னது எதுவுமே ராதா காதில் விழவில்லை. “என் மகன் எதுக்கு இங்கே வந்திருக்கான்? கூட அந்த மகராசியும் இருக்காளா?”

“எனக்கெதுவும் தெரியாது ராதாம்மா. கேள்வி கேட்காம தயவுசெய்து கூட வந்தா உதவியா இருக்கும். நிறைய வேலை இருக்கு இன்னைக்கு…” வாசு புலம்பினான்.

ராதா குழப்பத்துடன் கையிலிருந்த மண்கொத்தியை ஓரமாக வைத்துவிட்டு வாளியிலிருந்த தண்ணீரில் முகம், கை, கால் கழுவிக்கொண்டு முந்தானையால் முகம் துடைத்தபடி, “வா போகலாம்…” என்றபடி முன்னேறி நடக்கத் துவங்கினாள்.
மனசு முழுக்க அந்தக் கேள்வி தேங்கி நின்றது.

‘நீ வேண்டாம்… தேவையில்லை’ என்று முதியோர் விடுதிக்குக் கொண்டு வந்து வீசித் தள்ளிவிட்டுப் போன தனது தங்க மகன், உத்தம புத்திரன் இந்த இரண்டு வாரங்களிலேயே என்னைத் தேடி வந்திருக்கிறான் என்றால், என்னவாக இருக்கும்? ஏதாவது பிரச்னையா? அவளுக்கு ஏதாவது உடம்புக்கு முடியாமல்…?

ஐந்து நிமிட நடையில் முன்புறம் இருந்த அலுவலக அறை வர, உள்ளே நுழைந்தாள். மேனேஜரின் எதிரில் உட்கார்ந்திருந்த மகன் துரை கண்ணில் பட, கண்டுகொள்ளாதவளாக ஓரமாக நின்றாள். கோபம் அனலாகப் பொங்கியது மனதிற்குள்.

உன்னைப் பாராட்டி, சீராட்டி வளர்த்ததற்கு தண்டனையா எனக்கு இந்த முதியோர் விடுதி வாழ்க்கை. யாருமில்லாத அனாதையா நான்?!

“உட்காருங்க ராதாம்மா. ஏன் நிற்கறீங்க” என்றார் மேனேஜர் சவுந்தர்.

“அம்மா நல்லாயிருக்கியாம்மா…?” என்றான் துரை பாசத்துடன்.

அப்போதுதான் அவனை முதல் தடவை பார்ப்பது போலப் பார்த்தாள் ராதா.

”எனக்கென்னப்பா குறை? ரொம்ப சந்தோசமா, நிம்மதியா இருக்கேன்” வெறுப்புடன் பல்லைக் கடித்தபடி சொன்னாள்.

“துரை இதிலே ஒரு கையெழுத்து…” ரிஜிஸ்டரை அவனை நோக்கி நீட்டினார் சவுந்தர்.
போட்டான். “அவ்வளவுதானே சார்… நாங்க கிளம்பலாம்ல்ல?”

“ஓ… தாராளமா.” திருப்தியுடன் தலையாட்டினார். “என்ன ராதாம்மா… எங்களையெல்லாம் மறந்திட மாட்டீங்களே? பழக்கத்துக்காக அப்பப்போ வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்க… சரியா” என சிரித்தார் மேனேஜர்.

புரியாமல் விழித்த அம்மாவைப் பார்த்து, “அம்மா, நீ உன் ரூமுக்குப் போய் உன் பேக்கெல்லாம் ரெடி பண்ணி கொண்டு வா. நாம கிளம்பலாம்…” என்றான் துரை.
“எங்கேப்பா? என்னை வேற விடுதிக்கு மாத்திட்டியா?” குரூரமாகப் புன்னகைத்தாள் ராதா.

அடிபட்ட பார்வை பார்த்தான். “இல்லம்மா… நம்ம வீட்டுக்குப் போறோம்மா.”
“வேண்டாம்ப்பா… நான் அங்கே இருக்கக்கூடாதுன்னு முடிவெடுத்துத்தானே இங்கே கொண்டு வந்து என்னைத் தள்ளிவிட்டே?! நான் இருக்கிறதுதான் உன் சம்சாரத்துக்குப் பிடிக்காதே. வீணா பிரச்னை வரும். உங்க நிம்மதி கெடும். என்னால ஏன் இந்தத் தொல்லையெல்லாம்? வேணாம்ப்பா. என் காலம் முடிஞ்சது. நான்பாட்டுக்கு இங்கேயே கிடக்கறேன். நீங்க சந்தோசமா பல்லாண்டு காலம் நல்லா இருங்க. அது போதும். நான் எதுக்கு இடைஞ்சலா?” பேசப் பேச அழுகையே வந்துவிட்டது அவளுக்கு.
அம்மாவையே அழுத்தமாகப் பார்த்தான். “பேசியாச்சாம்மா? மன பாரம் குறைஞ்சுதா? போகலாமா?”

“நான் வரலை… போடா” என்றாள் ராதா கோபமான குரலில். “உனக்கு வேணும்னா வந்து கூப்பிட்டுக்குவே. தேவையில்லைன்னா தூக்கியெறிஞ்சுடுவே. நான் என்ன விளையாட்டு பொம்மையா உனக்கு? எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குடா. அதுல மானம், ரோசம்கிற உணர்ச்சி எல்லாம் மிச்சம் இருக்கு. இன்னும் எதுவும் நீர்த்துப் போகலை!”

மேனேஜர் உதவிக்கு வந்தார். “அடடா… நீங்க உங்க மகனைத் தப்பா நினைச்சுட்டீங்க ராதாம்மா. உங்களை நிரந்தரமா இங்கே இருக்க வைக்கணும்றது துரையோட திட்டமில்லை. உங்களை இங்கே சேர்க்கும்போதே, ‘கொஞ்ச நாள் மட்டும் அம்மா இங்கே தங்கியிருக்கட்டும். நான் திரும்ப வந்து அழைச்சுக்கறேன்’னு கண்டிஷன் போட்டுத்தான் சேர்த்தாரு. அவசரப்பட்டு அவரைத் தப்பா நினைக்க வேணாம்!”
மகனைப் புரியாமல் பார்த்தாள் ராதா.

“துரை ரொம்ப கடுமையான மனசோடதான் உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தாரு. தினமும் போன் பண்ணி உங்களைப் பத்தி அக்கறையோட விசாரிப்பாரு. இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? இந்த ரெண்டு வாரத்துல நாலு தடவை உங்களுக்குத் தெரியாமலேயே வந்து பார்த்துட்டுப் போயிருக்காரு. இத்தனை பாசம் உள்ளவரு… இப்படியொரு ஏற்பாட்டை செய்திருக்காருன்னா, அதுக்கு ஏதோ ஒரு பலமான காரணம் இருக்கணும். அதனால நம்பிக்கையோட அவர் கூடப் போங்க. மறுக்காதீங்க.”

சிறிது நேரம் எதையோ யோசிப்பது போல தயங்கி நின்றாள் ராதா. நடப்பது ஒன்றும் புரியவில்லை என்றாலும், வேறு முடிவுகள் எடுக்கத் தெரியாதவளாக ஒப்புக்கொள்வது போல அங்கிருந்து நகர்ந்தாள்.

அரை மணி நேரப் பயணத்தில் வீடு வந்தது.

ஆட்டோவில் இருந்து இறங்கினவளை எதிர்வீட்டு பத்மாவின் குரல் கலைத்தது. “என்ன ராதா… இப்படி ஒரேயடியா சொந்தக்காரங்க வீட்டுல போய் தங்கிட்டே. இவ்வளவு நாள் எங்கேயும் இருந்ததில்லையே நீ?”

பதில் பேசத் திணறினாள். மகனைக் காட்டிக்கொடுக்க மனசில்லாமல், குழப்பமாகச் சிரித்தாள்.

வீட்டினுள் நுழைய திக்கென்றது.

வீடு, வீடு மாதிரியே இல்லை. ஆங்காங்கே படர்ந்து கிடந்த தூசியும், ஒட்டடையும்… சமையலறையில் யாரும் புழங்கின சுவடே இல்லை.

“என்னடா இது… வீடு இப்படியிருக்கு? எங்கேடா சினேகா?”

“ஓ அதுவா… இரு வந்திடறேன்” அவசரமாக நகர்ந்து போனவனை புரியாமல் பார்த்தாள்.

இங்கே எதுவோ நடந்திருக்கு.

“துரை அண்ணா! வாங்க… வாங்க…” கதவு திறந்த சுசீலாவுக்கு வியப்பு. “என்ன இது சொல்லாம கொள்ளாம வந்திட்டீங்க. சர்ப்ரைசா அண்ணிக்கு?”

மழுப்பலாக சிரித்தான். “சினேகா எங்கேம்மா?”

“கோவில் போயிருக்காங்கண்ணா. உட்காருங்க வர்ற நேரம்தான்.”

“நாசரைக் காணோம். ஆள் இன்னும் எந்திரிக்கலையா?”

“யாரோ தேடி வந்தாங்கண்ணா. இப்போ வந்திடறேன்னு கிளம்பிப் போனவர்தான். ஆச்சு ஒரு மணி நேரம். போன்ல கூப்பிடவா?”

“வேணாம்மா, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்” என்று உட்கார்ந்தான்.

“அப்புறம் என்ன சொல்றா என் திருமதி?”

சட்டென்று கண் கலங்கினாள் சுசீலா. “பெத்தவங்களை எதிர்த்து காதல் திருமணம் செய்துகிட்டவங்க நாங்க. அத்தனை உறவுகளிருந்தும் யாருமே இல்லாத அனாதைகள் மாதிரி வாழ்ந்துட்டு இருந்தோம்! எங்களுக்கு மன ஆறுதலா இருந்தாங்க! நிறைய ஆலோசனைகள் சொன்னாங்க. புதுவிதமா சமைக்க, குடும்பம் நடத்த… இந்த ரெண்டு வாரமும் போனதே தெரியலை!”

கதவு திறக்கும் சப்தம் கேட்டது. இருவரும் திரும்ப, சினேகா புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள். “வாங்க…” என்றாள்.

நெருங்கி வந்து அவன் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டாள். “அத்தை வந்துட்டாங்களா ஊரிலிருந்து…?”

“ம்…”

மீதி குங்குமத்தை சுசீலாவிடம் கொடுத்தாள். “ரொம்ப இளைச்சிட்டீங்க. கன்னத்துல சதையே இல்லை. ஒட்டிப்போச்சு!”

“நீங்க பேசிட்டிருங்க. காபி எடுத்துட்டு வர்றேன்…” நாசூக்காக நகர்ந்தாள் சுசீலா.

“ப்ச், பாவம்ங்க ரெண்டு பேரும்! சொந்தங்கள் அத்தனை பேரு இருந்தாலும், தற்காலிக அனாதைகள் மாதிரி ஆகிட்டாங்க. முடிஞ்ச அளவுக்கு ஆறுதல் சொல்லி தேத்திட்டு வர்றேன். ஆனாலும், அப்பப்போ மனசு உடைஞ்சு போயிடறாங்க.”

“சரி, நீ ரெடியாகு. நம்ம வீட்டுக்குப் போகலாம்!”

“நிஜமாவா? என்னைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தீங்களா?”

“ஆமா… வந்து எவ்வளவு நாளாச்சு? ஒரு வாரம்ன்னு சொல்லி ரெண்டு வாரம் முடிஞ்சு போச்சே!”

காபியோடு வெளியே வந்தாள் சுசீலா. “அதுக்குள்ளே என்னண்ணா அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் அண்ணி இங்கே இருக்கட்டுமே. அவங்களைப் பிரிய மனசு கஷ்டமா இருக்கு. இப்போதைக்கு அவங்க ஒருத்தர்தான் என் துணை!”

“அதுசரி!” துரை சமாளித்தபடி சிரித்தான். “நாங்க என்ன வெளியூர்லயா இருக்கோம்? லீவ் நாள்ன்னா கண்டிப்பா சந்திக்கத்தானே போறோம்! அப்புறம் என்ன…” என்றான், காபியை அருந்தியவாறே. “பரவாயில்லையே காபி நல்லாயிருக்கே.”

சினேகா மேலே காய்ந்து கொண்டிருந்த புடைவைகளோடு உள்ளே வந்தாள். “அத்தை நல்லாயிருக்காங்களா? வேற என்ன சமாச்சாரம்?”

“ஒண்ணுமில்லை… நீதான் வரப்போறியே. நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோ.”

“அதுவும் சரிதான்” பேக்கினுள் ஆடைகளைத் திணித்தாள். கண்ணாடியில் முகம் பார்த்து திருப்தியாக தலையாட்டிக் கொண்டாள். “அவ்வளவுதாங்க… நான் ரெடி!”
துரை காலி டம்ளரை ஓரமாக வைத்தான். “சரிம்மா… நாங்க கிளம்பறோம்! நாசர் வந்தா சொல்லிடு. எனக்கு போன் பண்ணச் சொல்லு.”

“கண்டிப்பாண்ணா. சினேகா அண்ணி என்னை மறந்திடாதீங்க” அவளது கைகளைக் கோர்த்தபடி தழுதழுத்த குரலில் தேம்பினாள் சுசீலா.

“என்னங்க இது… வீடு இப்படி இருக்கு?” பதறினாள் சினேகா. “அத்தை இல்லையா வீட்டுல? எங்கே போனாங்க…?”

“நீ எங்கே போயிட்டு வர்றே சினேகா?” உள்ளேயிருந்து வந்த ராதா புரியாமல் கேட்டாள்.

“நான் பதில் சொல்றேன். ரெண்டு பேருக்கும் தெரியாத ரகசியங்கள் இருக்கு!” மர்மமாகப் புன்னகைத்தான் துரை. “கடந்த ரெண்டு வாரமா நீங்க ரெண்டு பேருமே இந்த வீட்டுல இல்லை.”

“என்னங்க சொல்றீங்க…? அத்தை எங்கே போனாங்க?”

“சினேகா எங்கே இருந்தா?”

“சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் வாழற வாழ்க்கையோட இன்னொரு இருண்ட பகுதியை சந்திச்சுட்டு வர்றீங்க. சினேகா, அம்மா இந்த ரெண்டு வாரமா முதியோர் விடுதியில இருந்தாங்க!”

சினேகா திகைத்தாள். “என்ன சொல்றீங்க? திருச்சியில இருக்கிற உங்க பெரியம்மா வீட்டுல இருக்கிறதா சொன்னீங்க…”

“அது பொய்! அம்மா, சினேகா என் நண்பன், ஓடிப்போய் திருமணம் செய்துக்கிட்டானே நாசர், அவன் வீட்டுல சுசீலா கூட இருந்தா.”

“என்னடா இதெல்லாம்… ஏன் இப்படிப் பண்ணினே? ஒண்ணுமே புரியலை எங்களுக்கு” ராதா குழம்பினாள்.

துரை நிமிர்ந்து உட்கார்ந்தான். “ஒரு விஷயத்தோட அருமைகளை நாம் எப்போ உணர்றோம் தெரியுமாம்மா? ஒண்ணு, அது இல்லாதப்போ! நமக்குக் கிடைக்காதப்போ! ரெண்டாவது, நமக்குக் கிடைச்சு அதை இழக்கறப்போ! அதாவது தவற விடறப்போ!”

“……………..”

“நீங்க ரெண்டு பேரும் அனுபவிச்சது ரெண்டாவது நிலையை! உறவுகளோட உன்னதத்தை மனசார உணர்ந்திருக்கீங்க. கிடைச்ச உறவுகளை எப்படி தக்க வெச்சுக்கணும்றதை புரிஞ்சுக்கிட்டீங்க! அது இல்லைன்னா எத்தனை துன்பப்பட வேண்டியிருக்கும்ன்னு இனி நான் சொல்லித் தெரியப்போறதில்லை உங்களுக்கு! சரியா?”

“………”

“அதனால, இனி நீங்க ரெண்டு பேரும் பழைய மாதிரி நடந்துக்க மாட்டீங்க. சின்ன சின்ன விஷயங்கள்ல இருந்த கருத்துவேறுபாடுகள் ஒழிஞ்சு, அபிப்ராய பேதங்க மறைஞ்சு விட்டுக்கொடுத்து பெருந்தன்மையா வாழ ஆரம்பிப்பீங்க. தப்பான புரிதல்கள் மறையும்! தவறுகளை சரிப்படுத்தி அனுசரிச்சு ஒத்துமையா நடந்துக்குவீங்க! அதனாலதான் இப்படியொரு தற்காலிகப் பிரிவை, செயற்கையா, போலியா உருவாக்கினேன். இந்தப் பிரிவுக்காக என்னை மன்னிச்சுக்குங்க…” கைகூப்பினான்.

சிறிது நேரம் மெளனம் நிலவியது.

மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்கள்.

2 COMMENTS

  1. மிக யதார்த்தமான நடை ..இயல்பான கதையோட்டம் …அன்பெனும் பேராயுதம் ..சிறுகதை அருமை. சகோதரி நித்யாவுக்கு பாராட்டுக்கள்
    தி.வள்ளி

  2. நித்யா அவர்களின் சிறுகதை சிறப்பாக இருந்தது. உறவுகளின் உணர்வுகளை எளிமையான நடையில் அழகாக சொன்னது அருமை. வாழ்த்துக்கள்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...