எல்லா புகழும் கல்கிக்கே!

எல்லா புகழும் கல்கிக்கே!

மணிரத்னம் Exclusive பேட்டி!

அமரர் கல்கி படைத்த அழியாக் காவியமான பொன்னியின் செல்வனை எழுத்தில் படித்து ரசித்த ரசிகர்களுக்கு, கல்கியின் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்து, உலவவிட்டு திரைப்படமாக அளித்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம். படத்தின் முதல் பாகம் – பி.எஸ். 1 உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதோ, இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது.

இந்த படு பிஸியானத் தருணத்தில், இயக்குனர் மணிரத்னம் கல்கி ஆன்லைன் யூடியூப் சேனலுக்காக பிரத்யேக எக்ஸ்குளூசிவ் பேட்டி அளித்தது எமக்குப் பெருமிதமளித்த நெகிழ்ச்சிகர நிகழ்வு.

அந்த காணொளி நேர்காணலின் பதிவு இதோ கல்கி ஆன்லைன் இணையதள நேயர்களுக்காக...

வணக்கம் மணி சார்! பி.எஸ். 2 ரிலீஸ் ஆகிற இந்த நேரத்துல, ரொம்ப டென்ஷனா இருக்கீங்களா?

“படத்தின் வேலை இன்னமும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அதை முழுசாக முடித்து, சரியான முறையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். இன்று, படம் எடுத்து முடித்தால் மட்டும் போதாது; அதை சரியான முறையில் மார்கெட்டிங் செய்ய வேண்டும். அதற்குத்தான் முக்கியத்துவமே தவிர டென்ஷனுக்கெல்லாம் இப்போது நேரமில்லை.”

உங்களுக்கு முதல் பாகம் வெளியாவதற்கு முன்பு டென்ஷன் இருந்ததா?

“முதல் பாகத்தையும், இரண்டாவது பாகத்தையும் சேர்ந்து ஒரே சமயத்தில் ஷூட்டிங் முடித்தாகிவிட்டது. ஆகவே, இப்போது டென்ஷன் ஆனாலும்  என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. இரண்டு, மூன்று வருடங்கள் ஒர்க் பண்ணி, மிகுந்த கவனத்துடன் எடுத்து முடித்த படம். ஆகவே, அவசரப்பட்டு, எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.”

அமரர் கல்கியின் படைப்புக்களில் ‘மேக்னம் ஓபஸ்’ ஆகக் கருதப்படுவது பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்னத்துக்கும் மேக்னம் ஓபஸ்  பொன்னியின் செல்வன்தான் என்று சொல்லலாமா?

“பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை முழு பெருமைக்கும் உரியவர் கல்கிதான்.”

அது சரிதான். ஆனாலும், திரைவடிவத்தை உங்கள் ‘மேக்னம் ஓபஸ்’ என்று சொல்லலாமில்லையா?

ண்டிப்பாக சொல்லலாம். ஏனென்றால், இந்தக் கதை அத்தனை பிரம்மாண்டமானது. யார் எடுத்திருந்தாலும், இதனை இப்படி ஒரு பெரிய அளவில்தான் எடுக்க முடியும். என்னைப் பொறுத்தவரைக்கும், ஒரு படத்தின்  பிரம்மாண்டம் என்பதை கதைதான் தீர்மானிக்கிறது. பிரம்மாண்டமாக எடுக்கவேண்டும் என்பதற்காக பிரம்மாண்டத்தைத் தேடிப்போக அவசியமில்லை. கதை சின்னக் கதையாக இருந்தால், அதற்கேற்ப எடுக்க வேண்டும். பொன்னியின் செல்வனைப் பொறுத்த வரைக்கும் பெரிய களம். நிறைய கதாபாத்திரங்கள். கல்கி ஐந்து பாகங்களில் எழுதியதை, படத்தின் இரண்டு பாகங்களுக்குள் சுவாரசியமாக, நம்பும்படியாகச் சொல்ல வேண்டும். அதுதான் இங்கே மிகவும் முக்கியம். அதுவேதான் சவாலும்கூட.”

நீங்கள் சந்தித்த அப்படிப்பட்ட சவால்கள் என்னென்ன?

“நிறைய உண்டு. தனித்தனியாக துண்டு துண்டாக கதாபாத்திரங்கள், சம்பவங்களைப் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக படம் சரியாக வரவேண்டும் என்பது ரொம்ப முக்கியம் என நினைத்தோம். படிக்கும்போது நமக்குப் பிடித்த நிறைய காட்சிகள், கதாபாத்திரங்கள் படத்தில் வராமல் போய்விடும்படி நேர்ந்தது. பூங்குழலி, வந்தியத்தேவனை அழைத்துக் கொண்டுபோய் கொள்ளிவாய்ப் பிசாசைக் காட்டுவாங்களே அது சினிமாவுக்காகவே எழுதப்பட்ட காட்சி என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், படத்தின் நீளம் காரணமாக  அதைக் காட்சிப்படுத்த என்னால் முடியவில்லை. இப்படி ஒரு வாசகனாக, பொன்னியின் செல்வனில் நான் ரசித்த பல விஷயங்களைத் திரையில் என்னால் கொண்டுவர முடியவில்லை.

திரைவடிவம் பெறும்போது, கதையில் இல்லாத சில விஷயங்களையும்  சேர்க்கும்படியான நிர்பந்தம் ஏற்பட்டதா?

நிச்சயமாக, உதாரணத்திற்கு,  கதையைப் படிக்கும்போது, குந்தவை, அபாரமான ராஜதந்திரி; கிங் மேக்கர்; சோழ சாம்ராஜ்ஜியத்தின் முதுகெலும்பு என்றெல்லாம் அக்கதையில் வரும் கதாபாத்திரங்களே பல இடங்களிலும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நீளமான கதை. ஏராளமான கேரக்டர்ஸ். எனவே அது சாத்தியமானது. அதனால்,  படிக்கும்போது நமக்குள் குந்தவையைப் பற்றி ஒரு பெரிய பிம்பம் கட்டமைக்கப்படும். ஆனால், அதை நிரூபிக்கும்படியான நிகழ்ச்சிகள் எதுவுமே கதையில் இல்லை.  எனவே, அதற்காக ஒரு காட்சியை உருவாக்க வேண்டி இருக்கிறது. குந்தவை ஒரு சதியை முறியடிப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றால், அது குந்தவையின் ஒட்டுமொத்த கேரக்டரை பவர்ஃபுல்லாக எடுத்துக் காட்டும். எனவே, அது போல சில விஷயங்கள் செய்ய வேண்டி இருந்தது.

பொன்னியின் செல்வன் படத்தை 4டிஎக்ஸ் எஃபெக்ட்டில் பார்த்து ரசிக்கலாம் என்று ஒரு செய்தி பார்த்தோம். அது என்ன 4டிஎக்ஸ் எஃபெக்ட்? ரசிகர்களுக்கு, அது எந்தவிதமான புதிய அனுபவத்தைக் கொடுக்கும்?

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கும் அது பற்றித் தெரியாது. 4டிஎக்ஸ் என்பது இங்கே நம் நாட்டில் இல்லை. அமெரிக்காவில், கனடாவில் இருக்கிறது. அது எப்படி இருக்கும் என யூகிக்க முடிந்தாலும், அதை அனுபவிக்கும்போதுதான் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் எல்லா தரப்பினரது  பாராட்டையும் பெற்றது. உங்களை மிகவும் நெகிழவைத்த பாராட்டு என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலுமா?

ட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவு என்னை மிகவும் நெகிழவைத்தது. புத்தகத்தைப் படித்து ரசித்தது போலவே படத்தையும் மிகவும் ரசித்தார்கள். தங்களுடைய சொந்த வெற்றி போலக் கொண்டாடினார்கள்.

படத்தில் பல நட்சத்திரங்கள் பங்களித்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொரு விதமான இமேஜ் இருக்கிறது. அவர்களின் இமேஜ், கேரக்டர் இரண்டையும் ரொம்ப அழகாக பேலன்ஸ் செய்திருந்தீர்கள்! அது எப்படி சாத்தியமானது?

“பொன்னியின் செல்வன் கதைக்கும் சரி, அதனால் படத்திற்கும் சரி, கேரக்டர்ஸ்தான் முக்கியம். அந்தக் கேரக்டரில் நடிப்பவர்களின் இமேஜ் என்பது அவர் களுடைய பிரச்னை. திரையில் எந்தக் கதாபாத்திரத்தை யாரால் சரியானபடி கொண்டுவர முடியுமோ அவர்களைத்தான் நாங்கள் அணுகினோம். அவர்கள் கல்கியின் நாவலைப் படித்து, ஸ்கிரிப்ட்டைப் படித்து, தங்களுடைய கேரக்டரை சரியானபடி உள்வாங்கி, அதனுடன் வாழ்ந்து, நிறைய உழைத்தார்கள். படப்பிடிப்பின்போது, கோவிட், பொது முடக்கம் என எதிர்பாராத பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆர்டிஸ்ட்டுகள் அனைவரும்   பொன்னியின் செல்வனோடு கூடவே பயணித்தார்கள்.

எந்தக் கதாபாத்திரத்துக்கு யார் என்பதை எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்?

“ஒவ்வொரு காலகட்டத்தில் நாவலைப் படிக்கும்போதும், இதைப் படமாக எடுத்தால், இந்த நடிகர், நடிகை இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நமக்குத் தோன்றும். நடிகரின் புறத்தோற்றம், கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறதா? என்று முக்கியமாக கவனித்து, முடிவு செய்தோம். அதற்கடுத்து, அந்த கேரக்டர் மேல அந்த ஆர்ட்டிஸ்டுக்கு ஒரு பிடிப்பு கொண்டு வந்துவிட்டால் போதும்.

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடிவு செய்தபோது, அதை உலகளாவிய தமிழ் ரசிகர்களுக்காக எடுக்க வேண்டும் என நினைத்தீர்களா? பல மொழிகளிலும் ஒரு பான்-இந்தியா படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தீர்களா? உங்கள் பிரைம் டார்கெட் யார்?

“என் முதல் டார்கெட் கல்கிதான். அமரர் கல்கி இருந்திருந்தால், அவருக்கு படத்தைப் போட்டுக் காட்டும்படி இருக்க வேண்டும். அது அவரால் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அதுதான் டார்கெட். நான் அந்தப் புத்தகத்தைப் படித்தபோது, எனக்கு எந்த அளவுக்குச் சந்தோஷம் கொடுத்ததோ, அந்தச்  சந்தோஷத்தைப் படம் பார்க்கிறவர்களுக்குக் கொடுக்கவேண்டும். என்னால் முடிந்த அளவுக்குச் செய்திருக்கிறேன். எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறபடி, நான் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி செய்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க முன் காலத்தில் எடுக்கப்பட்ட பலரது முயற்சிகள் கைகூடாமல் போனாலும், அது உங்களுக்கு இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது. அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி உங்களுக்கு பெரிதும் கை கொடுத்துள்ளது என்று சொல்லலாமா?

“முழுக்க முழுக்க 100% தொழில்நுட்பம் கை கொடுத்தது. இல்லையென்றால் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்போம். படத்தைப் பிரம்மாண்டமாக, நம்பும்படியாக எடுப்பதற்கு தொழில்நுட்பம் ரொம்பவும் உதவியது.  கண்ணெதிரே கதை நடக்கிற உணர்வை அது கொடுக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட இடத்தில், காட்சியில் தொழில்நுட்பம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் திணறிப் போயிருப்போம்’  என்று எப்போதாவது உணர்ந்தீர்களா?

“ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் இந்தப் படத்தை எடுத்திருந்தால், ஊர் ஊராக அலைந்து டெலிபோன் கம்பம், மின்சாரக் கம்பம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, அங்கே மட்டுமே படம் பிடித்திருக்க வேண்டும். (அது போல ஒரு இடம் எளிதில் கிடைக்குமா என்பது வேறு விஷயம்) இப்போது அந்தக் கவலையே இல்லாமல், எந்த ஒரு தேவையான இடத்திலும் படம் பிடித்துவிட்டு, ஃப்ரேமில் தேவையில்லாதவற்றை நீக்கிவிட முடியும்.

இன்னொரு விஷயம். இப்போது பொன்னியின் செல்வன் கதைக்கு ஏற்ற பழைய காலத்து அரண்மனை, கோட்டை எதுவும் தமிழ்நாட்டில் இல்லை. அந்தக் காட்சிகளை எடுக்க வேண்டுமென்றால், எல்லாவற்றுக்குமே செட்கள் போட வேண்டி இருக்கும். அதில் ஒரு நிஜத்துவம் இருக்காது. செயற்கையாக இருக்கும்.

ஆனால், இப்போது எங்களால் ஒரு நிஜமான அரண்மனை, கோட்டைக்குப் போய், படம் பிடித்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக அதன் ஆர்க்கிடெக்சரை தமிழ்நாட்டு சோழர் காலத்துக்கு ஏற்ப மாற்ற முடிந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இது சாத்தியப் பட்டிருக்காது.

அப்படியென்றால் டெக்னாலஜி இருக்கும் தைரியத்தில்தான், நீங்கள் உண்மையில் கதை நடக்கிற வீராணம், பழையாறை, கொடும்பாளூர், கோடியக்கரை, அரிசலாற்றங்கரை, இலங்கை போன்ற லொகேஷன்களைத் தவிர்த்துவிட்டு,  தாய்லாந்து, வட இந்தியாவுக்குப் போய் படம் பிடித்டீர்களா?

“கண்டிப்பாக ஆமாம்” (சிரிக்கிறார்)

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் மற்ற படங்களுக்கு ஒர்க் பண்ணியதற்கும், இந்தப் படத்துக்கு ஒர்க் பண்ணியதற்கும் என்ன வித்தியாசம்? பொன்னியின் செல்வனுக்கு, உங்களுக்கு எத்தகைய இசை தேவைப்பட்டது? அவர் அதை எப்படி பூர்த்தி செய்தார்?

“இது போன்ற பத்தாம் நூற்றாண்டு படம் பண்ணும்போது இரண்டு அணுகுமுறை உண்டு. இதற்கு முன்னால் பண்ணின சரித்திரப் படத்தின் இசையைப் பார்க்கணும். இதுவே ஒரிஜினலா என்றால் இல்லை. அது  நவீன கால இசைக்கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் என்றாலும், பழைய காலத்து இசையாகவே  பதிந்துவிட்டது. கர்நாடக இசையை அடிப்படையாக வைத்துக்கொண்டு அது மாதிரியே இசையமைக்கலாம்.

இல்லையென்றால், அதிலிருந்து வெளியில் வந்து, அந்தச் சாயலை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு ஒரு புதுப் பரிமாணம் கொடுத்து, இசையிலும் சரி, காட்சி அமைப்பிலும் சரி ஒரு நிகழ்காலத் தன்மையைக் கொண்டுவரலாம். பத்தாம் நூற்றாண்டின் பிரம்மாண்டத்தையும், உணர்வையும் நவீன காலத்துக்கு ஏற்ப அவர் கொண்டு வந்தார். அந்த வகையில் ரஹ்மான் பெரிய விதத்தில் உதவினார். வெற்றியும் கண்டார்.

பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு, இதைவிட பிரம்மாண்டமாக அடுத்த படம் பண்ண வேண்டும் என்ற பிரஷர் இருக்கிறதா? இல்லை  உங்கள் பாணி கியூட் லவ் ஸ்டோரிகளுக்கு போய்விடுவீர்களா?

“இரண்டும் இல்லை; எந்தக் கதையை அடுத்து நாம் எடுத்துக்கொள்கிறோமோ, அந்தக் கதைக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். பிரம்மாண்டம் என்று தேடிப்போகவேண்டியதில்லை. அதே சமயம், சின்னதாகத்தான் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. பிடித்தாற்போல கதை அமையணும். அதற்கேற்ற மாதிரி படம் எடுக்கணும். அவ்வளவுதான்!”

பொன்னியின் செல்வன் படம் ஆஸ்காருக்கு அனுப்பப்படுமா?

“அது இந்திய அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய விஷயம். பொன்னியின் செல்வன் படத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பதே  மிகப்பெரிய விருதுதான்.”

பொதுவாக, நீங்கள் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்? குறிப்பாக பி.எஸ்.1 பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

“வேறு யாராவது பொன்னியின் செல்வனைப் படமாக எடுத்திருந்தால்,  ஒரு பொன்னியின் செல்வன் ரசிகனாக எனக்கும் சில கருத்துக்கள் தோன்றியிருக்கும். அது போலத்தான் மற்றவர்களும் தங்களுடைய கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கண்ணோட்டம்; விமர்சனம்; ஜட்ஜ்மென்ட் இருக்கிறது. அதுவும் சோஷியல் மீடியா கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் அதைத் தடுக்கவே முடியாது.  ஆனால், அவர்கள் சொல்வதில் எனக்கு எதில் உடன்பாடு இருக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன். உடன்பாடில்லாதவற்றை, ஒதுக்கிவிட்டு என் வேலையைப் பார்த்துக்கொண்டு போவேன்.”

பல்லவி-அனுபல்லவி, மௌனராகம், மணிரத்னம் தொடங்கி  பொன்னியின் செல்வன்  மணிரத்னம் வரையிலான அந்தப் பயணப்பட்ட பாதையைத் திரும்பிப் பார்க்கிறபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

முதல் படம் பண்ணும்போதும் கஷ்டப்பட்டேன். பொன்னியின் செல்வன் பண்ணும்போதும் கஷ்டப்பட்டேன். ஆக, ஒவ்வொரு படம் பண்ணும்போதும், முதல் படம் பண்ணுவது போலவே இருக்கிறது.  நான் பெரிய பாதையில் பயணித்து வரவில்லை; அங்கேயே சுற்றி, சுற்றி வந்துகொண்டிருப்பதாவே எனக்குப் படுகிறது.”

உங்களின் வேறு எந்தப் படத்தையாவது இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் உள்ளதா? உதாரணமாக மௌன ராகம், பம்பாய், ஓகே கண்மணி?

“அது மாதிரி நான் யோசிக்கவில்லை. யோசிச்சாலும், எடுப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. பொன்னியின் செல்வன் கூட இரண்டு பாகம் என்று நான் நினைக்கவில்லை. கல்கி எழுதியது ஒரே கதை. அதை ஆறு மணி நேரத்துக்குப் படமாக எடுத்து, இரண்டு பாகங்களாக ரிலீஸ் பண்ணுகிறோம்.  இதுவரை எடுத்தது எல்லாம், இரண்டரை மணி நேரப் படத்துக்காக யோசித்து, கதை எழுதி, படம் பண்ணியாச்சு! அதை மறுபடியும் இரண்டாம் பாகம் என்று நீட்டித்தால், அது உள்ளே இருந்து உணர்ச்சிபூர்வமாக வராது;  ஜென்யூனாக இருக்காது. வியாபார தந்திரமாகவே தோன்றும்.”

நிறைய பண்ணியாச்சு! நமக்கும் வயசாயிடுச்சு! சினிமாவுல இருந்து ரிடையர் ஆயிடலாமா என்கிற  எண்ணம் வந்திருக்கா?

“யாருக்கு வயசாயிடுச்சு?” (பலமாக சிரிக்கிறார்)

கடைசி கேள்வி… பொன்னியின் செல்வன் தொடர்ச்சி என சில எழுத்தாளர்கள் நாவல்கள் எழுதி இருக்கிறார்கள்.  அந்தக் கோணத்திலிருந்து, பொன்னியின் செல்வன் 3ஆம் பாகத்துக்கு வாய்ப்பு உண்டா?

“கண்டிப்பாக! வேறு யாராவது பண்ணலாம்!: (மீண்டும் பலமான சிரிப்பு) கல்கியே எழுதி இருந்தார் என்றால், எடுப்பதற்கு ரொம்ப  சுலபமாக இருந்திருக்கும். பி.எஸ். 1, 2 பண்ணியாச்சு என்பதற்காக பி.எஸ்.-3 பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்கி எழுதியதற்கு இணையாக, யாராவது எழுதி இருந்தால், அப்படி ஒரு கதை இருந்தால், பண்ணலாம்.

இந்த பேட்டியின் காணொளிப் பதிவுக்கான சுட்டி:

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com